
'கரடிகை என்றால் என்ன?' என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 'கரடியின் கை' என்பீர்களா?
அது அல்ல விடை. கரடிகை என்பது ஓர் இசைக் கருவியின் பெயர். பழங்காலத்தில் பக்க வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்டது. கோயில், மேடை, விழாக்களில் இந்தக் கருவி இசைக்கப்பட்டிருக்கிறது. கரடி கத்துவது போல் ஓசை எழுப்பக் கூடியது என்பதால் இப்படி ஒரு பெயர்.
இன்னொரு கருவி உண்டு. அதன் பெயர் இடக்கை. இடக்கையால் வாசிப்பதால் அக்கருவிக்கு அந்தப் பெயர்.
அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலில் தாள இசைக் கருவிகள் எவை என்பதை,
'இடக்கை சல்லிகை கரடிகை பேரிகை
இசைக்கும் குடமுழவு...' 
என்று குறிப்பிடுகிறார். 
கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடலும் (8445) கரடிகை என்ற இசைக்கருவி இருந்ததை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
பதலை, தண்ணுமை, தக்கை, தகுணிச்சம், படகம்,  திமிலை, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவலையம், மொந்தை, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, அடக்கம், விரலேறு, பாகம், உபாங்கம், தடி என இன்னும் ஏராளமான இசைக் கருவிகள் அந்தக் காலத்தில் இருந்தன.
இவற்றில் கடைசியாக உள்ள பதலை இக்காலத்தில் தபலா என்று வழங்கப்படுகிறது. 1800 ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழவு என்பது மிருதங்கத்தைக் குறிக்கும். முழவு, கரடிகைப் போல நாம் அறிய வேண்டியவை தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

