தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செல்லக் குட்டி யானை!

செல்லக் குட்டி யானை!

செல்லக் குட்டி யானை!


PUBLISHED ON : ஏப் 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யானைப் பாடல்கள், யானைக் கதைகள், யானை பொம்மைகள் என எதுவானாலும் மகிழ்ச்சிதான். 'ஆனை வயிறு பானை!' போன்ற வரிகள் மனத்தில் தங்கிவிடுவதும் இயல்பே.

கதையாசிரியர்கள் யானைக் கதைகளை எழுதிக் குவித்துள்ளனர். யானைகள் ஓடுவதையும், பாடுவதையும், கோபப்படுவதையும் பற்றிய கதைகள் வந்துள்ளன.

'குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுது' என்கிற இராமானுஜம் எழுதிய நாடகம் சுவாரசியமானது.

வசனங்களும் பாடல்களும் குருவி, சங்கரன், கொக்கு, வாத்து … என

'ஆனைக்குட்டி சங்கரன்

பானைத்தட்டி விழுந்தானாம்

பல்லுடைஞ்சி போனானாம்

சொல்லிச் சொல்லி அழுதானாம்…'

என, நாடகம் முழுக்கக் கிண்டலாகவே நகரும் புத்தகம். ஆரம்பப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் உதவியுடனும் வளர்ந்த குழந்தைகள் தாங்களாகவே இந்த யானை நாடகத்தை நடிக்கலாம்.

'குட்டியானை பட்டு' கதையில், பட்டு யானையும், சிட்டுக் குருவியும் நண்பர்கள். மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த அந்த யானைக்குத் தன் கலர் பிடிக்கவில்லை. சிட்டுவிடம் சொல்லி அழுதது. சிட்டு அதனிடம் கவலைப்படவேண்டாம் என்று கூறியது.

புலியிடம் சென்று கோடுகளையும், சிறுத்தையிடம் சென்று புள்ளிகளையும் வாங்கி வந்து யானை மீது அப்பியது. பின், மயில், கிளி என்று எல்லோருடையதையும் யானை மேல் பூசி யானையை அழகாக்கியது. யானையின் துதிக்கை நீலம், வால் பச்சை, வயிற்றில் கோடு என கலவையாக இருந்தது.

அடுத்து யானை மேல் சவாரி செய்ய வந்தவர்கள் பட்டு யானையைத் தேடிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு அதை அடையாளமே தெரியவில்லை. பட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கடகடன்னு குளத்தில் மூழ்கி குளித்துவிட்டு வரும். நேஷனல் புக் ட்ரஸ்ட்டின் அழகான புத்தகம் 16 ரூபாய்தான்.

இப்பதிப்பகத்தின் இன்னொரு புத்தகம் 'ஒரு நாள்'. காட்டில் வாழும் சிறுவனுக்கும், யானைக்குமான நட்பை இயல்பாக வெளிப்படுத்துகிறது. யானை மீது ஏறி இருவரும் காட்டைச் சுற்றி வருவதும், மரக்கிளை, ஆறுகளில் விளையாடுவதுமாகக் கதை நகர்ந்து, மாலையில் வீடு திரும்புவதோடு கதை முடிகிறது. மோரா கதைப் புத்தகமும் முக்கியமானது.

'எனக்குத் தூக்கம் தூக்கமா வருது' கதைப் புத்தகத்தில் வரும் யானை தூங்க மறந்துவிடுகிறது. எப்படித் தூங்குவது என்பதை மறந்த குட்டியானை, முதலை, பன்றி, ஒட்டகம் என, ஒவ்வொருவரிடமாக ஆலோசனைக்குப் போகும் படக்கதை.

கதை அருவி வெளியிட்ட கதை அட்டைகளில் யானைக் கதைகளும் உண்டு. ஓட்டப்பந்தயம் கதையில் எறும்புக்கும் யானைக்கும் நடக்கும் ஓட்டப் பந்தயத்தில், யானை எங்கு நின்றாலும் அருகில் எறும்பு இருப்பதைப் பார்த்து நிற்காமல் ஓடும்.

எஸ்.எஸ்.ஏ. வெளியீடான புத்தகப் பூங்கொத்து புத்தக வரிசையில், 'எழில் வரைந்த யானை' புத்தகம் உண்டு. யானை பார்க்காத சிறுவன், அவன் அக்கா சொல்லச் சொல்ல யானையை வரைவான். பாறை போல தலை; பானை போல வயிறு; முறம் போல காது; உலக்கை போல… என வரும். புத்தகப் பூங்கொத்து வரிசையில் “ஆனை ஊஞ்சல்”, “யானை” போன்ற யானையைப் பற்றிய புத்தகங்களும் உண்டு.

யானை பற்றிய தகவல்களைக் கொண்ட சிறுவர் புத்தகங்களும் உண்டு. புத்தகப் பூங்கொத்தின் 'இயற்கையை ரசிப்போம்', புக் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள 'ஆனை வழி', குழந்தைகள் விரும்பும் வகையில், குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான தகவல்களை வழங்கியுள்ளது.

'யானையோடு பேசுதல்' காடர்கள் சொன்ன கதைகளின் தொகுப்பு. யானைகளுக்கும் காடர்களுக்குமான உறவைப் பற்றிச் சொல்லும் கதைகள். யானைகளின் ஓவியங்களும் காடர்களின் வாழ்வில் யானையின் பிணைப்பும் முக்கியமானது. தாரா பதிப்பகத்தின் இக்கதை ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் குழந்தைகளுக்கானது.

பஷீரின் 'எங்கள் தாத்தாவுக்குக் யானை இருந்தது', கதையையும் வளரும் குழந்தைகள் வாசிக்கலாம். நீங்களும் யானைக் கதைகளைச் சேகரிக்கலாமே!

-சாலை செல்வம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us