தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கலக்கல் பட்டசபை!

கலக்கல் பட்டசபை!

கலக்கல் பட்டசபை!


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பட்டம்' இதழ் சார்பாக நடத்தப்பட்ட 'பட்டசபை' நிகழ்ச்சி, கலகலப்பு, சலசலப்பு, விறுவிறுப்பு என ஏகப்பட்ட உணர்வுகளுடன் ஜூன் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து மாணவர்கள் 'பட்டசபை உறுப்பினர்களாக' சட்டசபை 'செட் அப்'பில் நேரிடையாகவே விவாதம் நடத்த ஒரு வாய்ப்பு!

நிகழ்ச்சி அரங்கமான சென்னை, அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி அரங்கம், மாணவர்களின் பேச்சு, சிரிப்பு என்று களைகட்டி இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என மாணவ 'பட்டசபை' உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாணவ சபாநாயகர் கம்பீரமாக விவாதத்தைத் தொடங்கிவைக்க, எடுத்த எடுப்பிலேயே, கல்வி தொடர்பான பிரச்னைகள் சூடு பிடித்தன.

எட்டாம் வகுப்புவரை 'ஆல் பாஸ்' சரிதானா? முதலிடம் பெறும் மாணவர்களையே கொண்டாடிக்கொண்டு இருந்தால், தோல்வி அடைந்த மாணவர்களை யார் கவனிப்பது? மாணவிகளின் சிக்கல்கள் என்று பல விஷயங்கள், காரசாரமான விவாதங்களாக தூள் பறந்தன.

எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் மீது கடும் விமர்சனங்களை வைத்தன. அவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகளில் ஒரு தரப்பினர் கிழித்துப் போட்டனர்.

'சபையின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக நடந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற வேண்டும்' என்று உத்தரவிட்டார் சபாநாயகர்.

அப்போது முதல்வர் குறுக்கிட்டு, அவர்களை மன்னித்து அவையில் தொடர அனுமதிக்கும்படி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். அத்தோடு நில்லாமல், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவிப்பும் செய்தார்.

ஆளுங்கட்சிக்காரர்களும் சும்மா இல்லை. முதல்வர் அறிவிப்புகளை வெளியிடும்போது எல்லாம், மேசையைத் தட்டினார்கள்.

கொஞ்சமும் தொய்வு ஏற்படாமல், சுவையாக நடந்த 'பட்டசபை' நிகழ்ச்சி, தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.

பங்கேற்ற மாணவ, மாணவியர், 'பட்டம்' இதழ் சார்பில் தரப்பட்ட சான்றிதழ் மற்றும் புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி புறப்பட்டார்கள்.

மாணவர்களின் 'காரசார' விவாதத்தில் இருந்து கருத்துகள் இங்கே…

எட்டாவது வரை ஆல் பாஸ் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எல்லாரும் பாஸ் என்பதால், யாருக்கும் கற்கவும் கற்பிக்கவும் அக்கறை இல்லை. இதனால், 10 மற்றும் 12ஆவது வகுப்புப் பொதுத்தேர்வுகள் எழுதுவது கடினமாக இருக்கிறது.

பெண் குழந்தைகள் ஆரம்ப வகுப்பில் ஏதேனும் ஒன்றில் ஃபெயில் ஆகிவிட்டால் அவர்களைப் படிக்க அனுப்புவதில்லை. இந்த ஆல் பாஸ் முறையினால்தான் பல பெண்கள் மேல் வகுப்பு வரை படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது இருக்கும் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும். தேர்வில் சரிபாதி மதிப்பெண்கள் சொந்தமாகக் கருத்தைப் புரிந்துகொண்டு எழுதுவதற்குத் தரப்படவேண்டும். இன்னொரு பாதி மட்டும்தான் மனப்பாடத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வை மாணவர் மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும். சரியாக மார்க் வாங்காத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலை வெளியிடுவதால், தனியார் பள்ளிகளுக்குத்தான் விளம்பரம் கிடைக்கிறது. முதலிடம் பெற்றவருக்கு அரசு சலுகை தருகிறது என்றால் அதை அவர்களுக்கு மட்டும் தெரிவித்தால் போதும்.

