தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

பச்சை மரத்தின் மீது இடி தாக்கினால் மரம் எவ்வா று தீப்பற்றி எரிகிறது?

பி.கே.பிரியா, 5ஆம் வகுப்பு, சீனிவாசா வித்யாலயா, உடுமலைப்பேட்டை.

மின்னலின் வெப்ப அளவு சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ். இது, சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இவ்வளவு உயர் வெப்பம், நீர்ப்பசை கொண்டமரத்தின் மீது பாயும் போது பல்வேறு விதமான வினைகளை ஏற்படுத்தும்.

மரப்பட்டையின் உட்புறம் சற்றே கூடுதலாக நீர்ப்பசை இருக்கும். அதனூடே இவ்வளவு வெப்பம் பாயும் போதும் நீர்முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும்.

மழையில் நனைந்து வெளிப்புறம் ஈரமாக இருந்தால், மின்னல் நிலத்தை அடைந்துவிடும். அப்போது மரத்துக்குப் பாதிப்பு இருக்காது. சில சமயம் மின்னல் தாக்கும் போது, மரத்தின் உள்ளே உள்ள ஈரப்பசை பொருட்கள் விரிவடைந்து மரமே இரண்டு துண்டுகளாக வெடித்து விடவும் வாய்ப்புண்டு.

பூமி ஒரு பெரிய காந்தம் என்னும் போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை?

க.சஞ்சய் ஸ்ரீநிவாஸ், 8ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை.

சிறிய கிண்ணத்தில் ஆவி பறக்க நீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதுபோல் ஒரு பெரிய அண்டா நீரை வெதுவெதுப்பு ஆகும்வரை சூடாக்குங்கள். கோப்பை நீர்சூடாக எடுத்த நேரத்தை விட பல மடங்கு நேரத்தை அண்டா நீர் சூடாக எடுத்துக்கொள்ளும். ஆயினும் வெதுவெதுப்பு அண்டாவில் உள்ள வெப்ப ஆற்றல், கொதிக்கும் நீர் இருக்கும் கோப்பையை விடப் பல மடங்கு அதிகம்.

அதுபோல், பூமியின் மீது ஒவ்வொரு புள்ளியிலும் காந்தப் புலவீச்சு சுமார் 0.5 காஸ் ஆக இருக்கும். (10,000 காஸ் = 1 டெஸ்லா ) அதுவே, சிறிய சி.டி. ஸ்கேன் கருவியின் காந்தப் புல வீச்சு சுமார் ஒரு டெஸ்லா. அதாவது பூமியின் காந்தப் புல வீச்சை விட சுமார் 20,000 மடங்கு கூடுதல் ஆற்றல் வாய்ந்தது.

ஆக, அண்டா நிறைய இருக்கும் வெதுவெதுப்பு நீரைப் போலவே பூமியின் காந்தப் புலம். மொத்த ஆற்றலையும் கூட்டினால் மிக அதிகம். ஆனால், ஒவ்வொரு புள்ளியிலும் அதன் வீச்சு மிகக்குறைவு. ஆயினும் இரும்பு மீது பூமியின் காந்தப் புல ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஆயினும் அந்தக் காந்த ஈர்ப்பு விசையின் அளவு குறைவு. எனவே, எளிதில் திசை திரும்பும்படி காந்த முள் இருந்தால் மட்டுமே அது வடக்குநோக்கி அமையும். சற்று இறுக்கமாக காந்த முள் இருந்தால், அது வடக்கு நோக்கித் திரும்பாது.

பாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன?

செ.தர்ஷன், 6ஆம் வகுப்பு, ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, மெய்யனூர், சேலம்.

சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு முறை நமது தோல் செல்கள் உதிர்ந்து விடுகின்றன. அறுபது நாளில் பழைய இரத்த செல்கள் எல்லாம் அழிந்து புதிய இரத்த செல்கள் உருவாகின்றன. நமது மூளை செல்களைத் தவிர உடலின் எல்லா உறுப்புகளின் செல்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அது போலவே பாம்புக்கும் அதன் செல்கள் புதுப்பிக்கப்படும். நமது தோலில் அங்கும் இங்கும் உள்ள செல்கள் அகன்று புதிய செல்கள் தோன்றும். எனவே, நாம் இதை உணர்வதில்லை. ஆனால், பாம்பு போன்ற ஊர்வன குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பழைய சட்டையை மாற்றிப் புதுச்சட்டை போடுவதுபோல தனது மேல் தோலை மாற்றிக்கொள்ளும். பாம்பு நீளமாக வளர்வதால், அதன் தோல் விரிவடைந்து கொண்டே போகும். தோல் மேலும் விரிவடைய முடியாத போது, பாம்பு தனது பழைய தோலுக்கு அடியில் புதிய தோலை வளர்த்துக்கொள்ளும்.

புதிய தோல் முழுமையாக வளர்ந்த பின்னர், நீரில் பாம்பு தமது உடலை நனைத்துக் கொள்ளும். அப்போது அதன் மேல் தோல் மற்றும் அடியில் உருவாகியுள்ள புதிய தோலுக்கு இடையே பிணைப்பு அறுபடும். அப்போதுதான் பாம்பு தனது மேல் தோலை உரித்துக் கழற்றிப் போட்டுவிடும்.

ஒளிக்கு நிழல் உண்டா ?

இ.ஆர்.பிரமோத் விக்னேஷ், 9ஆம் வகுப்பு, பாரதி வித்யாலயா சீனியர் பள்ளி, சென்னை.

'மெளனத்துக்கு சத்தம் உண்டா?' என்று கேட்பது போலான கேள்வி இது. மெளனம், நிசப்தம் என்பதெல்லாம் ஒலியின்மையின் தன்மை. ஒலி இல்லாத போதுதான் அதை நிசப்தம் என்போம். அதுபோல் நிழல் என்பது ஒளியின்மையின் (வெளிச்சமில்லாத) தன்மை. விழும் ஒளியை ஏதாவது ஒளிபுகா பொருள் தடுக்கும் போது, அதன் பின்புறம் நிழல் ஏற்படும். ஆக, ஒளி மறைப்பே நிழல்! எனவே, ஒளிக்கு நிழல் ஏற்பட முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us