தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : செப் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

துப்பாக்கியில் சுடும்போது குண்டு எப்படி அதிவேகமாகச் செல்கிறது?

ரா. வசந்தகுமார், 12ஆம் வகுப்பு, கூடக்கோவில் நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை.


ஒரு ஸ்ட்ராவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனையில், சிறிய பேப்பரை குண்டு போல உருட்டிப் பொருத்துங்கள். மறுமுனையை வாயில் வைத்து வேகமாக ஊதுங்கள். பேப்பர் குண்டு வேகமாக வெளிப்படும். அதேபோலத்தான், துப்பாக்கி குண்டும் வேகமாக உந்தப்பட்டு வெளிப்படுகிறது. துப்பாக்கி குழலில் வெடிமருந்து வெடிக்கும்போது விரிவடையும். விரியும் வெப்ப வாயுவின் வழியில் குண்டு ரவை அடைத்துக்கொண்டு இருக்கும். விரியும் வாயு வெளிவர, குண்டு ரவையை வெளியே உந்தித் தள்ளும். அவ்வாறு வெளிப்படும் குண்டு அதிவேகமாக வெளியே செல்கிறது.

பூமிக்கு உயிர் இருக்கிறதா? எவ்வளவு நாட்கள் பூமி இருக்கும்?

ம.ரு. சஞ்சய் ராஜ்குமார், 2ஆம் வகுப்பு, அப்பல்லோ வித்யாஷ்ரம் பள்ளி, பூந்தமல்லி.


உயிர் என்பது உயிரியல் செயல்களுக்கும் உயிரிகளுக்கும் மட்டுமே பொருந்தும். கல், மண், பூமி போன்றவை உயிரற்ற சடப் பொருள்கள். இவற்றுக்கு உயிர் கிடையாது, ஆயினும், இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் தோன்றும்; மறையும். அவ்வாறே, பூமியும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு தோன்றியது. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, முதல் உயிர் பூமியில் தோன்றியது. இன்னும் சுமார் 5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னர், சூரியன் சிவப்பு ராட்சச விண்மீனாக (Red Giant) ஊதிப் பெருக்கும்போது, பெரும்பாலும் பூமி அழிந்துவிடும்.

குத்திய முள்ளை எடுக்க, கை வேகமாகச் செயல்படுகிறது. அப்படியெனில் மூளை செயல்பாட்டின் வேகம் என்ன?

மு. விக்னேஷ், 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி, தேவகோட்டை
.

கண்ணின் அருகே கையை அசைத்தால், கண் இமை தானே மூடுவது அனிச்சை செயல் (Reflex). சைக்கிள் ஓட்டும்போது, எதிரே தென்படும் கல்லைக் கண்டு, தானே சைக்கிளைத் திருப்புவது எதிர் வினை செயல் (Reaction). இரண்டும் ஒன்றல்ல. நாமே ஒரு சோதனை செய்து பார்ப்போம். உங்கள் நண்பரிடம், ஸ்கேல் ஒன்றை அதன் முனையில் பிடிக்கச் சொல்லவும். உங்களது ஒரு கையை, அதன் கீழ் முனையில் பிடிப்பதற்குத் தயாராக வைத்துக் கொள்ளவும். உங்கள் நண்பர் ஸ்கேலை விட்டதும், நீங்கள் பிடிக்க வேண்டும். சரியாகப் பிடிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று பாருங்கள்.

நண்பருக்குப் பதில், நீங்களே உங்களின் ஒரு கையால் ஸ்கேலைப் பிடித்துக்கொண்டு, அதை விட்டதும், மறுகையால் பிடிக்க முயற்சி செய்து பாருங்கள். உடனே பிடிபடும். உங்கள் மறுவினை ஆற்றல் வேகமடையும்.

