PUBLISHED ON : அக் 03, 2016

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஏதாவது ஒரு விசை, பூமியை எதிர்ப்புறமாகவோ அல்லது சுழலாமல் நிறுத்தி வைத்தாலோ பூமிக்கு என்ன ஆகும்?
லோ. ஜெய தர்ஷினி, 9ஆம் வகுப்பு, அக்ஷயா பப்ளிக் பள்ளி, பழனி.
'சுற்றும் பூமி சுற்றாமல் போனால் என்னவாகும்?' என்பது தானே உங்கள் கேள்வி? தன்னைத்தானே சுற்றாமல் இருந்தால், பூமி எனும் கல் பாறைக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது. ஆனால், பகலிரவு எதுவும் ஏற்படாத நிலையில், பூமியின் ஒரு பகுதி மட்டும் சூரியனை நோக்கி இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், சூரியனை நோக்கி இருக்கும் பக்கத்தில் கடும் வெப்பமும், மறு புறத்தில் வெளிச்சம் இல்லாமல் எப்போதும் இரவு ஏற்பட்டு குளிர் நிலவும். காற்றின் சலனம் சூரிய ஆற்றலினால் ஏற்படுகிறது என நாம் அறிவோம், எனவே இப்போது உள்ள காற்று வீசும் போக்குகள் பெருமளவு மாறிவிடும்.
பூமி தன்னைத்தானே சுற்றாமல், சூரியனை சுற்றினால் சூரிய உதயம் ஆண்டுக்கு ஒரு முறை என்றும், மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்றும் ஆகிவிடும். சூரியனை சுற்றும் அதே கால அளவில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டால், பூமியின் ஒரு பக்கம் மட்டுமே சூரியனை பார்த்தபடி இருக்கும்.
எரி வாயு சிலிண்டர் எப்படி தயாரிக்கப்படுகிறது?
ர. ப்ரணவ், 5ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, குல்லிசெட்டிபட்டி.
எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு, உள்ளபடியே பியூட்டேன் மற்றும் புரோப்பேன் ஆகிய வாயுக்களின் கலவை. அழுத்தத்தில் இவை இணைந்து, நீர்ம நிலையை அடையும். பொதுவாக, இந்தியாவில் சமையல் காஸ் சிலிண்டரில் 14.2 கிலோ காஸ் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசின் தரக் கட்டுபாட்டு ஆணைக்கு உட்பட்டு, இந்த சிலிண்டர்கள் தயாரிக்கப்பட வேண்டும். சிலிண்டரின் உள்ளே 65 டிகிரி வெப்பநிலையில் அதிகபட்ச அழுத்தம், காற்றழுத்தத்தைப் போல 16.38293 மடங்கு கூடுதலாக இருக்கும். இந்த அழுத்தத்தைத் தாங்கும் வலிமையுள்ளபடி, குறைந்தபட்சம் 2.53 மி.மீ. தடிமன் கொண்ட சிலிண்டர்கள் தயாரிக்கப்படவேண்டும்.
மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகள், குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை எவ்வாறு கண்டுபிடித்து சரி செய்கின்றன?
சி. வி. ராமசுப்ரமணியன், சென்னை.
நீரில் கரையும் உப்பு, ஆல்கஹாலில் கரையாது; அது போல ஒவ்வொரு மருந்து வேதிப்பொருளும், குறிப்பிட்ட சில வகை செல்களில் உள்ள தனிச் சிறப்பு வாய்ந்த, புரதங்களில் மட்டுமே பிணைந்துகொள்ளும் தன்மை கொண்டிருக்கும்.
நாம் உண்ணும் மருந்தின் வேதிப்பொருள், மற்ற உணவைப் போலத்தான் குடலுக்குள் சென்று, செரிக்கப்பட்டு, அங்கிருந்து கல்லீரலை (Liver) சென்றடையும். அங்கிருந்து மருந்தின் ஒரு பகுதி, ரத்தத்தில் கலக்கும். ரத்தம், உடலின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும்போது, குறிப்பிட்ட உடல் உறுப்பு மட்டுமே அந்த மருந்து வேதிப் பொருளை உறிஞ்சிக்கொள்ளும்.
