PUBLISHED ON : மார் 19, 2018

பிறப்பு: 1822
(இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் )
இறப்பு: 1879
தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஊர் தோறும் சென்று தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களாக்கினார். அவரைப் போலவே, இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் பல நூல்களை பதிப்பித்துள்ளார்.
அதற்காக, தன் வீட்டிலேயே அச்சுக் கூடம் ஒன்றையும் நிறுவினார். அந்த அச்சுக் கூடத்தில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். சைவ சமய நூல்கள் பலவற்றையும் அச்சில் ஏற்றினார்.
இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி போன்ற இலக்கண நூல்களையும் தன் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்.
பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை ஓலைச்சுவடியாக இருக்க, அதை முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலர். சூடாமணி நிகண்டு என்னும் இலக்கண நூலை பதிப்பித்தவரும் இவரே.
அச்சு இயந்திரம் வாங்க 1849-இல் சென்னை வந்த அவருக்கு, திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர் பட்டம்' கொடுத்தது. அன்று முதல் அவர் ஆறுமுக நாவலரானார். உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டைக் கண்ட பரிதிமாற்கலைஞர், 'வசனநடை கைவந்த வல்லாளர்' என்று பாராட்டினார்.
இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே நிலைநாட்டியவர். தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கும், தான் சார்ந்த சைவத்துக்கும் சேவையாற்றியவர் நாவலர்
- நிலவரசன்
