PUBLISHED ON : மே 29, 2017

கல்வி, அறிவு போன்றவற்றை பல்வேறு வகைகளில் நாம் பெறுகிறோம். பிறர் மூலமாக நிறைய கற்றுக்கொள்கிறோம். அப்படிக் கற்றுக்கொள்கிற நல்ல பழக்கங்கள், நம்மைப் பண்படுத்துகின்றன. பெறுகிற கல்வி அறிவு, கற்றுக்கொள்கிற பிற உதவிகள் போன்றவற்றிற்கு, நாம் நன்றிக்கடன்பட்டவர்களாக ஆகிறோம். நன்றி தெரிவிப்பது என்பது, நல்ல பண்பான பழக்கம். உங்களுக்கு நன்றி உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை, எளிய கேள்வி பதில் மூலமாக அறிந்து கொள்வோம்.
* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன.
* உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை; எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன.
* மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம்.
* அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.
1. உங்கள் பெற்றோர் செய்யும் உதவிகளுக்கு நீங்கள் நன்றி கூறுவீர்களா?
அ) அடிக்கடி நன்றி தெரிவிப்பேன்.
ஆ) எப்போதாவது தெரிவிப்பேன்.
இ) அது பெற்றோரின் கடமைதானே. இதில் நன்றிக்கு என்ன இருக்கிறது?
2. நீங்கள் படிக்கும் பள்ளிக் கட்டடம் மோசமாக சிதிலமடைந்து இருக்கிறது. இதைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?
அ) நம் தலையெழுத்து இதில் படிக்கும்படி ஆனதே.
ஆ) கூடப் படிப்பவர்களுடன் இணைந்து, சின்னச் சின்ன விஷயங்களிலாவது அதைச் சரி செய்ய முயற்சிப்பேன்.
இ) வருங்காலத்தில் ஏதாவது கொஞ்சம் நன்கொடை கொடுத்து சரி செய்யலாம் என்று எண்ணுவேன்.
3. பெற்றோரை, முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
அ) மாதாமாதம் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பி விடுவேன்.
ஆ) அப்படி ஒரு நிலை வராமல் போனால் நல்லது.
இ) அதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை; அப்படி ஒரு நிலையை நான் நினைத்துப் பார்க்கவும் தயாரில்லை.
4. திரைப்படத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது முன்னொரு காலத்தில் உங்களுக்கு உதவிய ஒரு நண்பன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கிறான். என்ன செய்வீர்கள்?
அ) சுருக்கமாக இரண்டு வாக்கியங்கள் பேசிவிட்டு அவசரமாக நகர்ந்து விடுவேன்.
ஆ) அவனையும் திரைப்படத்துக்கு அழைப்பேன்.
இ) அவனைப் பார்க்காதது மாதிரி கடந்து விடுவேன்.
5. இதுவரை வாழ்க்கையில் உங்களுக்கு நிகழ்ந்தவற்றில் எது எதற்கெல்லாம் நன்றி கூற வேண்டும் என்று கேட்டால் உங்கள் விடை என்ன?
அ) அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும்.
ஆ) யோசித்துப் பார்த்தால் ஒரு சில தேறும்.
இ) அப்படி எதுவும் கிடையாது. எனக்குத்தான் பலர் நன்றி சொல்ல வேண்டி இருக்கும்.
6. நாய் ஒரு நன்றியுள்ள பிராணி என்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அ) உண்மைதான். நாமும் அதற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
ஆ) தனக்கு பிஸ்கட்டும், உணவும் வேண்டும் என்பதற்காக, அது வாலாட்டுகிறது. அவ்வளவுதான்.
இ) அதனால்தானே அதை வீட்டில் வளர்க்கிறோம்.
விடைகள்
அ ஆ இ
1 8 4 0
2 0 8 4
3 0 4 8
4 4 8 0
5 8 4 0
* உங்கள் மொத்த மதிப்பெண் 40 லிருந்து 48 வரை என்றால், நன்றி உணர்வு உங்களிடம் நிரம்பி வழிகிறது. நீங்கள் உயர்ந்த மனிதர். பெருமை கொள்ளுங்கள்.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20 லிருந்து 39 வரை என்றால், ஓரளவு நன்றி உணர்வு கொண்டவராக இருக்கிறீர்கள். நன்றியை வெளிப்படுத்த, உங்களிடம் சில மனத் தடைகள் உள்ளன. யோசியுங்கள்.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20 க்கும் குறைவு என்றால், சுயநலவாதியாக இருக்கிறீர்களே. வருங்காலத்தில் உங்களுக்கு நெருக்கமாக யாருமே இல்லாமல் போகலாம். மாற்றிக் கொள்வது நல்லது.
- ஆருத்ரன்
