ஞாநி எழுதும் மாலுவின் டயரி (27) - கொஞ்சம் ஐஸ் கொஞ்சம் நெருப்பு
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (27) - கொஞ்சம் ஐஸ் கொஞ்சம் நெருப்பு
PUBLISHED ON : ஜூலை 18, 2016

நானும் வாலுவும் வயலின் வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது பாலு சுருண்டு படுத்திருந்தான். வயிற்றுவலியாம். நான் வயலினில் புதிதாகக் கற்றுக் கொண்ட ஒரு பாட்டை வாசித்தேன்.
பாலுவால் அதை ரசிக்க முடியவில்லை. “நீ என்ன, ரோம் பற்றி எரிகிறபோது வயலின் வாசித்த நீரோ மன்னன் மாதிரி, நான் வலியில் துடிக்கிறபோது வயலின் வாசிக்கிறாய்?” என்றான்.
உடனே ஞாநி மாமா சொன்னார். “பாலு. இப்போது மாலு வாசித்த பாட்டு பாரதிதாசனுடையது. 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா'. நீரோ மன்னன் கூட அதே போல துன்பம் வந்ததும் மனதுக்கு ஆறுதலாக யாழ் வாசித்திருக்கலாம்.”
'யாழ் இல்லை மாமா, பிடில், வயலின்' என்றேன்.
“இல்லையில்லை. நீரோ மன்னன் இசைத்த வருடம் 64 கி.பி. அப்போது வயலின் கண்டுபிடிக்கப்படவே இல்லை. நீரோ வாசித்தது 'லூட்' எனப்படும் யாழ்தான். தன் புதிய அரண்மனைக்கு இடம் வேண்டும் என்பதற்காக அவனே ரோம் நகருக்கு ஆட்களை விட்டு தீ வைத்துவிட்டான் என்றும் அதனால்தான் ரோம் பற்றி எரியும்போது அவனால் லூட் வாசிக்க முடிந்தது என்றும் வதந்திகள் இருந்தன. எரிந்த நகரத்தைப் புதுப்பிக்கும் வேலையை அவன்தான் முடுக்கிவிட்டான். நடந்தது ஒரு விபத்து என்றும் அதற்கும் நீரோவுக்கும் சம்பந்தமில்லை என்றும்தான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்” என்றார் மாமா.
'மாமா. சில சமயம் ஒரு துன்பத்தைப் பார்க்கும்போது நம்மால் அது பற்றி ஒன்றும் செய்ய முடிவதில்லை. அப்போது ஆறுதலுக்கு இசையைத்தானே நாடவேண்டியிருக்கிறது' என்று கேட்டேன்.
“உண்மைதான். வாடிய பயிரைக் கண்டாலே வாடும் மனம் வேண்டும் என்கிறார் வள்ளலார். பிரான்சில் பொது இடத்தில் 84 பேரை லாரி ஏற்றிக் கொன்றதைப் படித்தால் மனசு பதறுகிறது. நம்மால் இதற்கு உடனடியாக ஒன்றும் செய்யவும் முடியாது. நம்மை ஆறுதல்படுத்திக் கொண்டு வலுவாக்கிக் கொண்டால்தான், நாம் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி விஷயங்கள் நடக்காமல் இருக்க, பாசிட்டிவாக நாம் செய்ய வேண்டியதில் எல்லாம் ஈடுபட பலம் கிடைக்கும். இசை எஸ்கேப் அல்ல. இசை மருந்து” என்றார் மாமா.
'சரி. பாலு, உனக்கு என்ன துன்பம் இப்போது வந்தது? சுருண்டு படுத்துவிட்டாய்?' என்றேன்.
“குப்பைத் தொட்டியைப் பார். தெரியும்” என்றார் மாமா. அதில் நிறைய காலி ஐஸ்க்ரீம் டப்பாக்கள் இருந்தன.
“நாலஞ்சு சிநேகிதர்களுடைய ட்ரீட் ஒரே சமயத்துல வந்தது. தள்ளிப் போட்டா குடுக்காம ஏமாத்திடுவாங்க. அதனால ஒரேயடியா எட்டு ஐஸ்க்ரீம், வெவ்வேற வெரைட்டி சாப்பிட்டேன். இப்ப வயிறு வலிக்குது” என்றான் பாலு.
“ஐஸ்க்ரீம் நல்லதுதான். அதுல கார்போஹைட்ரேட், வைட்டமின், புரோட்டீன், கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்கு. எனர்ஜி குறைவா இருக்கும்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடனே எனர்ஜி வரும். ஆனா அளவுக்கு மிஞ்சினா ஐஸ்க்ரீமும் நஞ்சுதான்” என்றார் மாமா.
