PUBLISHED ON : ஜூன் 05, 2017

யோகாசனத்தை கற்க விரும்புபவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
* காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்தது.
* மாலையிலும் செய்யலாம். ஆனால், உணவு உண்டு, மூன்று மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்.
* யோகாசனம் செய்வதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் வேண்டாம்.
* யோகாசனத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், யோகாசனத்துக்கு பின்பு அரை மணி நேரம் கழித்தும் திரவ பானங்களைப் பருகலாம்.
* ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
* உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குருவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்யவும்.
* ஆசனங்கள் செய்யும்போது, ஓர் ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும்.
* ஆசனங்களுக்கிடையில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும், இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.
* ஆசனங்களை மிக இலகுவாகச் செய்ய வேண்டும். உடல் வளைந்து கொடுக்கவில்லை எனில், வலுக்கட்டாயமாகச் செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயன்ற ஆசனங்களையே செய்தல் வேண்டும்.
* ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.
* இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.
* எல்லா ஆசனங்களையும் ஒரே நாளில் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு நாளும், ஒருசில குறிப்பிட்ட ஆசனங்களைச் செய்யலாம்.
* யோகாசனம் என்பது உடற்பயிற்சி அல்ல. அது மனமும் உடலும் இணையும் அற்புதப் புள்ளி. ஒரு யோகாசனத்தைச் செய்து முடித்தபின்னர், அதன் பல்வேறு படிநிலைகளை மனத்தில் மீண்டும் ஓட்டிப் பார்த்து, தியானம் செய்யவேண்டும். இதன்மூலம், மனமும் உடலும் ஒருமுகப்படும்.
* உடலின் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்ளும் போதுதான், நம்முடைய உடல் எப்படிப்பட்ட பொக்கிஷம் என்பது உங்களுக்கு விளங்கும்.

