
மலராகத் தெரிவதெல்லாம் மலரல்ல
'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்பது போல, மலர்களைப்போல் தென்படுவது எல்லாம் மலர்கள் அல்ல. பூவைப் போல இவை தென்பட்டாலும், இவை பூவல்ல! மலர்களைப் போன்ற தோற்றமளிக்கும் போலிகள்!
சில செடிகளின் வண்ண இலைகளே, மலர்கள் போல் காட்சியளிக்கும். பூக்காம்பிலை அல்லது காம்பிதழ் பொதுவாக பச்சை நிறத்தில் இருந்தாலும், சில தாவரங்களில் பரிணாம வளர்ச்சியில், இவை வேறு வண்ணத்தில் உருவாகி, பூவிதழைப் போல வண்டுகளையும் பூச்சிகளையும் கவர்ந்திழுக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, குரோட்டன்ஸ் செடிகளில் பலப்பல வண்ணங்களில் தென்படும் பகுதி மாற்றம் அடைந்த இலைகள்தானே தவிரே, உண்மையான மலர்கள் இல்லை. இவை 'பூவடி இலைகள்' (Bracts -- பிராக்ட்ஸ்) என அழைக்கப்படுகின்றன.
அதேபோல காகிதப்பூ எனப்படும் 'போகன்வில்லா' மலர்களில், சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் பூவிதழ் போன்ற தோற்றத்தில் மெல்லிய பேப்பர் போல் காணப்படும் பகுதி, மலர் அல்ல; மாற்றமடைந்த இலைப் பகுதிதான். மாற்றம் அடைந்த இந்த பேப்பர் போன்ற கவசத்தின் உள்ளே, மிகச் சிறிய அளவில் அதன் உண்மையான மலர் இருக்கும்.
மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று மயங்குவதைப் போலவே, சிலசமயம் உண்மையான மலர்களை நம்மால் இனம்காண முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள், புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
எப்பொழுதோ காணப்படும் ஒன்றை அல்லது அரிதான ஒன்றை விளக்கும்போது, 'அத்தி பூத்தாற் போல்' என்று கூறுவது வழக்கம். அத்திப்பழம் உருவாகும் முன்பு, அதன் பூ வெளிப்படையாகத் தெரியாது என்பதால்தான், இந்த சொலவடை. பூ பூக்காமல் காய் ஏது கனி ஏது? அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அவற்றின் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை.
அத்திப்பூ, நுண்ணிய அளவில் மஞ்சரிக் குடத்தின் உட்பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வளரும். 'கேலிக்ஸ்' எனப்படும் இந்த பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே, பூ பாகம் மறைந்து கொள்கின்றன. இதனால், பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு விடுகிறது. காயாகிப் பின் கனியாகிறது. கனி மட்டுமே இலைகளுக்கு மேல் எட்டிப் பார்க்கிறது. எனவே, நமது பார்வைக்குக் கிடைப்பவை, இந்த கனிகள்தான். எனவேதான், அத்தி மரம் பூ பூப்பதில்லை என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது.
அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களை பார்க்க முடியாது. இந்த மரங்களில் கூட நேரடியாய் நமக்கு கிடைப்பவை பழங்கள்தான்.
த.வி.வெங்கடேஸ்வரன்