PUBLISHED ON : ஜன 25, 2016

சென்ற இதழில்: கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ ஆகிய சிறுவர் சிறுமிகள் ஒரு மலைப் பிரதேசத்துக்கு டூர் வந்திருக்கிறார்கள். அதில் ஜோ மட்டும், அந்தக் குழுவிலேயே வித்தியாசமாக இருக்கிறான். மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்கிறார்கள். ஜோவின் தங்கை ஷீலு மட்டும் ஜோவுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். பெரிய மழை பெய்வதற்கான அறிகுறி தெரிகிறது. எல்லாரும் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கும்போது, யாருக்கும் தெரியாமல் இருட்டு சூழ்ந்த காட்டுக்குள் நுழைகிறான் ஜோ. அவனை ஒரு ஜோடிக் கண்கள் பின் தொடர்கின்றன.
மேகத்தில் இருந்து புறப்பட்ட மழை, அந்த மலையை நெருங்கியது. சொட்டுச் சொட்டாகவும், கோடு போட்டது போலவும் மழை பெய்வதைப் பார்த்திருப்பீர்கள். இது வேறு மாதிரி இருந்தது. வானம் அளவுக்கு ஒரு பெரிய அண்டாவில் நீரை நிரப்பி, அதைக் கவிழ்த்தது போன்ற மிக மிகக் கனமான மழை! கூடவே, மின்னல், இடி. 'டமார்… டட்டமடமா…' என்று பெரும் சத்தம்.
“ஏய்… மழை வருது ஓடுங்கடா…” என்று கண்ணன் அபாயச் சங்கு ஊதுவது போலக் கத்தினான். அதற்குள், கனத்த தண்ணீர்த் துளிகள், 'தட் தட்' என்று சுட்டிகளின் தலைகளில் மோத ஆரம்பித்தன.
வேகமாகக் காரை நோக்கி ஓடியது சிறுவர் குழாம். மொபைல் போனை கால் சராயின் பைக்குள் பத்திரப்படுத்திய குமார். ஸ்நாக்ஸ் பை, ஃப்ளாஸ்க் எல்லாவற்றையும் துள்ளித் துள்ளிச் சேகரிக்கும் கண்ணனும் ராகினியும். “டிரைவர் அங்கிள் ஹாரன் அடிக்கிறார்டா” என்று குரலில் பரபரப்புக் காட்டிய ரவி…
எல்லாருமாகத் தலை தெறிக்க ஓடினார்கள். காருக்குள் புகுந்தார்கள். இவர்கள் ஓடி வரும்போதே வண்டி உறுமிக்கொண்டு இருந்தது. கதவுகள் அறைந்து சாத்தப்படும் சத்தம் கேட்டதுமே, சீறிப் புறப்பட்டது கார்.
”அப்பாடி… ஜஸ்ட்ல தப்பிச்சுட்டோம்…” என்றான் கண்ணன்.
ஆனால், உண்மையில் அவர்கள் தப்பிக்கவில்லை!
சீறிப் பாய்ந்த கார், கிறீச்சிட்டு, டயரைத் தேய்த்தது. சடன் பிரேக் போட்ட அதிர்ச்சியில் கார், இடப்புறமும் வலப்புறமுமாக நெளிந்தது. சுவர் போல எழும்பி இருந்த மலைப் பகுதியில் சன்னமாக உரசி நின்றது.
டமடம… சடசட… சலசல என்று சத்தங்கள் காதைக் கிழித்தன.
முன்புற ஜன்னலின் ஊடாக ஒரு காட்சி தெரிந்தது.
ஒரு பெரிய காட்டு நாவல் மரம் வேரோடு பெயர்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது.
“ஐயய்யோ…” என்று கத்தினான் குமார்.
“ஏண்டா, கத்துறே? அதான் டிரைவர் அங்கிள் கரெக்டா பிரேக் போட்டாரு இல்ல?” என்றாள் ராகினி.
குமார் காரின் பின்புறக் கண்ணாடியைச் சுட்டிக் காட்டினான். மலை மேல் இருந்து கற்களும் பாறைகளும் உருண்டு வந்துகொண்டிருந்தன. சாலையில் மோதி, துள்ளி எழுந்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்தன. மண்ணும் சேர்ந்து சரிந்து வந்தது. ஒரு பெரிய கல் சரியாக சாலையின் நடுப்பக்கத்தில், எதிலோ முட்டி நின்றது.
“நிலச்சரிவு” என்று அதிர்ச்சியோடு சொன்னார் டிரைவர்.
அப்போது 'வீல்' என்று ஓர் அலறல் சத்தம்.
