sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சொல்லை மாற்ற மறுத்த பாரதிதாசன்

சொல்லை மாற்ற மறுத்த பாரதிதாசன்

சொல்லை மாற்ற மறுத்த பாரதிதாசன்


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாரதிதாசன்: ஏப். 29, 1891 -- ஏப். 21, 1964.

ஒரு திருமண விழாவில், பாரதியாரின் பாடல்களை இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தார் ஓர் இளைஞர். விழாக் கூட்டம் அவரைச் சுற்றி அமர்ந்து, அவர் பாடிய பாடல்களில் மெய்மறந்திருந்தது. அந்தக் கூட்டத்தில், சுப்பிரமணிய பாரதியாரும் அமர்ந்திருந்தார். தம் பாடல்களை ஊனுருகப் பாடும் அந்த இளைஞரை, பாரதியாருக்குப் பிடித்துப் போயிற்று. பாடல்கள் முடிந்ததும், அவரை அழைத்து விசாரித்தார், பாரதியார். தம் மானசீக குருவே எதிரில் நின்று தன்னோடு பேசுவதை உணர்ந்த அவ்விளைஞர், அன்று முதல் அவரின் சீடரானார். அந்த இளைஞரின் பெயர் கனகசுப்புரத்தினம். அவர்தான் பிற்காலத்தில் பாவேந்தர் எனப் புகழப்பட்ட கவிஞர் பாரதிதாசன்.

பாரதி மீது கொண்ட பற்றின் காரணமாய், கனகசுப்புரத்தினம் என்ற தன்பெயரை, பாரதிதாசன் என, மாற்றிக்கொண்டார். இறுதிவரை அப்பெயரிலேயே எழுதினார். தாசன் என்றால் அடிமை என்று பொருள்.

பாரதியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பாரதிதாசன் பாடிய பாட்டுதான், 'எங்கெங்கு காணினும் சக்தியடா…. ஏழுகடல் அவள் வண்ணமடா….” அப்பாடலில், மனம் மயங்கிய பாரதியார், தம் கைப்பட அதை எழுதி, சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார். 'ஸ்ரீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினத்தின் கவிதை இது' என்ற குறிப்புடன் அது வெளியானது.

புதுச்சேரியில் பிறந்த கனகசுப்புரத்தினம், தமிழுடன், பிரஞ்சு மொழியையும் கற்றார். காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவ்வூருக்கு தலைவர்போல் மக்கள் அவரை மதித்தனர். அவர் முன்மொழிகின்றவர்தான், நகரசபைக்கு உறுப்பினராகவே முடியும். எப்போதும் பாரதிதாசனைச் சுற்றி, அவருடைய தொண்டர்களின் கூட்டம் இருக்கும்.

பாரதிதாசனின் கவியாற்றலைக் கண்டு மகிழ்ந்த திராவிட இயக்கத்தினர், அவருக்குப் 'புரட்சிக் கவிஞர்' என்ற பட்டத்தையும், பணமுடிப்பையும் வழங்கினர். பாரதிதாசனின் கவிதைகளில் பொதுவுடைமைத் தத்துவமும், நாத்திகப் பகுத்தறிவும் கலந்திருக்கும். சாதி மதங்களை கடுமையாய் சாடுகின்ற போக்கும் காணப்படும். வடமொழி எதிர்ப்பும், தமிழ்ப்பற்றும் மிகுந்திருக்கும்.

பாரதிதாசன், கவிதைகளுக்கென்றே, 'குயில்' என்னும் இதழைத் தொடர்ந்து நடத்தினார். அதில் எழுதிய பலர், பிற்காலத்தில், தமிழ்க்கவிதை உலகில் புகழ்பெற்றனர்.

பாரதிதாசன் திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். ஒரு படத்தின் பாடலில் 'கமழ்ந்தது' என்று அவர் எழுதிக்கொடுத்த சொல் ஒலிப்பதிவுக் கருவியால் பதிவுசெய்ய இயலவில்லை. சிறப்பு ழகரத்தை ஒலியாய் வாங்கி, பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் அப்போதைய ஒலிப்பதிவுக் கருவிகளுக்கு இல்லாமல் இருந்தது.

அதனால் பாரதிதாசனை அணுகிய படக்குழுவினர்,'கமழ்ந்தது' என்ற சொல்லை மாற்றித் தரும்படி' வேண்டினர். அதற்குப் பாரதிதாசன் 'என் சொல்லை மாற்ற முடியாது. நீங்கள் ஒலிப்பதிவுக் கருவியை மாற்றிக்கொள்ளுங்கள்…' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

எழுதிய நூல்கள் 80 க்கும் மேற்பட்டவை . அவற்றுள் 'பாண்டியன் பரிசு, இருண்டவீடு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் கத்தி' நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

பிசிராந்தையார் என்ற நூலுக்காக, அவருக்கு, சாகித்ய அகாதமி' விருது வழங்கப்பட்டது. பாரதிதாசனின் பெயரில், திருச்சியில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.

- காவிரி மைந்தன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us