PUBLISHED ON : மே 29, 2017

சலபாசனம்
'சலபம்' என்றால் வெட்டுக்கிளி. இந்த ஆசனத்தில் வெட்டுக்கிளி பறப்பதற்குத் தயாராக இருக்கும் நிலையில் நமது உடலும் இருக்கும். ஆகையால், சலபாசனம் என பெயர் வந்தது.
செய்முறை:
ஆரம்ப நிலை:
• குப்புறப் படுத்துக்கொள்ளவும்.
• கைகளை தலைக்கு மேலே தரையில் நீட்டிக் கொள்ளவும்.
• தாடையை தரையில் வைத்துக் கொள்ளவும்.
• கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
1. முதலில் கைகள் இரண்டையும் உடலுக்கு பக்கவாட்டில் கொண்டு வரவும்.
2. மெதுவாக உடலைத் தூக்கி, கைகளை தொடையும் அடிவயிறும் இணையும் இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
3. மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை முட்டியில் மடக்காமல் தொடையில் இருந்து மேலே தூக்கவும்.
4. கைகள் தரையில் அழுந்தி இருக்கட்டும். ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்க முயற்சி செய்யவும்.
5. பிறகு மூச்சை வெளிவிட்டபடியே கால்களை மெதுவாகக் கீழே இறக்கவும்.
6. பிறகு மகராசனத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கவும்.
பயன்கள்:
1. கால்கள் உறுதி அடைகின்றன.
2. வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் வலுவடைகின்றன.
3. முதுகில் உள்ள தசைகளை உறுதியடையச் செய்கிறது.
4. மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றிலிருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கிறது.
5. உடலின் சமநிலையை அதிகரித்து, புத்துயிர் அளித்து பொறுமையை அதிகரிக்கிறது.
- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்