“டேய்… ஜோவைக் காணோம்டா…” என்று வீறிட்டவள் ராகினி.
“ஷீலு, உங்க அண்…” வாக்கியத்தை முடிக்காமல் கண்ணன் கத்தினான், “அய்யோ… ஷீலுவும் இல்லைடா…”
காரின் வைப்பர், வெறும் கண்ணாடியை, 'விஸ்க் விஸ்க்' என்று துடைத்துக்கொண்டு இருந்தது. மழை ஸ்விட்ச் போட்டது போல நின்றிருந்தது.
எல்லோர் முகத்திலும் பயம் அப்பி இருந்தது. காரில் இருந்து ஒவ்வொருவராக இறங்கினார்கள். கடைசியாக இறங்கிய ராகினி, “ஏய்…” என்று கூக்குரல் கொடுத்தபடியே குமாரைப் பிடித்து இழுத்தாள். ராகினியின் பார்வை போன பக்கம் பார்த்த கண்ணனும் ரவியும் மின்னல் வேகத்தில் காருக்குள் பாய்ந்தார்கள். உள்ளே இருந்தபடி ராகினியையும் குமாரையும் இழுத்துப் போட்டு கதவை அடித்து மூடினார்கள்.
விழுந்து கிடந்த மரத்தின் மீது ஒரு பெரிய மலைப்பாம்பு ஏறி இருந்தது. ஹெட்லைட் எரியும் காரை சில விநாடிகள் பார்த்தது. அப்படியே சாலையைக் கடக்க ஆரம்பித்தது. அந்தக் குளிரில், எல்லோருக்கும் வியர்ப்பது போல் இருந்தது.
“இப்போ என்ன செய்யிறது?” கண்ணன்தான் பலவீனமான குரலில் கேட்டான்.
“கார்ல முன்னாடியோ பின்னாடியோ போக முடியாது. தரை வேற சகதி மாதிரி சரியுது. நல்ல வேளை, பள்ளம் இருக்கிற பக்கமா இல்லாம, மலைப் பக்கத்துல காரை நிறுத்தி இருக்கேன்” என்றார் டிரைவர்.
“ஜோவும் ஷீலுவும் இல்லாமப் போனாக் கொன்னுடுவாங்க. திரும்பியும் மலைக்கே போக வேண்டியதுதான்” என்றாள் ராகினி. மலைப் பாம்பு சாலையைக் கடந்து போன பிறகு அவளது குரலில் பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது. “அதுக்குள்ள ஷீலுவுக்கு போன் போடுவோம்.”
“என் போன்ல சிக்னல் சுத்தமா இல்லை. உன் போனைக் குடு” என்று ரவியை நோக்கிக் கண்ணன் கை நீட்டினான்.
“என் போன்லயும் சிக்னல் இல்லை…”
அந்தப் பகுதி மொத்தத்திலுமே அலைபேசி சிக்னல் இல்லை! காரின் ஹெட்லைட் அணைந்தது. ஏரியா பூராவும் கறுப்பு மையை அப்பியது போல இருள் படர்ந்தது. தலையில் கையை வைத்துக்கொண்டு காரின் மேல் சாய்ந்தார் டிரைவர்.
காட்டின் இன்னொரு பகுதி.
“இப்பிடிப் பண்ணிட்டியே… உன்னை ஃபாலோ பண்ணி நான் வந்தேன். மழை திடீர்னு இந்த அளவுக்குப் பெய்யும்னு நான் நினைக்கவே இல்லை. அவங்க எல்லாம் நம்மளைத் தேடி, எவ்வளவு கவலைப்படுவாங்க…? என்று ஜோவைத் திட்டுவது போலப் பேசிக்கொண்டு இருந்தாள் ஷீலு.
ஜோவின் முகத்தில் கொஞ்சம் கூடக் கவலையே இல்லை. “அந்த கிர்ர்ர்ர் சத்தம் உனக்குக் கேட்குதா, ஷீலுக் குட்டி?” என்றான்.
அவன் கேட்டு முடிப்பதற்குள், அந்தக் குரங்கு 'கிர்ர்ர்ர்', 'உர்ர்ர்ர்' என்ற சத்தத்தோடு ஜோவின் மீது பாய்ந்தது. சாயந்திரம் ஜோவைப் பார்த்துச் சிரித்த அதே குரங்கு!
அனிச்சைச் செயலாகக் குரங்கைத் தட்டிவிட்டான் ஜோ.
கீழே விழுந்த குரங்கு, புரண்டு எழுந்து, ஜோவின் காலை இரண்டு கைகளாலும் கட்டிப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது.
ஷீலு அலறினாள்.
(தொடரும்)
ரமேஷ் வைத்யா
