உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 05, 2016

அ நிறம் | அளவு
கடலில் முகந்த தண்ணீரை
தரையில் கொட்டு மழைத்தாயே!
உடலில் சுமந்த தண்ணீரை
ஊரில் பெய்வாய் கருமுகிலே!
பயிர்கள் வாடி வதங்குவதை
பார்த்தும் பெய்யாதிருப்பாயா?
முயல்கள் மான்கள் நீரின்றி
முடங்கிக் கிடத்தல் சரிதானா?
மாதம் தோறும் மும்மாரி
மண்ணில் பெய்தது அக்காலம்!
மாதம் மூன்று கடந்தாலும்
மழையே இன்றி வாடுகிறோம்!
மனிதர் நிலத்தைத் துளையிட்டு
மண்ணீர் இறைத்துக் குடிக்கின்றார்.
இனிய விலங்கும் பறவைகளும்
எங்கே போய்தான் நீருண்ணும்?
வானம் வழங்கி வந்தால்தான்
வையம் செழிக்கும் உயிர்தழைக்கும்!
வானம் பொய்த்தால் மண்ணுலகில்
வாழ்க்கை பொய்த்துப் போகாதா?
தலைக்கு மேலே செல்கின்ற
தண்ணீர் மேகக் கூட்டங்களே!
நிலைக்கு இரங்கிக் கீழிறங்கி
நீரைப் பொழிந்து செல்லுங்கள்!
- மகுடேசுவரன்
