தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குற்றால அருவியிலே!

குற்றால அருவியிலே!

குற்றால அருவியிலே!


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஞ்சிநாதன் நினைவு தினம் ஜூன் 17

அவர் வாழ்ந்த காலம் - 1886 - 1911

குற்றாலத்தில், சாரலுடன் அருவி விழுந்தோடிக்கொண்டிருந்தது. அருவியில் குளிப்பதற்காக தன் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்தார் கோபால்.

ஆனால் தருண் மட்டும் அடம் பிடித்தான். ''வேணாம்பா நான் குளிக்கலை. எனக்கு சோர்வா இருக்கு'' என்றான்.

கோபால், தோளில் துண்டுடன் அவன் அருகே வந்தார். அவனையும் அந்த அருவியையும் மாறி மாறிப் பார்த்தவர், ''இந்த அருவியில குளிக்க நம்மளை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தடை இருந்துச்சு தெரியுமா?'' என்றார்.

''என்னது, குளிக்கிறதுக்குத் தடையா?'' என்றான் தருண்.

''ஆமா, வெள்ளைக்காரங்க நம்மளை ஆண்டப்ப இருந்துச்சு. அவங்க குளிக்கும்போது இந்தியர்கள் குளிக்கக் கூடாது. மீறினால் ஜெயில்தான். வெள்ளைக்காரங்க உசந்தவங்க, நாம எல்லாம் தாழ்ந்தவங்கங்கிறது அவங்களோட எண்ணம்...''

''இதென்னப்பா அநியாயமா இருக்கு? அருவி எல்லோருக்கும் பொதுதானே! அதுவும் நம்ம அருவியில நாம குளிக்கிறதுக்குத் தடை போட வெள்ளைக்காரங்க யாரு?” என்றான் தருண் கோபமாய்.

''ஊம்! பதினோரு வயசான உனக்கே கோபம் வருது இல்ல! 25 வயசுல இருந்த வாஞ்சிநாதனுக்கும் அப்படித்தான் கோபம் வந்தது. அதுவும் அவர் இதே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் பிறந்தவர்.''

''நானும் படிச்சிருக்கேன். அவர் ஒரு தேச பக்தர். ஆங்கிலேயருக்கு எதிராய் சுதேசி கப்பலை இயக்கிய சிதம்பரனாரை திருநெல்வேலி ஆளுநர் ஆஷ் துரை சிறையில் தள்ளினார். அவரை விடுதலை செய்யச் சொல்லி சுப்பிரமணிய சிவா போராடினதுக்காக அவரையும் பிடிச்சு சித்திரவதை செஞ்சார் ஆஷ்.''

அவர்களின் உரையாடலில் தானும் வந்து கலந்துகொண்டார் தருணின் அம்மா. ''இது மட்டுமா? இன்னும் பல அடக்குமுறைகளை ஆஷ் துரை செய்தார். இந்தியரை அவர் நடத்திய விதம், சிதம்பரனார், சிவா போன்றோரைக் கொடுமைப்படுத்தியது எல்லாம் சேர்ந்து வாஞ்சிநாதனுக்கு அவர் மீது பெரும் கோபத்தை வரவழைத்தது...''

''என்னப்பா செய்தார்?'' என்றான் தருண் ஆர்வம் மேலிட. கூடவே அருவி விழும் அழகை ரசித்துப் பார்க்கத் தொடங்கினான்.

''ஆஷ் தன் மனைவியுடன் கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயில் மணியாச்சி என்னும் ஊரில் நின்றது. ரயில் வருவதற்காகக் காத்திருந்த வாஞ்சிநாதன் ஆஷ் இருந்தப் பெட்டியில் ஏறி அவரை சுட்டு விட்டார்.''

தருணின் முகம் இறுக்கமானது. அவனது மனதைப் படித்தவள் போல அம்மா பேசத் தொடங்கினாள்.

''எதற்குமே வன்முறை தீர்வு ஆகாதுதான். ஆஷ் துரையைக் கொல்ல வேண்டும் என்பது வாஞ்சிநாதனின் நோக்கம் அல்ல. அப்போதிருந்த சூழலில் அவர் அப்படிச் செய்தார். ஆங்கிலேயர்கள் நாடு முழுவதும் நம் மக்களைப் பல்வேறு காரணங்கள் காட்டி தூக்கிலிடுவதும் சுடுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகத்தான் வாஞ்சிநாதன் அப்படிச் செய்தார். பிறகு தனக்கு தண்டனையாக தன்னையே சுட்டுக்கிட்டார்....''

''நாம் நல்லவர்களாகவே இருந்தாலும் சில நேரம் எதிரில் இருப்பவர்கள்தான் நம்முடைய குணத்தை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் வாஞ்சிநாதன் வாழ்வும்....'' சோகம் இழையோட முடித்தார் தருணின் அப்பா.

தருணுக்கு எது புரிந்ததோ இல்லையோ, அருவியில் குளிக்க ஆங்கிலேயர் விதித்த தடை மட்டும் அவன் மனதில் நின்றது. மலையில் இருந்து வெள்ளைத் துணி அசைவது போல இறங்கும் அருவியையும் கீழே உற்சாகமாக நனையும் மனிதர்களையும் பார்த்தான் தருண். இப்போது அவனுக்குக் குளிக்க வேண்டும் போல் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us