
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது வி.ஜி.பி. மெரைன் கிங்டம். நீர்வாழ் உயிரினங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அருங்காட்சியகம் தான் இது.
இங்கே மீன்களை அதன் வாழுமிடத்திற்கு ஏற்ப, தனித்தனியாகப் பிரித்து, அதேபோன்ற உள் அரங்க அமைப்பில் தொட்டிகளை வடிவமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே அனைவரையும் வசீகரிப்பது, நன்னீரில் வாழக்கூடிய மீன் வகைகள். அதையடுத்து, அலையாத்திக்காடுகளில் காணக்கூடிய மீன் வகைகள். அதன் பிறகு கடலின் கரையோரங்களில் வாழும் மீன்களும், கடைசியாக சுரங்கப்பாதை வழியாக ஆழ்கடல் பகுதிகளில் வாழும் மீன்களையும் பார்க்கலாம்.
இங்கே கடலில் மூழ்கிய கப்பல் போன்ற அமைப்பும், பழங்கால கட்டடங்களின் வடிவமைப்பும் பிரமிப்பு தருகிறது. அவற்றின் ஊடாக மீன்கள் நீந்திச்செல்வதைப் பார்க்கும்போது, கடலுக்குள் தான் இருக்கிறோமோ என்ற திகைப்பு ஏற்படுவது நிஜம்.
“நியான் மீன், புலி மீன், திருக்கை, நட்சத்திர மீன், சுறா என சுமார் 85 வகையான மீன்களை இங்கே பார்க்கலாம். சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை மாடலாகக் கொண்டுதான் இதை வடிவமைத்துள்ளோம். இதற்கு மொத்தச் செலவு 115 கோடி ரூபாய். அருங்காட்சியகத்திற்கான கண்ணாடிகள் எல்லாம் ஜெர்மனியில் இருந்தும், பம்புகள் எல்லாம் பின்லாந்தில் இருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து மீன்கள் தருவிக்கப்பட்டுள்ளன. இதைப் பராமரிக்கும் பணியாளர்கள், முன்னமே வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள். சிங்கப்பூர் அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் சுரங்கப்பாதையின் நீளம், 30 மீட்டர். இங்கே இருப்பது அதைவிடப் பெரியது. ஆம்! 70 மீட்டர் நீளம் உடையது.
தற்போது, ரூ.500 கட்டணம் வசூலிக்கிறோம். ஜூன் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்க உள்ளோம். கூடவே இங்கே மாணவர்களுக்கு, மீன்களைப் பற்றி விளக்கிச் சொல்லும் தனி வகுப்பறை ஒன்றையும் விரைவில் உருவாக்கவிருக்கிறோம் ' என்றார் விஜிபி நிறுவன இயக்குநர் ரவிதாஸ்.