sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்கள்

/

வெங்கியை கேளுங்கள்

வெங்கியை கேளுங்கள்

வெங்கியை கேளுங்கள்


PUBLISHED ON : நவ 07, 2016

Google News

PUBLISHED ON : நவ 07, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை மீண்டும் எரிபொருளாக்க முடியுமா?

அ.தீக் ஷிதசங்கரி, 7ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி.


படுத்துக்கொண்டு போர்த்தினாலும், போர்த்திக்கொண்டு படுத்தாலும் ஒன்றுதான்! ஆனால், பாட்டிலைக் குலுக்கி மருந்து குடிப்பதும், மருந்து குடித்துவிட்டு நாம் குதிப்பதும் ஒன்றாகாது அல்லவா? அதுபோல, இரண்டு வகை வினைகள் உண்டு.

1. ஆற்றலை விழுங்கும் வினைகள்

2. ஆற்றலை உமிழும் வினைகள்

நீரில் உப்பைக் கலக்க, ஆற்றலை செலவழிக்க வேண்டியது இல்லை. ஆனால், உப்பு நீரிலிருந்து உப்பை பிரித்து எடுக்க, ஆற்றலை செலவழிக்க வேண்டும். வாகனங்கள், சிக்கல் மிகுந்த கார்பன் மூலக்கூறுகளை எரித்து, ஆற்றலை வெளிப்படுத்தும்போதுதான், எளிமையான கார்பன் மோனாக்ஸைடு (CO) வாயு வெளியேறும்.

அதாவது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களில் உள்ள சிக்கல் மிகுந்த கார்பன் மூலக்கூறு உடையும்போது, ஆற்றல் வெளிப்படுகிறது; ஆனால், எளிமையான கார்பன் மூலக்கூறுகளை ஒன்றுசேர்த்து, சிக்கல் மிகுந்த பெட்ரோல் போன்ற கார்பன் மூலக்கூறுகளை உருவாக்க, அதிக ஆற்றல் செலவழிக்க வேண்டியிருக்கும்.

எனவே, அதனை எரிபொருளாக மாற்றுவது எளிதல்ல; என்றாலும், நவீன நானோ தொழில்நுட்பம் மூலம், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, புதுமுறையில் எளிய கார்பன் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து, பெட்ரோல் போன்ற எரிபொருளை உருவாக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன.

குடைகள் பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் தயாரிக்கப்படுவது ஏன்?

பா. கிருத்திகா, 8ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கிணத்துக்கடவு.


* சூரிய ஒளியை கறுப்பு நிறம் உறிஞ்சும்

* தரையின் வெப்பத்தை முகத்தில் பிரதிபலிக்காது

* அழுக்கு பட்டால் எளிதில் தெரியாது

இது போன்ற பல காரணங்களை, பலர் கூறுகிறார்கள்.

வரலாற்றுப் பார்வையில் பார்த்தால், நவீன குடை ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்பு, குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் கண்டுபிடிப்பு. கறுப்பு கோட் - சூட், கனவான்களின் உடை என்ற கருத்தும், அந்தக் காலத்தில் நிலவியது. எப்போதும் மழை பொழியும் இங்கிலாந்தில், எஃகு கொண்டு வலிமையாகவும் எடை குறைவாகவும் தயாரிக்கப்பட்ட குடைகள் கறுப்பு துணியால்தான் முதலில் தயாரிக்கப்பட்டன. எனவே, பெரும்பாலும் கறுப்பு நிறத்தில்தான் குடைகள் இருக்கின்றன என்பதற்கு, மெய்யான 'வரலாறு' அவ்வளவுதான்!

அந்தக் காலத்திலும், பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட குடைகள் பல வண்ணங்களில் இருந்துள்ளன. உதாரணமாக, சீன காகித குடைகள். பண்டைய காலத்தில் அரசர் நகர்வலம் வரும்போதும், சாமி ஊர்வலம் வரும்போதும், அவர்களின் தலைக்கு மேலே 'குடை' பிடிக்கும் பழக்கம் இருந்தது.

பல்லிகளின் வால் துண்டான சில நாட்களிலேயே மீண்டும் வளர்கிறதே எப்படி?

கே.தமிழரசி, 8ம் வகுப்பு, வி.இ.டி. வித்யாமந்திர், காணை, விழுப்புரம்.


ஒரு கிளையை நட்டு வைத்தால் மரம் வளர்ந்துவிடும்! 'ஸ்டார் ஃபிஷ்' எனப்படும் மீனின் கை போன்ற பாகம் துண்டானாலும், அந்த மீன் முழுமையாக மறுபடி வளர்ந்துவிடும். அதுபோல, எதிரியைத் திசை திருப்ப, தமது வாலை வெட்டி விட்டு பல்லிகள் தப்பும். பின்னர் சில நாட்களிலேயே அதன் வால் மறுபடி வளர்ந்துவிடுகிறது.

சமீபத்தில்தான் மரபணு ஆய்வு மேற்கொண்டு, இந்தப் புதிருக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 'பல்லியின் வால் பகுதியில் உள்ள தசையில், 326 மரபணுக்களை முடுக்கி இயங்க வைப்பதன் தொடர்ச்சியாகவே வால் முளைக்கிறது' என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

* காயம்பட்ட இடத்தில் காயத்தை ஆற்றும் மரபணு

* சூல்கொண்ட கரு, முழுமையாக வளர்வதற்குத் தேவையான ஹார்மோன்களை உமிழும் மரபணு என, பல மரபணுக்கள் இதில் அடங்கும். பல்லிகளை ஆய்வுசெய்து, அந்த மரபணுக்கள் அடிப்படையில், செயற்கையாக மனித கை, கால்களை மறுபடி வளரவைக்க முடியுமா என, சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.

ரசவாதம் என்றால் என்ன?

கே. சுதாலட்சுமி, 6ம் வகுப்பு, இந்து மேல்நிலைப் பள்ளி, ஆண்டிப்பட்டி.


ஒரு காலத்தில், இரும்பு போன்ற உலோகத்தை தங்கமாக மாற்றமுடியும் என்று பரவலான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைக்கு, 'ரசவாதம்' என்று பெயர்.

ஆனால், வேதியியல் வினைகள் மூலமாக, ஓர் உலோகத்தை வேறு உலோகமாக மாற்றவே முடியாது. எனினும், இரும்பிலிருந்தும் செம்பிலிருந்தும் தங்கத்தை உருவாக்க, பல முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகள், பல்வேறு வேதி வினைகளையும், வடிதல் முதலிய வேதி முறைகளையும் விஞ்ஞானிகளுக்குக் காட்டியது. ரசவாதம் தேடியதில் கிடைத்த மெய்யான அறிவை அஸ்திவாரமாக வைத்தே, இன்றைய வேதியியல் வளர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us