
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
மொபைல் திரையில் இருக்கும் கொரில்லா (Gorilla) கண்ணாடி எளிதில் உடைவதில்லையே, ஏன்?
ஆர்.சாம், மின்னஞ்சல்.
எளிதில் உடையாமல் இருக்கக் காரணம், அதனுடைய சிறப்பு தயாரிப்புதான். உதாரணத்திற்கு, ஓர் அட்டைப் பெட்டியில் ஐந்து எலுமிச்சம் பழங்களை வையுங்கள். இடம் இருப்பதால், பெட்டிக்குள் அந்தப் பழங்கள் அங்கும் இங்கும் உருண்டு ஓடும். அதே பெட்டிக்குள் அதிகமான எலுமிச்சம் பழங்களை நெருக்கமாக வைத்தால், ஒரு பழம் மற்ற பழங்கள் மீது அழுத்தம் கொடுக்கும். இப்போது, அந்தப் பழங்கள் பெட்டியின் கவசம் போல ஆகிவிடுகின்றன. இதே வழிமுறையில், சுமார் 400°C வெப்பநிலையில் உருகிய நிலையில் இருக்கும் கார அமிலத்தன்மை கொண்ட பொட்டஷியம் உப்பில் கண்ணாடியை முக்கி எடுப்பார்கள்.
அந்தச் சமயத்தில், கண்ணாடியின் மேல்புறத்தில் இருக்கும் சிறிய அளவிலான சோடியம் அயனி அணுக்களுக்குப் பதிலாக, உருவில் பெரிதான பொட்டஷியம் வந்து சேரும். உருவில் பெரிதான பொட்டஷியம் கூடுதல் இடத்தை நிரப்பிவிடுவதால், ஒவ்வொரு அணுவும் மற்ற அணுவை நெருக்கிப் பொதிந்து ஒன்றுடன் ஒன்று பிணைந்து, கண்ணாடியின் மேற்பகுதி உறுதிபெறும். எனவேதான், இந்த முறையில் தயாரிக்கப்படும் கொரில்லா கண்ணாடி, எளிதில் நொறுங்காமலும், கீறல் விழாமலும் உறுதியோடு இருக்கிறது.
வாகனங்களுக்கான ரப்பர் சக்கரங்கள் அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் என்ன?
ஜெ. கோபிநாத், இயந்திரவியல் துறை, தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி, மாமல்லபுரம், சென்னை.
உண்மையில், டயர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரப்பர், பால் வெண்மை நிறம் கொண்டது. ஆரம்பகாலத்தில், தேய்மானத்தைத் தாக்குப் பிடிக்க, கறுப்பாக இருக்கும் புகைக்கரி, பருத்தி நூல் ஆகியவற்றை இதனுடன் கலந்து டயர் தயாரித்து வந்தனர். தற்காலத்தில் 'கார்பன் பிளாக்' எனும் பொருளைச் சேர்க்கின்றனர். ஹைட்ரோகார்பன் பொருட்கள் முழுமையாக எரிந்து போகாத நிலையில், கார்பன் மூலக்கூறுகளின் கூழ்மம் உருவாகும், அதன் பெயரே 'கார்பன் பிளாக்'.
உராய்வு காரணமாக, டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்தி, டயருக்கு நீண்ட ஆயுளைத் தருகிறது. அதேபோல புறஊதாக் கதிர்கள் ரப்பரை எளிதில் சிதைத்து விடாமலும் 'கார்பன் பிளாக்' பாதுகாக்கிறது. எனவேதான், டயர்கள் கறுப்பு நிறத்தில் உள்ளன. ஆயினும் வேடிக்கைக்காகச் சிலர் வண்ண வண்ண நிறங்களில் டயர்களைப் பொருத்திக்கொள்வதுண்டு. அதில் கார்பன் பிளாக் இருந்தாலும், கூடுதலாக நிறமிகளைச் சேர்த்து வேறு நிறங்களில் தயார் செய்துகொள்கிறார்கள்.
கல்லுக்குள் தேரை போன்ற உயிரினங்கள் வாழ்வது உண்மையா? அவை எப்படி உணவின்றி உயிர் வாழ்கின்றன?
ஜி.இந்துமதி, 8ம் வகுப்பு, பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி, நங்கநல்லூர், சென்னை.
'தஞ்சை பெரிய கோவிலைக் கட்டும்போது பார்த்தார்கள்' என்ற கர்ண பரம்பரைக் கதையிலிருந்து தொடங்கி, கல்லுக்குள் தேரையைக் கண்ட கதைகள் பல உண்டு. ஆனாலும், இவற்றைக் கட்டுக்கதை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். புவியியல் ஆய்வாளர்கள் பல ஆயிரமாயிரம் பாறைகளையும் படிமங்களையும் ஆராய்ந்தும், அவர்களில் எவரும் இத்தகைய தேரையைப் பார்த்ததில்லை.
பல உயிரிகள் நீண்ட உறக்கத்தில் ஆழும். அந்தச் சமயத்தில், அவை தமது உடலியக்கங்கள், வளர்ச்சி முதலியவற்றை தற்காலிகமாகக் குறைத்துக்கொண்டு உறக்கநிலைக்குச் சென்றுவிடும். உண்ண உணவும், நீரும் இன்றியே கூட உயிர்வாழும். இதற்கும் பாறைக்குள் தேரை என்கிற கட்டுக்கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள கிரகங்களுக்கு, ஓரிரு ஆண்டுகளில் செல்லக்கூடிய வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?
ம.பத்மநாபன், 10ம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள கிரகங்களுக்கு, ஓரிரு ஆண்டுகளில் செல்லக்கூடிய விண்கலம் என்றால், அது ஒளியின் வேகத்தைவிட வேகமாகச் செல்லவேண்டும். அவ்வாறு செல்வது இன்றைய அறிவியலின்படி சாத்தியமே இல்லை.
பிரபஞ்சத்தில் குறுக்குப்பாதை போலச் செயல்படும் புழுத்துளை (Wormhole) எனும் கருத்து, இயற்பியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அது இரண்டு பரிமாண வெளி. அந்தப் பேப்பரைப் பாதியாக மடித்து, இரண்டையும் ஒன்றை ஒன்று தொடாமல் அருகருகே வைக்கவும். இதில் பேப்பருக்கு இடையே உள்ள இடைவெளி வழியே இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு அதே புள்ளிகளுக்கு இடையே பேப்பர் வழி உள்ள தொலைவைவிடக் குறைவாக இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் 'நான்காம்' பரிமாணம் வழி. மூன்று பரிமாண வெளியின் வளைவுகளைப் பயன்படுத்தி, இரண்டு புள்ளிகளுக்கு இடையே குறுக்குப்பாதை போட்டுவிடலாம் என ஓர் அறிவியல் தத்துவம் சுட்டுகிறது. இது நடைமுறையில் சாத்தியப்பட்டால், பைபாஸ் ரோடு போல விண்வெளியில் இரண்டு புள்ளிகளின் இடையே புழுத்துளை (wormhole) தொடர்பு ஏற்படுத்தி, அதன்வழி பயணம் செய்யலாம். ஆனால், இப்போது உள்ள அறிவியல் நிலையில் இது திரைப்படங்கள், அறிவியல் புதினங்களில் வரும் கற்பனையாக மட்டுமே உள்ளது.