தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எதிலும் நீங்கள் குற்றம் காண்பவரா?

எதிலும் நீங்கள் குற்றம் காண்பவரா?

எதிலும் நீங்கள் குற்றம் காண்பவரா?


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவரை குறை காணுதலும், குற்றம் கூறுதலும் எல்லோருக்கும் எளிய காரியமாய் இருக்கிறது. அதைவிட அந்தக் குறையை நீக்கும் வழிகளை உணர்த்துவதும், அதற்கான வழியாய் இருத்தலும் சரியானது. எதிலும் விருப்பு வெறுப்பின்றியும், நடுநிலையோடும் சொல்லப்படும் விஷயத்தின் தன்மை உணர்ந்து, அதற்கான கருத்தைக் கூறுவது நல்ல பழக்கம். நீங்கள் எதிலும் குற்றம் காண்பவரா? என்பதை எளிய வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).

* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம்.

* அதற்கு உதவ, எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.

1) அம்மாவின் சமையலில், தொடர்ந்து இரண்டு நாட்களாக உப்பு குறைவாக இருக்கிறது. என்ன செய்வீர்கள்?

அ) இதிலென்ன இருக்கிறது? கொஞ்சம் உப்பை சேர்த்துக் கொண்டால் போகிறது.

ஆ) கடுமையாக விமர்சிப்பேன்.

இ) நகைச்சுவையாக அதை சுட்டிக் காட்டுவேன்.

2) 'இருட்டை இகழ்வதைவிட மெழுகுவத்தியை ஏற்று' என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அ) சரியில்லை. நாம் ஏதாவது செய்தால்தான் விமர்சிக்க வேண்டுமா என்ன?

ஆ) நியாயம்தான். ஆனால் நடைமுறைப்படுத்துவது கஷ்டம்.

இ) சிறப்பான பொன்மொழி என்பதால், முடிந்தவரை பின்பற்றுவேன்.

3) சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டிய பிறகும், நக்கீரர் குற்றம் குற்றமே என்று அவருக்கெதிராக வாதாடிய நிகழ்வைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்? நக்கீரர் செய்தது சரியா?

அ) சொல்லத் தெரியவில்லை. ஆனால் கதை சுவாரசியம்.

ஆ) மிகவும் சரி. யார் செய்தாலும் குற்றம் குற்றம்தானே.

இ) அதெப்படி? கடவுள் என்றவுடன் பணிந்துபோக வேண்டாமா?

4) பல தொலைக்காட்சிகளில் சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

அ) முழுமையாக ரசிப்பேன், மகிழ்வேன்.

ஆ) போட்டியிடுபவர் பாடும்போது தோன்றும் குறைபாடுகள் மனதில் பதியும்.

இ) போட்டியாளர்களின் குறைகள் மட்டுமல்ல; நடுவர்களின் விமர்சனங்கள் முட்டாள்தனமாக்கும்; கோபத்தை ஏற்படுத்தும்.

5) வீடோ, நிலமோ வாங்கும்போது, உங்கள் பெற்றோர் கருப்புப் பணமாகவும் (அதாவது ஆவணப் பத்திரத்தில் குறிப்பிட்டதைவிட அதிகத் தொகையை சட்டமீறலாக அளிப்பது) விற்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதை அறிந்ததும், உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

அ) கருப்புப் பணம் வாங்கத்தான் கூடாது. கொடுக்கும்படி என்றால் பரவாயில்லை.

ஆ) எனக்குப் பிடிக்காது. என் எதிர்ப்பைப் பதிவு செய்வேன்.

இ) அதனாலென்ன? ஊரில் எவ்வளவோ தவறுகள் நடக்கத்தானே செய்கின்றன.

6) உங்களுக்குப் பிடிக்காதவர் பற்றி, நண்பர் புதிதாக சில எதிர்மறைக் கருத்துகளை முன்வைக்கிறார். உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

அ) சந்தோஷமாக இருக்கும். பகைவரின் மீது குற்றச்சாட்டுகள் அதிகமானால் நல்லதுதானே.

ஆ) எனக்கு நேரடியாகத் தெரியாத விஷயங்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்.

இ) 'நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்' என்று கேட்பேன்.

விடைகள்

அ ஆ இ

1 0 8 4

2 8 4 0

3 4 8 0

4 0 4 8

5 4 8 0

6 8 0 4

* உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், குற்றங்களைக் கண்டு கோபப்படுவது நல்லதுதான். ஆனால், ஒரு விஷயம் அற்பமானதா, முக்கியமானதா என்பதை உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி 'பொங்குங்கள்'.

* உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், கண்டும் காணாமல் போவது என்பதைக் கடைப்பிடிக்கிறீர்கள். குறை காண்பதில் தவறில்லை. அந்தக் குறைகளை ஆக்கபூர்வமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

* உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால், எதிலும் நிறைகளைக் காணும் அபூர்வமானவர் நீங்கள். வாழ்த்துகள். ஆனால், கூடவே கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வையும் வளர்த்துக் கொள்வது நல்லது.

- ஆருத்ரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us