'இன்னைக்குதான் கோன் ஐஸ்க்ரீம் அறிமுகமான நாள். அதுக்கு ட்ரீட் கொடுக்கலையா பாலு' என்று கிண்டலாகக் கேட்டேன். “கோன் மட்டும்தான் இன்னைக்கு சாப்பிடலை. கோன் ஐஸ்க்ரீமை எப்பிடி கண்டுபிடிச்சாங்கன்னு எனக்குத் தெரியும். ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனியில நிறைய ஐஸ்க்ரீம் வித்தாலும் கூட லாபம் வரல. ஏன்னு பார்த்தா, ஐஸ்க்ரீமை வெச்சுக் குடுக்கற கப்போட விலை அதிகமாகிக்கிட்டே போகுது. இதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சாங்க. அப்ப ஒருத்தர் 'கப்பையும் சேர்த்துச் சாப்பிடற மாதிரி செஞ்சா விலையை ஏத்திடலாம்”ன்னு சொன்னாரு. அதுதான் கோன்” என்றான் பாலு.
“இந்தக் கதையை நிறைய எம்.பி.ஏ. கிளாஸ்ல சொல்லிகிட்டிருக்காங்க. நிர்வாகத்துல இருக்கறவங்க எப்பிடி வித்தியாசமா யோசிச்சுத் தீர்வு கண்டுபிடிக்கணும்கறதுக்கு உதாரணமா. ஆனா இது உண்மைக் கதையில்ல” என்றார் மாமா.
“1904ல செயிண்ட் லூயி நகரத்துல ஒரு பொருட்காட்சி நடந்தது.. அதுல ஒரு கடை ஐஸ்க்ரீம் கடை. அடுத்த கடை வேஃபிள்ஸ் (மொறு மொறுவான மாவுப் பண்டம்) விக்கற கடை. ஐஸ்க்ரீம் கடையில கப்பெல்லாம் தீர்ந்துபோச்சு. ஆனா ஐஸ்க்ரீம் இன்னும் பாக்கியிருக்கு. அப்ப வேஃபிள்ஸ் கடைக்காரர் எர்னஸ்ட் ஹம்வி, தன்னோட வேஃபிள்சை கோன் மாதிரி சுருட்டிக் கொடுத்து இதுல ஐஸைக் கொடு என்று பக்கத்துக் கடைக்காரருக்கு உதவினார். இந்த புது காம்பினேஷன் பலமா வித்திருக்கு. இதுதான் ஆரம்பம்” என்றார் மாமா. அமெரிக்கால அந்த சமயத்துல வெவ்வேற ஊர்ல தனித்தனியா மூணு பேர் இதே ஐடியாவை செயல்படுத்தி கோன் ஐஸ் உருவாக்கி வணிக உரிமை வாங்கியிருக்காங்களாம்.
“கோன் ஐஸ் பர்த்டேவைக் கொண்டாட நாம போய் கோன் ஐஸ் சாப்பிடலாம், வா” என்று அழைத்தார் மாமா.
“அந்த வயலினை என்கிட்டக் கொடு. வாசிக்கப் போறேன். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க வேண்டும்” என்றான் பாலு.
“நீங்க சாப்பிடறதை நான் சாப்பிடாம வேடிக்கை பார்க்கறது எவ்வளவு பெரிய துன்பம்” என்றான்.
“இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு பாலுவோட சேர்ந்து எல்லாரும் சாப்பிடலாம்” என்று ஒரு தீர்வை சொல்லிற்று வாலு. சரி என்றார் மாமா.
வாலுபீடியா 1: கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து தேனும் பழமும் கலந்து சாப்பிட்டிருக்கிறார்கள். நவீன மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹிப்போகிராட்டஸ், ஐஸ் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என்று பரிந்துரைத்திருக்கிறார்.
வாலுபீடியா 2: சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் தண்னீரை செயற்கையாக உறைவிக்கச் செய்து ஐஸ் உருவாக்கும் ஃப்ரீசர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் ஐஸ்க்ரீம் ஏழைகளுக்கும் எட்டும் பொருளாயிற்று. அதுவரை இயற்கையான ஐஸை வெட்டி எடுத்து வந்துதான் ஐஸ்க்ரீம் தயாரித்தார்கள்.
வாலுபீடியா 3: தன் அமைச்சர்களாலும் நிர்வாக குழுவான செனட்டாலும் சர்வாதிகாரி கொடுங்கோல் மன்னன் என்று கருதப்பட்ட நீரோ, சாதாரண குடிமக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தான். பொது இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் வந்து யாழ் இசைத்து பாட்டு பாடும் மன்னனாக நீரோ இருந்தது ஒரு காரணம்.