தேர்ச்சி பெறுவோர், முதல் மதிப்பெண் வாங்குவோர் பற்றி மட்டுமே பேசுகிறோம். நாம் உண்மையில் அக்கறை காட்டவேண்டியது தேர்ச்சி பெறாத, குறைவான மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் பற்றித்தான். அவர்கள் மீது அக்கறை காட்டுவதற்கு தனி இலாகா தேவை.

ஆடல், பாடல், கலை, இலக்கியம் போன்றவையும் மாணவர்களுக்குத் தேவை. விளையாட்டு நேரத்தை வேறு பாடத்துக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. நல்ல உடல் இல்லாவிட்டால் எப்படி நன்றாக சிந்தித்துப் படிக்க முடியும்?

ஆரம்ப வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள் வந்த பிறகு புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. எனவே பத்தாவது வகுப்பு வரையாவது ஸ்மார்ட் போர்டுகளை தவிர்க்க வேண்டும்.

பெருவாரியான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. பள்ளி வாகனங்கள் சோதிக்கப்படுவது போல, கழிப்பறை, குடிநீர் வசதி சரியாக இருக்கிறதா என்றும் பார்த்த பிறகே அனுமதி தரவேண்டும்.

பட்டசபை உருவாக்கத்திலும் ஜனநாயகம்! - ஞாநி

'பட்டசபை' நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் ஆளுக்கு இரண்டு நிமிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றிப் பேசச் சொன்னேன். பேசிய ஒவ்வொருவருக்கும் பயிற்றுநர் குழு மட்டும் மதிப்பெண் போடவில்லை. மாணவர்களும் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் அளித்தார்கள். கடைசியில் எல்லோருடைய மதிப்பெண்களின் அடிப்படையில் 23 பேர் பேசுவதற்குத் தேர்வானார்கள்.

யார் ஆளுங்கட்சி? யார் எதிர்க்கட்சி? என்பதையும் மாணவர்களின் முடிவுக்கு விட்டோம். எதிர்க்கட்சி பக்கம்தான் அதிக பேர்! ஆளுங்கட்சிக்கு 19 பேர்தான். ஆட்சி அமைக்க வேண்டுமானால் இதர கட்சிகளின் எண்ணிக்கை அதைவிடக் குறைவாக இருக்கவேண்டும். எனவே, எதிர்க்கட்சித் தரப்பை மூன்று கட்சிகளாகப் பிரித்தோம். இப்போது, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆளுங்கட்சியை விடக் குறைவு. அத்தனை கட்சிகளுக்கும் என்ன பெயர் என்பதையும் மாணவர்களே தீர்மானித்தனர்.

யார் முதலமைச்சர், யார் கல்வி அமைச்சர், யார் யார் எதிர்க்கட்சித் தலைவர்கள்? என்பதையெல்லாம் அந்தந்த கட்சிகளில் இருந்த மாணவர்களே தமக்குள் விவாதித்து முடிவு செய்யச் சொல்லியிருந்தேன். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அன்றுதான் புதிதாக தமக்குள் அறிமுகமான மாணவர்கள் எந்தச் சிக்கலும் இன்றி முழுமையாக, ஜனநாயகப் பூர்வமாக செயல்பட்டதுதான் பட்டசபையின் வெற்றிக்கான அடிப்படை ஆதாரமாக அமைந்தது. சபாநாயகரை மட்டுமே நான் தேர்வு செய்தேன்.

ஒவ்வொருவரும் என்ன பேசவேண்டும் என்பதை ஏற்கெனவே அவர்கள் விண்ணப்பித்தபோது எழுதி அனுப்பியிருந்த கருத்துகளிலிருந்து எடுத்துத் தொகுத்து வைத்திருந்தோம். அவற்றையே பட்டசபையில் தம் கருத்தாகப் பேச மாணவர்கள் தயாரானார்கள்.