ஊசி மூலம், நேரடியாக ரத்தத்தில் கலந்தால், மருந்து விரைவாக வேலை செய்யத் தொடங்கும். சில சமயம், குறிப்பிட்ட மருந்து வேதிப் பொருளை உடலின் பல உறுப்புகள் எடுத்துக் கொள்ளலாம். அப்போது, சில சிக்கல்கள் ஏற்படும். சளி மருந்து, சில சமயம் நமக்கு தூக்கத்தை தருவது இவ்வாறுதான். மருந்துக் கலவை அல்லது மாத்திரையாக நாம் விழுங்கும் மருந்து வேதிப் பொருட்கள், நமது உடலின் குறிப்பிட்ட தசை அல்லது குறிப்பிட்ட உறுப்பை அடைந்து, அதை குணப்படுத்துகின்றன. மருந்து உடலில் எப்படி சென்று வேலை செய்கிறது என்கிற மருந்தியக்க தாக்கியலை ஆராயும் துறை 'Pharmacokinetics' (பார்மோகோகிநெடிக்ஸ்) எனப்படும்.
விலங்குகள் பல் தேய்ப்பதில்லை, அப்படியெனில் அவைகளுக்கு பல் சொத்தை ஆகாதா?
சி. யாழினி, 2ஆம் வகுப்பு, ஃபுஸ்கோஸ் பள்ளி, மதுரை.
பல் தேய்க்க சோம்பல் பட்டு அல்ல, அறிவியல் அறிவதற்காகத்தான் இந்த கேள்வியை நீங்கள் கேட்டு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பதில்! ஆம்! பொதுவாக, மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் தினமும் பல் தேய்ப்பது இல்லை; அந்த அவசியமும் இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது அவற்றின் உணவு.
நாம் உண்ணும் உணவு, பெரும்பாலும் சமைத்த அல்லது தயாரிக்கப்பட்ட உணவு. அதில் கார்போ ஹைட்ரேட் எனும் மாவு சத்து கூடுதலாக இருக்கும். மாவு சத்து நிரம்பிய உணவு வாய்க்குள் செல்லும்போது, அங்கு உள்ள ப்ரோட்டியோபாக்டீரியா, ஃபிர்மிகியூட், ஃபுசோபாக்டீரியா (Proteobacteria, Firmicutes, Fusobacteria) போன்ற நுண்ணுயிரிகள், உணவை உண்டு சிலவகை அமிலங்களை வெளிப்படுத்தும். அந்த அமிலங்கள்தான் நமது பல்லை சொத்தை ஆக்குகின்றன. அவற்றையும் அந்த நுண்ணுயிரிகளை நீக்கவும்தான் நாம் பல்லை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.
காட்டில் வசிக்கும் விலங்குகள் சமைத்த உணவை உண்பதில்லை. எனவே, அவற்றுக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஆனால், வீட்டு விலங்குகளான நாய் பூனை போன்றவை, நாம் சமைத்து உண்ணும் உணவைவே பெரும்பாலும் சாப்பிட்டு வளர்கின்றன. எனவே, இவற்றுக்கு பல் தேய்த்து விடுவது அவசியம்!
மேலும், மனிதனை ஒப்பிடும்போது பல விலங்குகளின் ஆயுட்காலம் குறைவு. எனவே, மெல்லமெல்ல அவற்றின் பற்கள் சிதைந்து போனாலும், பல் முற்றிலும் பயன்படாமல் போவதற்குள் அவை மரணம் அடைந்துவிடும்.
நமக்கு முதலில் முளைக்கும் பால் பற்கள், விழுந்து புதிய பல் முளைக்கின்றன அல்லவா? அதுபோல, சில விலங்குகளுக்கும் இரண்டு தடவை, அல்லது பல முறை புதிய பற்கள் முளைக்கும். சுறா மீன் மற்றும் சில வகை முதலைகளுக்கு, சில சமயம் நாற்பது தடவை கூட, புதிய பற்கள் முளைக்கும். அதாவது கெட்டுப்போன பல்லை வெளியே துப்பி, அவை புதிய பற்களை வளர்த்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை. ஒரு வகை முதலை, தனது வாழ்நாளில் சுமார் 35,000 பற்களை உருவாக்கிக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நமக்கு முடி மற்றும் நகம் வளர்வது போல, எலி போன்ற விலங்குகளுக்கு தேய்ந்து போகும் பல் வளர்ந்துகொண்டே இருக்கும். மேலும், நார் சத்து உள்ள புல் முதலியவற்றை, பல்லில் சவைத்து உண்ணுவது ஒரு வகையில் பல் தேய்ப்பதற்கு சமம். புலி போன்ற விலங்குகளின் எச்சில், கூடுதல் காரத்தன்மை கொண்டது. எனவே நுண்ணுயிரிகள் உருவாக்கும் அமிலம், கூடுதல் காரத்தன்மையில் சமன்பட்டு பல் சொத்தை ஏற்படாது.
