PUBLISHED ON : ஜூன் 19, 2017

பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் (Earthquake - எர்த்குவேக்) என்பர்.
பூமியின் மேற்பரப்பு, மலைகளும் குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் சமவெளிகளும் ஆறுகளும் கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் வண்டல்களாகப் படிகின்றன. இவ்வாறு பல ஆண்டுகளாக வண்டல் படிவுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன. இதனால் கீழேயுள்ள படிவுகள் மேற்படிவுகளால் அழுத்தம் பெற்று இறுகுகின்றன.
வெகுகாலம் கழித்து அழுத்தம் தாங்காமல் அவை வெடிக்கின்றன. படிவுகள் அசைகின்றன. பிளவுண்ட பகுதிகள் ஒன்றன் மீது ஒன்று சரிகின்றன. இதைத்தான் பூகம்பம் என்கிறோம்.
இமயமலை, ஆல்ப்ஸ் போன்ற மலைகள் நிறைந்த பகுதிகளில், பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இப்பகுதிகளிலுள்ள மலைகள், மடிப்பு மலைகள் எனப்படுகின்றன. பல யுகங்களுக்கு முன்னால் இப்பகுதிகளில் குவிந்து, படிவுகள் இறுகிப் பாறையாகின. சுற்றியுள்ள பகுதிகள்அசைய அசைய, இவை மடிந்து உயர்ந்து மலைகளாயின. மலைகளிலுள்ள பாறைப்படிவுகள் வளையும்போது, பிளவுகள் ஏற்பட்டு, பாறைச் சரிவுகள் (பூகம்பங்கள்) அதிகமாக நிகழ்கின்றன.
பூமியின் கீழே எங்கு சரிவோ பிளவோ ஏற்படுகிறதோ, அந்த இடத்திற்கு அதிர்ச்சிக் குவியம் (Focus -- ஃபோகஸ்) எனப் பெயர். பூகம்பத்தின் குவியம் காலநிலைக்கும் இடத்திற்கும் ஏற்ப, 1/2 மைல் ஆழத்திலிருந்து 250 மைல் வரை இருக்கும்.
சாதாரணமாக, பூகம்பங்கள் ஏற்படுவதற்கு முன்பு, புவி அதிர்ச்சிகள் நிகழும். இந்த அதிர்ச்சிகளை 'பூமி அதிர்ச்சி அளவி' (Seismograph -- சீஸ்மோகிராப்) என்னும் கருவியால் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில், பூகம்பம் நின்ற பின்னரும் அதிர்ச்சிகள் ஏற்படலாம். பூமி அதிர்ச்சி அளவியின் உதவியால், பூகம்பம் நிகழப்போவதை அறிந்து, முன்கூட்டியே அறிவித்து சேதங்களைக் குறைக்கலாம்.
- நற்பின்னை