
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஒரு குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) அதனுள் வைக்கப்படும் பொருட்களை எப்படிக் குளிர்விக்கிறது?
R. சரண், 9ஆம் வகுப்பு, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, வெள்ளக்கோவில்.
வாயின் அருகே கையை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாயை நன்றாகத் திறந்து, வாயில் உள்ள காற்றை 'ஹா' என வெளியே ஊதுங்கள். உடலின் வெப்பத்தை வெளிப்டுத்தும் விதமாக, கையில் வந்து படும் காற்று, சூடாக இருப்பதை உணரலாம்.
இப்போது அனுமார் வாய் போல வாயைக் குவித்து வைத்துக் கொள்ளுங்கள். உதடுகளுக்கு இடையே சிறு துளை ஏற்படுத்தி, காற்றை அழுத்தத்துடன் வெளியே உமிழுங்கள். இப்போது கையில் படும் காற்று, 'ஜில்' என்று இருப்பதை உணரலாம்.
சிறு துளை வழியாக வெளிப்பட்டு அழுந்திய காற்று, விரிவடைந்தால் அந்த காற்றின் வெப்ப நிலை குறையும்; ஜில் என்று ஆகிவிடும். இந்தத் தத்துவமே, குளிர்சாதனப்பெட்டி இயங்குவதற்கான இயற்பியல் தத்துவம். சைக்கிள் டியூபிலிருந்து வெளிப்படும் காற்று 'ஜில்' என்று இருப்பதற்கும், இதுவே காரணம்.
குளிர்சாதனப் பெட்டியின் கீழே, கம்ப்ரஸர் (Compressor) எனப்படும் குளிர்விப்பான் இருக்கிறது. குவிந்த வாய், காற்றுக்கு அழுத்தம் தருவது போல, குளிர்விப்பான் வாயுவை அழுத்தும். அதில் இருந்து, சிறிய நுண் குழாய்கள் குளிர்சாதனப் பெட்டிகுள்ளே செல்லும். அங்கே அந்த குழாய்களில் விரியும் வாயு, 'ஜில்' என குளிர்ச்சி அடையும். குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே இருக்கும் வெப்பத்தைக் குளிர்ந்த காற்று உறிஞ்சிக் கொள்ளும். அந்தக் குழாய்கள் பெட்டியின் வெளிப்புறத்தில் வெளிப்படும் போது, காற்று பட்டு வெப்பம் வெளியேறும். இதன் காரணமாகவே பெட்டியின் உள்ளே வெப்பநிலை குறைகிறது.
டிஷ் ஆன்டனாவை மொட்டை மாடியில், வைத்தால்தான் சேனல்கள் தெரியுமா?
வெ. சூர்யா, எலப்பாக்கம், மதுராந்தகம்.
தலைக்கு மேலே பூமியை சுற்றும் செயற்கைக் கோள் அனுப்பும் சிக்னலைத்தான், டிஷ் ஆன்டனா பிடித்து எடுத்து, டிவியில் தருகிறது. செயற்கைக்கோளில் உள்ள சைகை வாங்கியனுப்பி கருவி (Transponder), சுமார் இருபது டிவி சானல்களை ஒரு சேர அனுப்பும். சுமார் 40 அளவில் சிக்னல் வலு இருக்கும்போது, ஓரளவு படம் தெளிவாகத் தெரியும். சீராகவும் தெளிவாகவும் டிவி படம் தெரிய, சிக்னல் வலு குறைந்தபட்சம் 70 ஆக இருப்பது அவசியம். டிவி டிஷ் ஆன்டனாவை மறைக்கும்படி, அடர்ந்த மரங்கள் இருந்தாலோ, பெரிய கட்டடம் இருந்தாலோ சிக்னல் வலு குறைந்து போகும். கனமழை கூட, சிக்னல் வலுவை குறைக்கும். எனவேதான் அதிகபட்ச சிக்னல் வலுவைப் பெற மொட்டை மாடியில் டிஷ் ஆன்டனா வைக்கப்படுகிறது.
குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கி இருக்கிறார்களா? அதில் ஏதேனும் விளைவுகள் வருவதற்கு வாய்ப்புண்டா?
ஜெயலோக இனியன், பொறியியல் முதுநிலை. மின்னஞ்சல்.
மனிதனின் மீது குளோனிங் ஆய்வு இதுவரை தடைசெய்யப்பட்டு இருக்கிறது. அதனால் இதுவரை எந்த ஒரு மனிதனையும் குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடவில்லை. குளோனிங் முறையில் மனிதனை உருவாக்குவது பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்களின் குளோனிங் பிரதியை உருவாக்கி விடுகிறோம் எனக் கொள்வோம்; அவரும் தனியாக படித்து மதிப்பெண் எடுக்க வேண்டுமா அல்லது உங்கள் மதிப்பெண்ணே அவருக்கும் பொருந்துமா? குளோனிங் பிரதி உங்களின் பிள்ளையா, அல்லது சகோதர சகோதரியா? இப்படிப் பல சிக்கல்கள் உள்ளதால், பற்பல சிக்கல்களுக்குத் தெளிவு வரும்வரை இந்த ஆய்வு தடை செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் சூரியன் உதயமாவதையும் மறைவதையும் ஒரே இடத்தில் காண முடிகிறதே! இது எப்படி சாத்தியம்?
க. காவ்யா, ECE முதல் ஆண்டு, V.S.B. பொறியியல் கல்லூரி, கரூர்.
சூரியன் உதயமாவதையும் மறைவதையும் ஒரே இடத்தில் காண கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டியது இல்லை. கிழக்கு மற்றும் மேற்கு திசையில் எந்தத் தடையும் இல்லாத, உயரமான பகுதிக்குச் சென்றால் போதும்; கண்டுவிடலாம். கன்னியாகுமரி முனையில் கிழக்கிலும் மேற்கிலும் கடல் விரிந்துள்ளது. எனவே தடையின்றி சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு காட்சி தென்படும். அவ்வளவுதான்!.

