PUBLISHED ON : செப் 02, 2019

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அமேசான் மழைக்காடு தீக்கிரையாகியுள்ளது. இது பல பழங்குடியினர் வாழும் பகுதி. சுமார் 32,000 ஆண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் முதன்முதலில் மனிதன் குடியேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு 400 பிரிவுகளாகப் பழங்குடியினர் இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினருக்கும் பல்வேறு மொழி, கலாசாரம், நம்பிக்கைகள் உள்ளன. வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்கிறார்கள். காட்டை விட்டால், இவர்களுக்கு வேறு உலகம் தெரியாது.
காட்டைப் பாதுகாக்க, பழங்குடி மக்கள் துணிச்சலோடு வெளிமக்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டனர். “இந்த உலகிற்குக் காடு வேண்டும்; காட்டை அழித்தால் நாங்கள் எங்கே போவோம்” என்ற பழங்குடியினரின் ஒருமித்த குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. யனோமாமி, முரா, பார்டிண்டின் என, பல பழங்குடியினர் பிரேசிலில் வாழ்கின்றனர்.
நியாயம் கேட்போம்!
முரா பழங்குடியினர், பிரேசில் மழைக்காட்டின் ஆதிகுடிகள். இவர்களுடைய வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. காட்டை அழிக்காமல் சிறிய இடத்தில் வாழ்ந்து வந்தவர்கள் முரா மக்கள். இந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: “ஒரு கால்பந்து மைதானம் அளவில் காட்டின் மிகப்பெரிய பரப்பளவை அழித்துவிட்டார்கள். பெரிய பெரிய இயந்திரங்களை வைத்து, பூமியில் ஓட்டை போடுகிறார்கள். எங்களுடைய அமைதி போய்விட்டது” என்றார்.
பார்டிண்டின் மக்களில் பலரும், காட்டுத் தீ சம்பவத்தைத் தொடர்ந்து அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூறியது, ''எங்களால் முன்புபோல் இப்போது சுவாசிக்க முடியவில்லை. எங்களுக்கு எதிராக மிகப்பெரிய அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. முன்பு எப்போதாவது யாராவது வருவார்கள். மரங்களை வெட்டுவார்கள். மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள். ஆனால், இப்போதோ நாள்தோறும் ஆட்கள் வந்து காட்டை நாசம் செய்கிறார்கள்” என்றார்.
''காடுகளைக் காப்பாற்ற உயிரைக் கொடுப்போம், அரசாங்கத்திடம் நியாயம் கேட்போம்'' என்கிறார்கள் ஆதிவாசிகள். இவர்கள், வெளியாட்கள் எவரிடமும் பேச மாட்டார்கள். அவர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால், இனியும் அவர்கள் ஓடி மறைந்தால், இருப்பிடமே போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். தைரியமாக வெளி உலகைச் சந்தித்து ஒருமித்த குரலை எழுப்புகிறார்கள்.
உலகில் எல்லா பகுதிகளிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. போர்னியோ, ஆப்பிரிக்கா காடுகள் என, எல்லாமே அழிந்து வருகின்றன. பிரேசிலில் நடக்கும் அழிப்புக்கு மட்டும் உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம்?
பிரேசில் நாட்டு அரசாங்கம், அதீத சுயநலத்தோடு செயற்படுவதாகப் பார்க்கப்படுவதே காரணம்.
2017 - 2018 வரையிலான காலகட்டத்தில் 73,000 கிலோ சதுர மீட்டர் பரப்பளவு அழிக்கப்பட்டுள்ளது. 1978 முதல் மழைக்காடுகளை விவசாயத்திற்காக அழிக்கலாம் என்ற நிலைப்பாடு அந்த நாட்டில் தோன்றியது. உள்ளூர் மக்களுக்கான உணவுத் தேவைக்காக காடுகளை அழித்து, பயிர்களை உற்பத்தி செய்தார்கள்.
அவர்களுடைய தேவைக்காகச் செய்தபோது, மிகச் சிறிய அளவில் மட்டுமே காட்டை அழித்தார்கள். இதற்கிடையில் கால்நடை வளர்ப்பிற்கும் நிலங்களை உருவாக்கினார்கள்.
ஆசை யாரைவிட்டது? சிறிய அளவில் விவசாயம் செய்தவர்கள், பெரிய அளவில் ஏன் செய்யக்கூடாது என்று யோசித்தார்கள்.
பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கக் கனவு கண்டார்கள். அதற்குப் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் தேவைப்பட்டது. காடு அழிப்பில் அடுத்த நிலைக்கு முன்னேறினார்கள்.
1990இல் இருந்து 2004 வரையான காலகட்டத்தில், கண்மூடித்தனமாக காடு அழிக்கப்பட்டது.
மரங்களை வெட்டி விற்பதற்கும், மேய்ச்சலுக்காக காட்டை அழிப்பதற்கும் அரசாங்கம் எந்தவிதத் தடையையும் விதிக்கவில்லை.
பிரேசிலின் காடு அழிப்பு முயற்சிகளை உலக நாடுகள் உற்றுநோக்கின. பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பரவ ஆரம்பித்ததால், சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பிரேசிலுக்கு அதிக அழுத்தம் கொடுத்தன.
ஆகவே, 2004-2012 வரை காடு அழிப்பு குறைந்துபோனது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், எளிதில் காட்டில் எந்தவித சட்டவிரோதச் செயல்களும் செய்ய முடியவில்லை.
