தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : மே 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

இடி இடிக்கும்போது கேட்கும் சத்தம் எங்கிருந்து உருவாகிறது?

ஆர். அழகுமேகலா, இளங்கலை விலங்கியல் 2ம் ஆண்டு, இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.


மிகு மின்னழுத்தம், மேகத்திலிருந்து நிலத்துக்கு நொடியில் பாய்வதையே மின்னல் என்கிறோம். மேலிருந்து கீழே வந்த அதே பாதையில், எதிர்மின்னேற்றமானது நிலத்திலிருந்து மேகத்துக்குச் செல்லும். இவ்வாறு முன்னும் பின்னும் மின்னேற்றம் செல்லும்போது, அந்த பாதையில் உள்ள காற்று 27,000 C°க்கு மேல் வெப்பமடையும்; மேலும் அழுத்தமடையும்.

இயல்பை விட பத்திலிருந்து நூறு மடங்கு வரை அழுத்தமடைந்த வெப்பக்காற்று, 'சடார்' என விரிவடைய வேண்டும். அவ்வாறு விரிவடைய போதிய காலஅவகாசம் இல்லாததால் அதிர்வலைகள் ஏற்படும். இதுவே இடிச் சத்தமாக நமக்குக் கேட்கிறது.

காற்றில் சத்தம் நொடிக்கு 300 மீட்டர் தூரம்வரை செல்லும். எனவே மின்னல் வந்த பிறகு இடிச் சத்தம் வர எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை அளந்து, நொடிக்கு 300 மீட்டர் எனக் கணக்கிட்டால் எவ்வளவு தொலைவில் அந்த மின்னல் ஏற்பட்டுள்ளது என அறியலாம்.

சூரியனைப் பார்த்தால் தும்மல் வருகிறது என்று சிலர் கூறுகிறார்களே, அது ஏன்?

எஸ்.நவீன், பொறியியல் முதலாண்டு, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.


பெரும்பாலும், தூசு இருக்கும் இடத்தில் தும்மல் வரும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், சூரியன் அல்லது பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும்போதும், சிலருக்கு தும்மல் ஏற்படும். அந்தத் தும்மலை 'ஃபோட்டிக் ஸ்னீஸிங்' (Photic Sneezing) என்று கூறுகின்றனர். இது ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

அதுபோல, நாம் ஒவ்வொருவரும், ஒரே மாதிரி தும்முவது கிடையாது. சிலர் தும்மினால் சத்தம் வராது, சிலர் தும்மினால் இடி இடிப்பதுபோல சத்தம் வரும். இப்படி விதவிதமாக தும்மல் ஏற்படுவதற்கு காரணம், நமது உடல்வாகு, தசைகளின் கட்டமைப்பு, சுவாசக் குழாய் போன்றவைதான்.

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்று, வாய், மூக்கு வழியாக வெளிப்படுவதாகும். மூக்கில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது நமைச்சல் ஏற்பட்டாலோ ஏற்படும் நிகழ்வுதான் தும்மல். சிலசமயங்களில் குறிப்பிட்ட உணவு, சுற்றுப்புற ஒவ்வாமைகள் போன்றவற்றாலும்கூட தும்மல் வரும். இதனை Autosomal Dominant Compulsive Helio-Ophthalmic Outbursts Of Sneezing அல்லது ACHOO என அழைக்கின்றனர். சூரியனைப் பார்த்தால் வரும் தும்மல் ஏன் ஏற்படுகிறது என்பது, இன்னும் முழுமையாக விளங்காத அறிவியல் புதிராகவே இருக்கிறது.

எரிகல் என்றால் என்ன? அது பூமி மீது விழக் காரணம் என்ன?

கு.நாகலட்சுமி, 10ம் வகுப்பு, ஆச்சாரியா சிக்ஷா மந்திர், வில்லியனூர், புதுச்சேரி.


புதிய கட்டடம் கட்டப்பட்ட பகுதியில், அங்கே இங்கே உடைந்த செங்கல், கொஞ்சம் சிமென்ட், பெயின்ட் டப்பா எல்லாம் இறைந்து கிடக்கும். அதுபோல சூரிய மண்டலத்தில், கோடிக்கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. சூரியன் உருவாகி அதனுடன் கோள்கள் உருவானபோது, மிஞ்சிய பொருட்கள்தான் இவை. சூரியக் குடும்பத்தில் கோள்களுக்கு இடையில், சூரியனைச் சுற்றி இவை வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சில மில்லிமீட்டர் அளவுள்ள நுண்மணல் துகள் முதல், பல கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பாறைவரை, விண்வெளியில் பல கோடிக்கணக்கான விண்கற்கள் நிரம்பியுள்ளன. சிலசமயம் விண்கற்கள், அதன் பாதையிலிருந்து விலகியோ, தற்செயலாகவோ பூமியோடு மோதும். பூமியின் வளிமண்டலத்தில் உள்ளே நுழையும்போது, உராய்வினால் ஏற்படும் வெப்பத்தில் விண்கல் தீப்பற்றி எரியும்; அதுவே எரிகல். பொதுவாக எல்லா எரிகற்களும் வானிலேயே எரிந்து தீர்ந்துவிடும். சில சமயங்களில் எரிகல்லின் சிறு பகுதி மட்டும் பூமியின் மீது வந்து விழும். விழுந்த இடத்தில் அதிர்வும், பள்ளமும் ஏற்படும்.

மனிதர்களுக்கு இருப்பதுபோல விலங்குகளுக்கும் ரத்தப் பிரிவு, வகை உண்டா?

க.ராஜி, 6ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.


எல்லா விலங்குகளுக்கும் ரத்தப் பிரிவு உண்டு. மனிதரில், A, B, AB, O ஆகிய ரத்தப் பிரிவுகள் பாசிடிவ் (+), நெகடிவ் (-) எனப் பிரிந்து எட்டு ரத்தப் பிரிவுகளைத் தருகின்றன.

சில விலங்குகளின் ரத்தப் பிரிவு எண்ணிக்கை

நாய் - 13 வகை

பூனை - 3 வகை

மாடு - 80 வகை

இதில் வியப்பளிப்பது, ஒட்டகத்தில் ஒரே ஒருவகை ரத்தப் பிரிவுதான்!

குதிரைக்கு A, C, D, K, P, Q, T, U என்கிற எட்டுவகை ரத்தப் பிரிவுகள் உண்டு. விலங்கு மருத்துவர்கள் ரத்த மாற்று சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சையின்போது, இதைக் கவனத்தில் வைத்துத்தான் மருத்துவம் செய்வார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us