
மணி என்றதும், உடனே நினைவுக்கு வருவது காலத்தின் அளவு. அறுபது நிமிடங்கள் சேர்ந்தது ஒரு மணி நேரம் (One Hour). ஒருநாளை இருபத்து நான்கு மணி நேரங்களாகப் பகுத்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஓர் எண்ணுப்பெயர் வைத்திருக்கிறோம். நள்ளிரவிலிருந்து நாளின் முற்பாதி பன்னிரண்டு மணிநேரங்களும், நடுப்பகலில் இருந்து நாளின் பிற்பாதி பன்னிரண்டு மணி நேரங்களும் கொண்டதுதான் ஒருநாள். 'இப்போது மணி என்ன?' என்று கேட்டால், உரிய நேரத்தைச் சொல்வோம். ஆக, மணி என்பது, இங்கே காலத்தின் அளவைக் குறிக்கும்.
ஒலி எழுப்பும் கருவியையும் குறிக்கும். பள்ளி தொடங்குவதற்கு முன், மணி அடிக்கிறார்கள். ஒவ்வொரு பாட இடைவேளைக்கும் மணி அடிக்கிறார்கள். பள்ளி முடிந்ததும், மணி அடிக்கிறார்கள். கோவில்களில் பூசாரி மணி வைத்திருக்கிறார். மாடுகளின் கழுத்தில் மணி ஒலிக்கிறது. ஆக, மணி என்பதற்கு, 'டண்'ணென்று ஒலியெழுப்பும் கருவி என்பதும் பொருள்.
காரணமாகும் ஒரு கருவி, அதனால் செய்யப்படும் வினைக்கும் பெயராக ஆகிவரும். அதுதான் கருவியாகு பெயர். அதன்படி, மணி என்னும் கருவியால் செய்யப்படும் வினையான 'ஓசை' என்ற பொருளிலும், மணி என்னும் சொல் பயின்றுவரும். 'இப்போது மணி கேட்கிறதே...' என்றால், அது மணியால் தோற்றுவிக்கப்பட்ட 'ஓசையைக்' குறிக்கும்.
நவமணிகள் என்கிறோம். இங்கே மணி என்பது மணிக்கற்கள். கற்களில் விலை உயர்ந்தவை மணிகளாய் அறியப்படுகின்றன. மாணிக்கம், மரகதம், முத்து, பவழம், வைரம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் ஆகிய கற்கள் மணிக்கற்கள் ஆகும். இவை பொதுவாக மணி என்றே அறியப்படும். அரசர்கள் 'அணிமணிகள்' அணிந்திருப்பார்கள். ஆங்கிலத்தில் ஜுவல்லரி எனப்படும் நகைக்கடைக்கு, 'அணிமணி பொற்சாலை' என்பது தமிழ்ப்பெயர்
மணி என்பது, தானியத்தையும் குறிக்கும். நெல் விளைந்தால், அதன் ஒவ்வொரு தானியமும் மணி எனப்படும். 'நெல்மணிகள் விளைந்தன' என்கிறோம்.
உங்கள் கையெழுத்து அழகாக இருந்தால் 'மணிமணியான கையெழுத்து' என்று ஆசிரியர் பாராட்டுவார். இங்கே மணி என்பதற்கு, அழகு என்பது பொருள். அழகான எல்லாவற்றையும் மணி எனலாம். 'மணிக்குருவி, மணிப்புறா' என்று தனியாக ஒன்றுமில்லை. அழகிய குருவியை, அழகிய புறாவை அப்படிக் கூறுகிறோம்.
'உன்னை என் கண்ணின் மணிபோல் போற்றிக் காப்பேன்' என்று தாயார் கூறுகிறார். கண்மணி என்கிறோம். கண்ணுக்குள் மணி இருக்கிறதா? கண்ணுக்குள் உள்ள பாவையைச் சுற்றியிருக்கும் கருவிழியே, மணி எனப்படுகிறது. மணி என்பதற்கு, சிறந்தது, நன்மையானது என்றும் பொருள் கருதலாம். 'மணியான செய்தியொன்றைச் சொன்னான்' என்றால், அங்கே சிறந்ததாய், நன்மையானதாய்ச் சொன்னதாக பொருள் கொள்ள வேண்டும்.
இவை மட்டுமன்றி, மணி என்பதற்கு, ஒளி, சூரியன், நண்டின் கொடுக்கு முனை ஆகியவையும் பொருள்களாகும்.
- மகுடேசுவரன்