PUBLISHED ON : ஜன 25, 2016

அம்பேத்கர் - B.R.Ambedkar (14.4.1891 - 6.12.1956)
விடுதலைக்கு முந்தைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவ் (Mhow) என்னும் இடத்தில் பிறந்தவர் அம்பேத்கர். சின்ன வயதில் அவர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள், பின்னாளில் அவரைத் தீண்டாமைக்கு எதிரான போராளியாக மாற்றின.
மும்பையில் பள்ளிக் கல்வி கற்றார். பிறகு, நியூயார்க் சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றார். அங்கே பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். அடுத்து, சட்டம் படித்து 'பாரிஸ்டர்' (Barrister) பட்டம் பெற்றார். சட்டக் கல்வியோடு கூடவே, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என பல துறைகளிலும் அறிஞராக விளங்கினார்.
அப்போதைய பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் பெரும் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. அப்போதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். அவரது மறைவுக்குப் பிறகு, 1990ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர் தன் அறிவையும் ஆற்றலையும் சமூக சீர் திருத்தங்களுக்காகவே பயன்படுத்தினார். சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர் என்று சொன்னதும் அம்பேத்கர் பெயர்தான் நம் நினைவில் எழும். அனைவருக்கும் சம நீதி என்பதே அவர் தன் வாழ்நாள் முழுக்க எடுத்து உரைத்த கொள்கையாக இருந்தது.
