தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?

கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?

கறுப்பா கருப்பா சிகப்பா சிவப்பா?


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நிறங்களின் பெயர்களை நாம் எவ்வாறு எழுதுகிறோம் என்று பார்ப்போம். வானவில்லைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நிறமாகச் சொல்லிப் பாருங்கள். வானவில்லில் இல்லாத இரண்டு நிறங்களும் உள்ளன. அவை கறுப்பும் வெள்ளையும். கறுப்பு வெள்ளை என்பவையே எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிறங்கள். இந்தத் தாள் வெள்ளை நிறம். இதில் அச்சாகியுள்ள எழுத்துகள் கறுப்பு நிறம்.

சூரிய ஒளியின் நிறம் வெள்ளை. வெண்ணொளிக்கற்றையின் ஏழ்நிறப் பிரிவுகளே வானவில்லின் நிறங்கள்.

இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று எழுதுகிறார்கள். கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம் என்பது பொருளாகும். இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.

நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும். காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே, அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே என்பர் சிலர். கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது. எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த வேண்டும்.

அடுத்து சிகப்பு, சிவப்பு இரண்டில் எது சரியென்ற கேள்வியும் உள்ளது. இரண்டில் எது சரி என்று கண்டறிய எளிய வழி ஒன்று உள்ளது. இவ்விரண்டு சொற்களில் எது வினைச்சொல்லாகப் பயிலும் என்று பார்க்க வேண்டும். சிவந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், வெட்கத்தால் முகம் சிவந்தாள்” போன்ற தொடர்களைப் படித்திருக்கிறோம். சிவத்தல் என்பது வினையாகப் பயிலும் என்பது தெரிகிறது. சிகத்தல் என்று எந்த வினைச்சொல்லும் இல்லை. எனவே, சிவப்பு என்பதுதான் பிழையற்ற சொல் ஆகும்.

வெள்ளை, வெண்மை இரண்டும் வெண்ணிறத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சரியான சொற்களாகும். மஞ்சள், நீலம், கருநீலம், பச்சை போன்ற சொற்கள் நிறத்தைக் குறிக்கும் பிற சொற்கள் என்பதை அறிவோம்.

வானவில்லில் உள்ள ஆரஞ்சு நிறத்தைக் குறிக்க செம்மஞ்சள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். சிவப்பு நிறத்தில் மஞ்சள் கலந்தால் ஆரஞ்சு நிறம் தோன்றும். காவி நிறத்தைப்போல்தான் ஆரஞ்சு நிறம் இருக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்தைக் குறிக்க செம்மஞ்சள் நிறம் என்று எழுதலாம்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us