கீழே விழும் ஒரு பொருளைக் கண்டு, அதனைப் பிடிக்கும் ஒரு சோதனையில் மறுவினை ஆற்ற ஆளுக்கு ஆள் நேரம் வேறுபடும். என்றாலும், பந்தய வீரர்களோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குறைந்தபட்சம் சுமார் 0.203 நொடிகள் தேவைப்பட்டது கண்டறியப்பட்டது. பொதுவாக, ஒளி தூண்டுதலைவிட, ஒலி தூண்டுதலுக்கு நம்மால் வேகமாக வினையாற்ற முடிகிறது என ஆய்வுகள் சுட்டுகின்றன. நாம் ஆற்ற வேண்டிய மறுவினை, மேலும் மேலும் சிக்கல் நிறைந்ததாக ஆகும் போது, எடுக்கும் கால அளவும் கூடுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் தடகள போட்டியில், ஓடுவதற்கு ஆணை கொடுத்த போது, ஓட்டப் பந்தய வீரர்கள் எந்த அளவு விரைவாக ஓட்டத்தைத் துவங்கினர் என ஆய்வு நடத்தினர். ஆண்களில் மிகக் குறைவான கால அவகாசம் 0.109 நொடி. பெண்களில் 0.121 நொடி. இருந்தும் சராசரியாக ஆண் வீரர்கள் 0.166 நொடி தாமதித்தும், பெண் வீரர்கள் 0.189 நொடி தாமதித்தும் ஓட்டத்தைத் துவங்கினார்கள்.

முகம் பார்க்கும் கண்ணாடியை எப்படி தயாரிக்கிறார்கள்?

பா. பிரியதர்ஷினி, 5ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, குல்லிசெட்டிபட்டி.


உலோகங்களை வழுவழுப்பாக செய்யும்போது, அவை பளபளக்கும். முந்தைய காலங்களில், இப்படிப்பட்ட பளபளக்கும் உலோகத் தட்டுகளைத்தான் முகம் பார்க்கும் கண்ணாடிகளாகப் பயன்படுத்தினார்கள். சில சமயம் கண்ணாடி ஜன்னல் முன்னே நாம் நிற்கும் போது, நமது உருவம் பிரதிபலித்து, அரசல் புரசலாக நமக்கே காட்சி தரும் அல்லவா? கண்ணாடியின் மறுபுறத்தில், பிரதிபலிக்கும் தன்மை உடைய ஏதாவது ஒரு பொருளை வைத்தால் முகம் பார்க்கும் கண்ணாடி தயார். மெல்லிய உலோகப் பூச்சை இதற்குப் பயன்படுத்துகின்றனர். மெர்குரி, வெள்ளி போன்றவற்றை முன்பு பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில், அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்தத் தொழில்நுட்பம் 'சில்வரிங்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் எரிச்சலுடன் கண்ணீரும் வருவது ஏன்?

பா. கமலேஷ் லால், 11ஆம் வகுப்பு, சௌந்தரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அயன்புரம்.


எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும், அழ வைக்கும் திறன் உடைய வெங்காயத்தின் சூட்சமம், அதன் செல்களில் பொதிந்துள்ள ப்ரொப்பேன்தயால் ஆக்ஸைடு எனும் வேதிப் பொருளில் அடங்கியுள்ளது. இது எளிதில் ஆவியாகக்கூடியது (Volatile). வெங்காயத்தை வெட்டும்போது, சில செல்கள் சிதைந்து இந்த வேதிப் பொருள் வெளிப்படும். எளிதில் ஆவியாகி உடனே கண்களைச் சென்றடைந்து, எரிச்சல் ஏற்படுத்தி கண்ணீரைத் தூண்டும். வெங்காயத்தை நசுக்கினால் கூடுதல் செல்கள் உடைந்து, இந்த வேதிப் பொருள் அதிகமாக வெளிப்படும். எனவே, தாரைதாரையாக கண்ணீர் வரும். தண்ணீரில் ஊற வைத்து அல்லது வெங்காயம் வெட்டுவதற்கு முன்னர், 10- - 15 நிமிடம் வரை, ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுத்து நறுக்கினால், உறுத்தல் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us