PUBLISHED ON : மே 29, 2017

ஒரு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பறவையினம் ஃபிளமிங்கோ. இவை, தூங்கும்போதும் ஒற்றைக் காலில் நீண்டநேரம் நின்றுகொண்டே தூங்கும். இவற்றால், உடலை எப்படி சமன்படுத்த முடிகிறது, தூங்கும்போதும் கீழே விழாமல் எப்படி இருக்க முடிகிறது என்பன போன்ற சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக, அமெரிக்க விஞ்ஞானிகள், உயிரிழந்த ஃபிளமிங்கோ பறவைகளை ஒற்றைக் காலில் நிற்கவைத்து சோதனை செய்தனர்.
அப்போது, உயிரிழந்த பறவை சடலம், எந்த புற உதவியும் இன்றி, அப்படியே ஒற்றைக்கால் நிலையில் நின்றன. அதற்கு, புவியீர்ப்பு விசையோடு இசைந்து காணப்படும் அவற்றின் விசேஷமான உடலமைப்பே காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். தசைகளின் இயக்கம் இல்லாமலேயே ஒற்றைக்காலில் நிற்க முடிவதால், அவற்றால் பெருமளவிலான ஆற்றலை சேமிக்க முடிவதோடு, உடல் வெப்பத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த ஆச்சரியமான முடிவுகள் குறித்து, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
