PUBLISHED ON : ஏப் 01, 2019

ஊர்ப் பெரியவர் அந்த மூன்று சகோதரர்களையும் உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். “தம்பி ராஜு, உன் தம்பிகள் ராமுவும் ரவியும் இப்போ தனி ஆயிட்டீங்க. போன வருஷம் உங்க அம்மா இறந்தாங்க. இதோ இப்போ, உங்க அப்பாவும் போயிட்டார். உங்க அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போனது, இந்தச் சின்னக் கடையைத்தான். நீங்க மூணு பேரும்தான் புத்தியாப் பொழச்சுக்கணும்...”
வருத்தம் முகத்தில் தெரிய, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் சகோதரர்கள்.
“கஷ்டப்பட்டு உழைச்சா, தப்பிச்சுடலாம் ஐயா” என்றான் ராஜு.
“இனிமே எங்க அண்ணன்தான் எங்களுக்கு அப்பா மாதிரி, இல்லையாடா ரவி?” என்று தன் தம்பியைப் பார்த்துக் கேட்டான் ராமு. மூத்த அண்ணன் ராஜுவின் முகத்தில் குழப்பம் குறையவே இல்லை.
பெரியவர் சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் ஒரு குறிப்பு இருந்தது. 'இவர்கள் சரிப்பட்டு வருவார்களா?' என்பதே அந்தக் குறிப்பு.
ஏமாற்றும் தம்பிகள்
அன்று காலை விழித்தெழுந்த ராஜு, கடைக்குப் போக ஆயத்தம் ஆனான். நேரம் காலை மணி ஆறு. நேற்றிரவு தம்பிகள் ராமுவும் ரவியும் ரொம்ப நேரம் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அண்ணன் தங்களோடு விளையாட வரவில்லை என்று அவர்களுக்கு வருத்தம். விளையாடும் சத்தத்தில் ராஜுவின் தூக்கமும் கெட்டது. ஆனாலும், காலையில் எழுந்தாக வேண்டுமே…
தம்பிகள் ஏதோ போருக்குப் போய்விட்டு வந்தவர்கள் போலக் களைப்போடு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
“ராமு, ரவி… எந்திரிங்கப்பா. போய் வியாபாரத்தைப் பார்ப்போம்” என்று அவர்களை எழுப்பினான் ராஜு.
ராமு மட்டும்தான் புரண்டே படுத்தான். ரவிக்கு, ராஜு கத்தியது கேட்கக்கூட இல்லை. கண்ணைத் திறக்காமல் ராமு சொன்னான்: “அண்ணே, நேத்து நீயே பார்த்தியே, நாங்க தூங்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆச்சு… இப்போ காலங்காத்தால எழுப்புறியே, உனக்கே நியாயமா இருக்கா? நீ போய் வியாபாரத்தைப் பாரு. நாங்க அப்பறமா வர்றோம். நீதானே அண்ணே எங்களுக்கு அப்பா மாதிரி…?”
ராஜு சிரித்தான். என்ன சொன்னாலும் இவர்கள் எழப்போவது இல்லை. அவன் தனியாளாகப் புறப்பட்டான்.
அப்பறமா வந்து பாத்துக்குறோம் என்று சொன்னார்களே தவிர, ராமுவோ ரவியோ எப்போதும் கடைப்பக்கம் போகவே இல்லை. அடுத்தடுத்த நாட்களில்கூடப் போகவில்லை. விளையாட்டு, சாவடியில் உட்கார்ந்து பேசுவது, பக்கத்து ஊருக்குப் போய் சாப்பாட்டுக் கடையில் எதையேனும் வாங்கிச் சாப்பிடுவது என்று பொழுதுபோயிற்று.
கடை நஷ்டத்தில் ஓட ஆரம்பித்தது. அதைவிட ஓர் ஆபத்து அந்தத் தம்பிகளுக்கு வந்தது.
ராமுவை அடித்த பேய்
சுகமாக சோம்பேறித்தனம் கொண்டாடிக்கொண்டு இருந்தனர் தம்பிகள். அவர்களுக்கு அண்ணனின் வடிவத்திலேயே ஓர் அதிர்ச்சி வந்தது.
இடைப்பட்ட காலத்தில் தம்பிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், அண்ணன் ராஜுவின் அத்தனை கடின உழைப்பும் வீணாகிப்போனது. விரைவிலேயே கடையை மூடிவிட வேண்டிய நிலை வரும் என்று அண்ணனுக்குப் புரிந்தது.