2012க்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. பிரேசிலில் புதிய அரசு, புதிய கொள்கையோடு ஆட்சிக்கு வந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆகவே, பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அழிப்புப் பணி நடந்தது.
விவசாயத்திற்காக மக்கள் பல சமயங்களில் தீயிடுவார்கள். ஆனால், இந்தமுறை இயற்கையோ, செயற்கையோ, கைமீறி தீ பரவியது. காட்டில் தீ வேகமாகப் பரவி, கரும்புகையாக ஆக்கிவிட்டது.
காட்டுகள் அழிப்பு, நீர்ச் சுழற்சியை சீர்குலைத்து விடும். மண் மற்றும் தாவரங்களால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு, ஆண்டு முழுவதும் தண்ணீர் மெதுவாக ஆறுகளுக்கு வந்து சேரும். காடுகள் அழிக்கப்படும்போது, இந்தத் தடைகள் இல்லாததால், நீர் நேரடியாக ஆற்றில் சென்று கலந்து, அங்கே பெருவெள்ளத்தை ஏற்படுத்திவிடும்.
காட்டுத் தீயில் மண்ணின் ஈரப்பதம் போய்விட்டது. பல கோடி ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட காடும், அதன் வளங்களும் மனிதனின் சுயநலத்தால் விழுங்கப்பட்டு வருகின்றன.
கால்நடை வளர்ப்பும் காரணம்
அமேசான் காட்டை அழிக்க முதன்மைக் காரணங்களில் ஒன்று கால்நடைகள். பால் பொருட்களுக்காகவும், இறைச்சிக்காவும் கால்நடைகளை வளர்க்கும் முயற்சிகள் அதிகரித்திருக்கின்றன.
காட்டின் மொத்த நிலப்பரப்பில் ௧௨ சதவீதம் நிலப்பரப்பு, மாடுகள், ஆடுகள் போன்ற இறைச்சிக்கான விலங்குகளை வளர்க்கும் இடமாக மாறிவருகிறது. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகல்காரர்கள் மாடு வளர்ப்பு முறையை அறிமுகம் செய்தார்கள். இன்று பிரேசில், மாடு வளர்ப்பிற்காக பெரும் பரப்பிலான காட்டை அழிக்கத் தயாராக இருக்கிறது.
விவசாயிகளுக்கு எந்தவொரு செலவும் இல்லாமல் வருமானம் கிடைப்பதால், இதை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 23.2 கோடி மாடுகள் அங்கே உள்ளன. ஆனால், மக்கள்தொகையோ வெறும் 21 கோடி மட்டுமே என்பதுதான் இங்கே முரண்.
இரண்டாவது, சோயா பண்ணை, சுமார் 11.6 கோடி டன் சோயாவை பிரேசில் உற்பத்தி செய்கிறது. சோயா பண்ணை அமைப்பவர்கள், கால்நடை வைத்திருப்பவர்களின் இடங்களை கையகப்படுத்துவார்கள். கால்நடைக்காக மரங்கள் வெட்டப்பட்டு, நிலம் சுத்தமாக இருப்பதால், எளிதில் வேலையைத் தொடங்க முடியும். இவர்களால் துரத்தப்பட்டவர்கள், மீண்டும் புதிய இடங்களை நோக்கிச் செல்வார்கள். மற்றொரு பெரிய பரப்பளவு காடு அழிக்கப்படும்.அதையடுத்து, பணப்பயிர்கள், வளர்ச்சித் திட்டங்கள், சுரங்கம் அமைத்தல் என, பல காரணங்களுக்காக காடுகளே இல்லாமல் போகும் நிலை வந்துவிட்டது. காட்டுத்தீ பெரும்பாலும் விவசாயிகள் உண்டாக்குவதுதான் முதலில் விளைநிலங்களுக்காகத் தீயிடுவார்கள்.
இப்போது, காட்டுத் தீயால், அங்கு ஏராளமான மரங்கள், உயிரினங்கள், மக்கள் என, காட்டைச் சார்ந்து இருந்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தமுறை பிரேசில் மட்டுமல்ல; பல நாடுகளும் விளைவுகளைச் சந்தித்துள்ளன. காடுகளை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், அழிப்பதற்கு நாட்களோ மாதங்களோ போதும்!
அமேசான் காட்டில் வாழும் உயிரின வகைகள்
20,00,000 - பூச்சி இனங்கள்
40,000 - தாவரங்கள்
> 3600 - சிலந்திகள்
1300 - பறவைகள்
> 1000 - தவளைகள்
450 - ஊர்வன
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் 60%
உலகில் ஐந்தாவது பெரிய நாடு, தென் அமெரிக்காவின் முதல் பெரிய நாடு
400 பழங்குடிப் பிரிவுகள்
10,00,000 பழங்குடி மக்கள் தொகை
180 * பழங்குடி மொழிகள்
தோராயமாக
74,155 2019 ஆகஸ்ட் வரை நடந்த காட்டுத்தீ எண்ணிக்கை
> 1145 ச.கீ.மீ. 2019 ஆகஸ்ட் வரை அழிக்கப்பட்ட பரப்பளவு
4.5 கோடி ஹெக்டேர் பிரேசில் - கால்நடை பண்ணைகளின் மொத்த பரப்பளவு
2.5 கோடி ஹெக்டேர் பிரேசில் - சோயா பண்ணைகளின் மொத்த பரப்பளவு
- ரெ. கார்த்திகேயன்
