தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

நாமும் விலங்கினம்தானே! நமக்கு ஏன் வால் இல்லை. பரிணாம வளர்ச்சியில் வால் இல்லாமல் போகக் காரணம் என்ன?

மு.பிரவீன் குமார், 5ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, விருதுநகர்.


'வால் இல்லாமல் வால்தனம் செய்யும் நமக்கு, எதற்கு வால் என வால் போய்விட்டது' என்று வேடிக்கையாகச் சொன்னாலும், எப்படி, எப்போது வால் மறைந்தது என்பது, இன்னமும் அறிவியல் புதிர்தான்.

படிநிலை பரிணாம வளர்ச்சியில், நமக்கு நெருங்கிய உறவினரான மனிதக் குரங்குக்கு வால் இல்லை. எனவே, மனிதன் பிறக்கும் முன்னர் இருந்த பொதுவான மூதாதையருக்கும் (common ancestor) வால் இருக்கவில்லை.

நவீன குரங்குகள் போன்ற மற்ற விலங்குகளுக்கு வால் உள்ளது. அவற்றுக்கும் மனிதனுக்கும் பொதுவான மூதாதையரிடம் வால் இருந்திருக்க வேண்டும். எப்படி அதிலிருந்து மனிதன் உட்பட வாலில்லா குரங்கு வகைகள் உருவாயின என்பது இன்னமும் தெளிவாகவில்லை. நான்கு கால்களில் நடக்கும்போதும், மரத்துக்கு மரம் தாவும்போதும் தம்மை சமன்செய்து நிலைப்படுத்த வால் உதவுகிறது. இரண்டு கால்களால் நடக்கும்போது, வால் இடறிக் கீழே விழும் வாய்ப்புதான் அதிகம். எனவே, இரண்டு கால்களில் நடக்கும் தன்மை உருவானபோது, வால் அழிந்தது எனக் கருதுகிறார்கள். நமது மூதாதையருக்கு வால் இருந்ததன் அடையாளமாக, நமது முதுகெலும்பின் கடைசியில், வால் போன்ற சாயல் அமைப்பு உள்ளது என்பதோடு, தாயின் வயிற்றில் குழந்தை உருவாகும்போது, வால்போன்ற அமைப்பும் காணப்படுகிறது.

அண்டவெளியில் 500க்கும் மேற்பட்ட சூரியன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதனுடைய வெப்பம் பூமிக்கு வந்தால், நம்மால் தாங்க முடியுமா?

அ.உமா மகேஸ்வரி, 7ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.


அண்டவெளியில் 500க்கும் மேற்பட்ட சூரியன்கள் அல்ல; கோடிக்கணக்கான விண்மீன்களே உள்ளன. அவற்றில் சில சூரியனை விடச் சிறியது; நூறில் ஒருபகுதி. சில விண்மீன்கள் சூரியனைப்போல ஆயிரம் மடங்கு பெரியவை. சூரியனிலிருந்து வெப்பம் நேரடியாக பூமிக்கு வராமல், ஒளி போன்ற மின்காந்த அலைகளாக வந்து சேர்கிறது. இந்த ஆற்றலே பூமியில் வெப்பத்தை உருவாக்குகிறது.

தலைகீழ் இருமடி விகித அளவில் மின்காந்த அலைகளின் ஆற்றல் அளவு குறைந்து போகும். அதாவது, இரண்டு மடங்கு தொலைவில் நான்கில் ஒருபகுதியாகவும், மூன்று மடங்கு தொலைவில் ஒன்பதில் ஒருபகுதியாகவும் ஆற்றல் குறைந்து விடும். இவ்வாறு வெகு தொலைவில் உள்ள விண்மீன்களின் ஆற்றல் பூமியை வந்தடையும்போது, வெகுவாகக் குறைந்து போகிறது. மேலும், வான் வெளியில் அங்குமிங்கும் அண்டமேகங்கள் உள்ளன. பூமியில் சூரியஒளியை வளிமண்ட மேகம் மறைப்பது போல, பல கோடி கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அந்த அண்டமேகங்கள், தொலைவில் உள்ள விண்மீன்களின் ஆற்றலைத் தடுத்து நிறுத்திவிடுகின்றன.

சூரியக் கதிர்கள் பல வண்ணங்கள் நிறைந்தது. ஆயினும் அதனுடைய வெளிச்சத்தால் விழும் நிழல் ஏன் கறுப்பாக இருக்கிறது?

பி.ஜானகி, உப்பிலிபாளையம், கோவை.


நிசப்தம் என்பது 'சப்தம் இன்மை'. அது போல, இயற்பியலின்படி கறுப்பு என்பது நிறம் அல்ல; ஒளி இன்மை. எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால், அது வெள்ளையாகப் புலப்படும், சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும்போது, பல வண்ணங்கள் காணப்படும்.

நிழல், ஒளியற்ற இருட்டு, ஒளி பிரதிபலிக்காத விண்வெளி, இவையெல்லாம் கருமைதான் அல்லவா? ஒரு திசையில் ஒளி வீசும்பொழுது, அந்தத் திசையில் ஒளி ஊடுருவாத ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு, நிழல் என்று பெயர். அதாவது ஒளியற்ற பகுதி.

பூமியில் உயிரினங்கள் உருவானது எப்படி?

மு.ராகேஸ்வரி, 4ம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.


சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றியது. ஆனாலும், இதுவரை கிடைத்ததிலேயே மிகப்பழமையான தொல்லுயிர் எச்சம் 370 கோடி ஆண்டுகள் மட்டுமே பழமையானது. இன்றும் வாழ்கிற சைனோபாக்டீரியா எனும் நுண்ணுயிர் வகையைச் சார்ந்தது அந்தத் தொல்லுயிர் எச்சம். சமீபத்தில், 410 கோடி ஆண்டுகள் பழமையான பாறையில் தொல்லுயிர் சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

1924ல் சோவியத் விஞ்ஞானி ஓபரின் என்பவர், இயற்கை உயிர் உருவாக்கக் கொள்கையை முன்வைத்தார். இயல்பில் பூமியில் நடந்த சில வேதியல் நிகழ்வுகளின் தொடர்ச்சியே, முதன்முதல் உயிரிகளின் தோற்றம் என்றார். இதனைத் தொடர்ந்து, 1953ல் ஹரோல்ட் யூரி, ஸ்டான்லி மில்லர் ஆகியோர் இணைந்து, பூமியின் முற்கால நிலையைச் சோதனைக்குழாயில் செயற்கையாக ஏற்படுத்தினார்கள். அதன் வழியாக இயல்பிலேயே உயிர் உருவாகத் தேவையான மூல வேதிப்பொருட்கள் ஏற்படுகின்றனவா என, சோதனை செய்து பார்த்து வெற்றி கண்டனர்.

உயிர் தோன்றியது எப்படி என்பது குறித்த பொது அனுமானங்களை இந்த அறிவியல் பரிசோதனைகள் தந்தாலும், இனியும் நடத்தப்படவேண்டிய மேல்ஆய்வுகள்தான், உயிர் தோன்றியதற்கான பாதையை வெளிச்சமிட்டுக் காட்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us