அப்போதுதான் அந்த முடிவை எடுத்தான். தம்பிகளை அழைத்தான். “அன்புத் தம்பிகளே… நான் இந்த ஊரைவிட்டே போக முடிவு எடுத்துவிட்டேன். எங்கேயாவது போய், கஷ்டப்பட்டு உழைத்து பெரும் பணக்காரன் ஆகப்போகிறேன். அதுவரை இந்த ஊருக்கு வர மாட்டேன். நான் சொத்துச் சேர்த்த பிறகு வாய்ப்பு இருந்தால், உங்களுக்கு உதவுகிறேன்” என்றான்.
தம்பிகள் பயந்துபோனார்கள்.
“அண்ணே, அண்ணே… எங்களை விட்டுப் போகாதே” என்றான் ரவி.
ராமுவோ வேறு மாதிரி யோசித்தான். “அண்ணே, இந்த ஊரைவிட்டுப் போனால் கோடீஸ்வரன் ஆகிவிடலாமா? அப்ப நான் போறேன் அண்ணே. திரும்ப வந்து உங்களைக் காப்பாத்துறேன்” என்றான்.
ராஜு சிரித்தான் சம்மதித்தான்.
அன்று மாலையே வீட்டை விட்டுப் போனான் ராமு. ஆனால், எங்கே போவது என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை. மனம் போனபடி நடந்தான். இரவானது. இதற்கு முன்னால் அவன் இவ்வளவு தூரம் தொடர்ந்து நடந்ததுகூட இல்லை. சோர்வாக இருந்தது. அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தான். அப்போது அவன் முதுகில் 'பளார்' என்று ஓர் அறை விழுந்தது. ''ஐயோ…” என்று அலறியபடியே திரும்பிப் பார்த்தான். ஒரு பேய், பயங்கரமாகச் சிரித்தபடி நின்றிருந்தது. அதுதான் இவனை அடித்தது.
அரசியின் நிபந்தனை
பயங்கரமாகச் சிரித்தது அந்த உருவம். “பயந்துட்டியா? நான் பேய் இல்லை. இந்தப் பகுதியில ரொம்பக் காலமா வாழுற ஒரு மனுஷன்தான். உனக்கு ஏதோ பிரச்னை இருக்கு. அது என்ன?” என்று கேட்டார் அந்த, பயங்கரத் தோற்றம் உள்ள ஆள்.
பயம் நீங்கியவனாக, ராமு தன் விஷயத்தைச் சொன்னான்.
“ப்ப்பூ... இவ்வளவுதானா? நீ சரியான பாதையிலதான் வந்திருக்கே... சோம்பேறித்தனமா உட்காராம இன்னும் கொஞ்சம் தூரம் போ. அங்கே ஒரு கோட்டை இருக்கும். ஒரு ராணி இருப்பாங்க. அவங்க உன்னோட பிரச்னையைத் தீர்த்து வைக்கலாம்” என்று சொல்லிவிட்டு பயங்கரமாகச் சிரித்தபடியே போனார் அந்த ஆள்.
இன்னும் கொஞ்ச தூரம்தான் என்பதால், 'போய்த் தொலையலாம்' என்று நொந்துகொண்டபடியே நடந்தான் ராமு. இருட்டிவிட்டது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று நடந்ததில் கோட்டையை நெருங்கிவிட்டான்.
போகும்போதே தோட்டத்தில் ராணி கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. வீரர்கள் எல்லாம் சிறிது தொலைவில் நின்றிருந்தனர்.
ராணிக்கு ஒரு வணக்கத்தைப் போட்டான் ராமு.
“என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டாள் ராணி.
கோடீஸ்வரனாக வேண்டும் என்கிற தன் விருப்பத்தைச் சொன்னான். ராணியோ சிரிப்பை அடக்கிக்கொண்டாள். “உழைப்பும் அறிவும் இருந்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும். சரி, இந்தக் குளத்தைப் பார்” என்று சுட்டிக் காட்டினாள். அங்கே ஒரு குளம் இருந்தது. அது வெட்டிய குளம் அல்ல, கட்டிய குளம். அதில் தண்ணீர் பளபளத்தது. “இதில் இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் உனக்குத் தேவையானதை நான் தருவேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள் ராணி.
பேய் மனிதரின் மாயம்
வானில் நிலவு ஒளிர்ந்துகொண்டு இருந்தது. ராமுவுக்குக் களைப்பாக இருந்தது. மூளையோ ஓய்வு கேட்டுக் கெஞ்சியது. ஆனாலும், கோடீஸ்வரன் ஆவது என்றால் சும்மாவா? வேலையில் இறங்கினான். குளத்தில் தெரிந்த நட்சத்திரங்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தான். அது நடுங்கியது. பிடித்த கைக்குள் எதுவும் சிக்கவில்லை. ஊஹூம்... இது நடக்கிற காரியம் இல்லை' என்று நினைத்தான். 'ராணி வந்து தண்டனை கொடுப்பதற்குள் இங்கே இருந்து தப்பித்துவிட வேண்டும்...' புறப்பட்டான்.
