PUBLISHED ON : மே 02, 2016

நாம் வாழும் பிரபஞ்சம் ரகசியங்களாலும், ஆச்சரியங்களாலும் ஆனது. விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், பால்வெளி (கேலக்ஸி - Galaxy) போன்றவற்றின் படங்களை நாம் அருகிலிருந்து பார்க்கிறோம் என்றால் அதற்குக் காரணமாக இருப்பவை வான் தொலைநோக்கிகள். விண்வெளியில் இருந்து படங்களை எடுத்து அனுப்புகிற வான் தொலைநோக்கிகளில் முக்கியமானது ஹப்பிள் வான் தொலைநோக்கி. நாசாவால் 1990 ஆம் ஆண்டு 'ஹப்பிள்' விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. கடந்த 26 வருடங்களாக பூமிக்கு மேலே விண்வெளியில் பறந்தபடி பிரபஞ்சத்தை ஆராய்ந்து பல அரிய புகைப்படங்களை எடுத்துத் தருகிறது ஹப்பிள் வான் தொலைநோக்கி.
ஒரு பேருந்து அளவிலான ஹப்பிள் பூமியில் இருந்து சுமார் 552 கிலோ மீட்டர் உயரத்தில் நொடிக்கு எட்டு கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது 97 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது. இதன் அனைத்து செயல்களும் சூரிய மின் சக்தியால் நடைபெறுகிறது. புதிய விண்மீன்களையும், பால்வெளியின் நடுவே பிரம்மாண்டமான கருந்துளைகள் (பிளாக் ஹோல்ஸ் - Black Holes) இருப்பதையும் ஹப்பிள் வான் தொலைநோக்கிதான் முதன் முதலில் கண்டறிந்து சொன்னது. ஹப்பிள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் பூமி சுமார் 1300 முதல் 1400 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என விஞ்ஞானிகளால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.
