PUBLISHED ON : ஜன 25, 2016

புத்தகத்தில் படிப்பது போலவே கணினியிலும் படிக்கவேண்டி இருக்கிறது. மேல் வகுப்புகளுக்குப் போகப்போக கணினியை அதிகம் பயன்படுத்தவேண்டி இருக்கும். கணினி அவசியம்தான், அதற்காகக் கண்ணைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. கணினியை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' (Computer Vision Syndrome) என்ற பாதிப்பு ஏற்படுகிறது.
கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், கண் உலர்தல், கண்ணைச் சுற்றி வீக்கம், கண் உறுத்தல் ஆகியவை விஷன் சிண்ட்ரோமின் அறிகுறிகள். குறிப்பிட்ட இடைவெளியில் கண் சிமிட்டுவது அவசியம். இந்த இடைவெளி குறையும்போது, மேலே சொன்ன கோளாறுகள் உருவாகின்றன.
கண் இமைக்காமல் இருந்தால், கண்ணீர் சுரப்பது குறைகிறது. கண் ஈரம் ஆவது தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும் கண்ணீர் வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண்ணில் வறட்சி ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். தூங்கும் நேரம் தவிர, ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் முறை கண் சிமிட்ட வேண்டும்.