அதற்குப் பிறகு அடுத்த நாள் ஞாயிறு காலை நடந்தது - வரலாறு! தமிழக சிறுவர் இதழியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல். அதைச் சாத்தியமாக்கிய பெருமிதத்தை மாணவர்கள் முகத்தில், ஞாயிறு மதியம் பார்த்தபோது தமிழக மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் நம்பிக்கைகளும் வலுப்படுகின்றன.

பெற்றோருக்கும் பயிலரங்கம்!

பட்டசபை மாணவர்களுக்கு முதல் நாள் பயிற்சி நடந்தது. அப்போது, மாணவர்களோடு துணையாக வந்திருந்த பெரியவர்களுக்கு, ஒரு முழு நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது. அதில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், அணுகுமுறை போன்றவற்றைப் பற்றி வாழ்க்கைக் கல்வி பயிற்றுநர் ஏ.எஸ்.பத்மாவதி உரையாடினார். அதைத் தொடர்ந்து, மருத்துவர் கு.சிவராமன் பயிலரங்கில் பேசினார். இப்போது நாம் என்ன சாப்பிடுகிறோம், அவற்றில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன, இனி எப்படி சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடவேண்டும், சிறுவர்களுக்கான உணவுப் பழக்கம் எப்படி அமைக்கப்படவேண்டும் என்பன பற்றிப் பேசினார்.

வி.ஐ.பி. பேச்சு!

சிறப்பு விருந்தினர்களாக, தினமலர் இதழின் துணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, அரசியல் கட்சித் தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, டி.ரவிக்குமார் ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சிக்கு மெருகு கூட்டினார்கள்.

நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்த டி.ரவிக்குமார் மாணவர்களைப் பாராட்டிப் பேசினார். ”எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு ஆளுங்கட்சியினர் மதிப்புக் கொடுப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நிஜ சட்டசபையிலும் இந்தப் போக்கு இருந்தால் நன்றாக இருக்கும்.

நான் எம்.எல்.ஏ.ஆக இருந்த போது, 'மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும்; நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களை கழிப்பறைகளில் அமைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தேன் அதைப் பெண் எம்.எல்.ஏ.க்கள் பாராட்டினர்” என்று அவர் குறிப்பிட்டார்.

இரா.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “எல்லோரும் அற்புதமாகப் பேசினீர்கள். தொழில்முறை அரசியல்வாதிதான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றில்லை; அனைவரும் ஈடுபடலாம். மனு அளிப்பது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்கள் கூட அரசியல்தான். தினமும் எந்தெந்தக் கட்சிகள் என்னென்ன சொல்கின்றன என்பதை மாணவர்களாகிய நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்கள், இங்கே விவாதித்த விஷயங்களை ஆரோக்கியமான கருத்தாக எண்ணி அரசு ஏற்றுக்கொண்டால் கல்வி மேம்படும்” என்று கூறினார்.

முத்தாய்ப்பாகப் பேச வந்தார் ஆர்.நல்லகண்ணு. “இங்கே பேசிய ஒரு மாணவி, ஆட்டு மந்தையைப் போல, மருத்துவர், பொறியாளர்களை உருவாக்குவதற்கான கல்வி மட்டுமே போதிக்கப்படுவதாகக் கூறினார். அவர் கூறிய 'ஆட்டுமந்தை' என்ற வார்த்தை சுயசிந்தனை அற்ற நிலையைக் காட்டுகிறது. அதுதான் இன்றைய பள்ளிக்கல்வியின் நிலை. அதனால் தான், அந்தத் துறைகளுக்கு அதிகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு அரசியல் சிந்தனை வரவேண்டும். அரசியல், யாருக்கும் பாரம்பரிய உரிமையோ, தொழிலோ அல்ல. மக்கள், தங்கள் பிரச்னைகளைப் பற்றி தைரியத்துடன் பேச முன்வர வேண்டும்” என்று அவர் பேசும்போது பலத்த கைத்தட்டல். அது நம் மாணவர்கள் சுதாரிப்பாகத்தான் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும் விதமான கைத்தட்டல்!

பட்டசபை நிகழ்ச்சியின் வீடியோ செய்தித் தொகுப்பைப் பார்க்க: http://www.dinamalar.com/video_main.asp?news_id=59689&cat=1238

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us