மேலோட்டமாக ஒரு பொருளும், உற்று நோக்கினால் வேறு பொருளும் வரும்படி, ரசித்து பாடல்கள் எழுதினார்கள் புலவர்கள். காளமேகப்புலவர், கம்பர், ஔவையார் என, பலர் இப்படி பாடல் புனைவதில், திறமையானவர்கள். இந்த வகையில், கம்பர் எழுதிய பாடல்களில் ஒன்று:
வெற்றிபுனை தாதகிக்கும் வேம்புக்கும் பெண்ணைக்கும்
சுற்றும் பெருநிழலாய்த் தோன்றுமே- கற்றோர்
திறந்தாங்கும் மன்னு செகந் தாங்கும் எண்ணில்
அறந்தாங்குந் தொண்டை யரசு
இந்தப் பாடலின் பொருள், தாதகி மரம் (திருவாத்தி), பெண்ணை மரம் (பனை), வேம்பு ஆகியவற்றுக்கு நிழல்போல், அரச மரம் நிற்கிறது என்பதே. இதில் வேறு ஒரு பொருள் மறைந்திருக்கிறது.
அந்தக் காலத்தில், மன்னர்கள் தங்களுக்கென்று, ஒரு மரத்தை அடையாளமாக வைத்திருந்தார்கள். திருவாத்தி மரத்தை கொடியில் வைத்திருந்த சோழ அரசன், பனை மரத்தை சின்னமாக வைத்திருந்த சேர அரசன், வேப்ப மரத்தை கொடியில் வைத்திருந்த பாண்டிய அரசன், இந்த மூவருக்கும் அரணாக வட புலத்தில் இருந்து எதிரிகள் வராமல் பாதுகாவலாக இருப்பது, தொண்டை (தொண்டைக் கொடியையும் குறிக்கும்) அரசனின் அரச மரம்தான்.
இப்படி உட்பொருளை பாடலுக்குள் வைத்தது கம்பரின் கவித்திறமை.