PUBLISHED ON : மார் 19, 2018
கடற்கரையோரம் பலவிதமான மரங்கள் வளர்ந்து உயர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று நாவல் மரம். நாவல் மரத்தின் பழங்கள் கரு நிறத்தில் திரண்டு பழுத்திருந்தன.
பறவை வந்தமர்ந்த அசைவினாலா, அல்லது மெல்லியதாய் வீசிய காற்றினாலா தெரியவில்லை. ஒரு பெரிய நாவற் பழம் கீழே உதிர்கிறது. இதை மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கரு வண்டுகள் பார்த்து விடுகின்றன.
அது இன்னொரு வண்டென்று நம்பிய வண்டுகள், நாவற் பழம் விழுந்த இடத்தில் வந்து சூழ்ந்துகொள்கின்றன.
அருகே ஈரமணற்பரப்பில் உலவிக்கொண்டிருந்தது நண்டொன்று. அது கரு வண்டுகளை பழம் என எண்ணி கவ்வ முற்பட்டது. நண்டைப் பார்த்ததும் வண்டுகள் ரீங்காரமிட்டபடி சத்தம் எழுப்பின. கடற்கரையோரம் மீனுக்காக தவமிருந்த நாரை , இதைப் பார்த்து விட்டு, 'அங்கு ஏதோ சண்டை நடக்கிறது, நாம் போய் சமாதானம் செய்வோம்' என்று கிளம்பியது.
காற்றில் பழம் விழுவது இயற்கை. வண்டுகள் பழமரத்தைச் சுற்றி பறப்பதும் இயற்கை. கடற்கரையோரம் நண்டு, நாரைகள் வசிப்பதும் இயற்கை. இந்த நான்கையும் இணைத்து அழகான பாடலாக்கி இருக்கிறார் அம்மூவனார்.
'பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்
(திரை -அலை)
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி
(புன்கால் - மெல்லிய காம்பு)
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்(தும்பி -வண்டு)
பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து
(பல்கால் அலவன்-பல கால்களை உடைய நண்டு)
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
(பூசல்- சண்டை)
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் (நற்.35)
நற்றிணையில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு அகப்பொருளாக வேறொரு கருத்து உண்டு.. அது தலைவன் தலைவியைப் பற்றியது.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'நற்றிணை', 9 அடிச் சிற்றெல்லையும், 12 அடி பேரெல்லையும் உடையது. 400 பாடல்களைக் கொண்டது பல புலவர்களால் பாடப்பட்டது. அகப்பொருளைக் கொண்டது. நற்றிணை நானூறு என்றும் இதற்குப் பெயருண்டு. பன்னாடு தந்த மாறன் வழுதி இந்நூலை தொகுத்தார்.
நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய துணைபுரிகின்றன.