வீட்டுக்கு வந்து சேர்ந்த ராமு சொன்னதைக் கேட்ட ரவிக்கு ரொம்பவும் பயமாகிவிட்டது. “ராமு அண்ணே, உன்னாலேயே முடியலையா? அப்போ என்னாலேயும் முடியாது. இப்போ நாம என்ன செய்றது?” என்றான்.
ராஜு சிரித்தான். “முன்னால சொன்னபடி, நானே போறேன்” என்று ராஜு சொன்னதும், மற்ற இருவராலும் மறுக்க முடியவில்லை.
ராஜு போன வழியிலும் பழைய கதையே நடந்தது. அந்த மரத்தடியில் போனதும், அந்தப் பேய் மனிதர் அங்கே தோன்றினார். ஆனால், கதையில் ஒரு திருப்பம் இருந்தது.
பேய் மனிதர், ராஜுவின் முன்னால் நின்றார். கையைக் காற்றில் சுழற்றினார். மரத்துக்குப் பின்னால் போய், ஒரு தங்க அன்னப் பறவையைக் கொண்டுவந்தார். “இது நீ கேக்குறதை எல்லாம் குடுக்கும். என்னோட மந்திரத்தால வந்தது. வச்சுக்கோ” என்று கொடுத்தார்.
ராஜு வாங்கவில்லை. “மாயத்துல வந்தது, மாயத்துலேயே மறைஞ்சிடும்” என்றான்.
பேய் மனிதர் சிரித்தார். “என்னோட மாயத்துக்கு நீ மயங்கலை. ராணியோட உபாயத்துக்காவது உதவுறியான்னு பார்ப்போம்” என்றபடி மறைந்துபோனார்.
ராஜு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
தான் ஓர் ஆபத்தை நெருங்குவது அப்போது அவனுக்குத் தெரியாது.
புத்தியால் வென்றான்!
கோட்டையை நெருங்கியபோது, 'பொத்' என்று ஒரு பெரும் சத்தம் கேட்டது. அது ஒரு பெரிய மலைப்பாம்பு. ராஜுவின் பக்கத்தில் விழுந்தது. அசையாமல் நின்றான் ராஜு. பாம்பு நிதானமாக நெளிந்து நெளிந்து மறைந்தது.
“நீ பயப்படவில்லை; அந்த உயிரைத் தொந்தரவு செய்யவில்லை. அதனால், அது தன் வழியில் போய்விட்டது. வா” என்று ஒரு குரல் கேட்டது. ராணியின் குரல். இப்போதும் ராணியின் முகத்தில் பாராட்டுப் புன்னகை இருந்தது.
ராமுவிடம் சொன்ன அதே நிபந்தனையை ராஜுவிடமும் சொன்னாள் ராணி. குளத்தில் இருக்கும் நட்சத்திரங்களை அகற்ற வேண்டும்.
ராணி போனதுமே, அங்கும் இங்கும் தேடி ஒரு பெரிய வாளியைக் கொண்டுவந்தான். குளத்தில் இருந்த நீரை இறைத்து இறைத்து வெளியே ஊற்ற ஆரம்பித்தான்.
அப்பப்பா... எவ்வளவு நேரம்... வானில் இருந்த நிலவு எதிர்த் திசைக்குப் போய்விட்டது. எதையும் பார்க்கவில்லை அவன். இறைத்து இறைத்து ஊற்றிக்கொண்டே இருந்தான்.
குளத்தில் இருந்த அத்தனை நீரும் காலியான வேளையில் மறுபடி ராணியின் குரல் கேட்டது.
“ராணி, குளத்தில் நட்சத்திரங்கள் இல்லை” என்றான்.
“நீ நல்ல புத்திசாலி. நீ இறைத்த நீர் பாய்ந்த தோட்டங்கள் எல்லாம் உனக்கே சொந்தம்” என்று புன்னகைத்தாள் ராணி.
“இன்னொரு விஷயம்… இந்தத் தோட்டத்தில் விளையும் பொருட்களையோ, அவற்றை விற்பதால் கிடைக்கும் பணத்தையோ உழைக்காதவர்களால் அனுபவிக்க முடியாது. இதை உன் தம்பிகளிடம் சொல்லிவிடு” என்றாள் ராணி.
ராஜு சிரித்துக்கொண்டே தலை ஆட்டினான்.
முற்றும்

