தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூவிலே பெரிய பூ!

பூவிலே பெரிய பூ!

பூவிலே பெரிய பூ!


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தோனேஷியாவின் மலைக்காடுகளில் காணப்படும் தாவரம், ரஃப்லேஸியா (Rafflesia). இந்தத் தாவரத்துக்குத் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. இந்தத் தாவரத்தில் பூக்கும் பூதான், உலகின் மிகப் பெரிய பூ. ஏறத்தாழ ஒரு மீட்டர் விட்டத்தில், 10ல் இருந்து 11 கிலோ எடையில், ராட்சச அளவில் வளரும். இந்தப் பூவின் நடுவில் சட்டி போல இருக்கும் குழி, 10 லிட்டர் நீரைக் கொள்ளும்!

இந்தத் தாவரம் மிகவும் விந்தையான அமைப்பைக் கொண்டது. 'டெட்ராஸ்டிக்மா' (Tetrastigma) என்ற ஒரு வகை திராட்சைக் கொடிக்குள், ஊடுருவி சிறிய திசுக்களாக வளரும். சுமார் 18 மாதங்கள் ஒட்டுண்ணியாக அதன் சத்துகளை உறிஞ்சி வளர்ந்த பிறகு, திராட்சைக் கொடியின் மேலே சிறிய முடிச்சாகத் தென்படும். சுமார் 9 மாத காலம் இந்த முடிச்சு நன்கு வளர்ந்து, முட்டைக்கோசைப் போன்ற தோற்றத்தில் ஒரு பெரிய மொட்டாக மாறும். சிறிது நாட்களில் ஐந்து இதழ்களைக் கொண்ட பூவாக மலரும். சிவப்பும் ஆரஞ்சும் கலந்த அடர் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனி ஒட்டுண்ணிகளில் வளரும். ஒரு பகுதியில் பெண் பூவும், ஆண் பூவும் மலர்ந்து இருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கனிகள் உருவாகும். இந்தப் பூவின் மணம், சதை அழுகினால் வீசும் துர்நாற்றத்தை ஒத்தது. அதனால் அழுகிய உடலை மொய்க்கும் ஈக்களால்தான் இந்தத் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. சில நாட்கள் கழித்து, பூ அழுகத் தொடங்கியதும், எலிகள் மாதிரியான சிறு விலங்குகள் பூவைத் தின்ன வரும். அப்போது, காய்ந்த விதைகள் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ளும். ரஃப்லேஸியா தாவரம் வளரக்கூடிய திராட்சைக் கொடியின்மீது, விதைகளைச் சுமந்து செல்லும் எலிகள் ஏற நேரிட்டால், விதைகள் கொடியின்மேல் ஒட்டிக்கொண்டுவிடும். விதைகளில் இருந்து திசுக்கள் உருவாகி, கொடிக்குள் ஊடுருவி வளரத் தொடங்கும்.

இந்தோனேசியா நாட்டின் மூன்று தேசிய மலர்களுள் ஒன்று இந்த ரஃப்லேஸியா. ஐரோப்பியர்களில் இந்தப் பூவை முதன்முதலில் கண்டறிந்தது, சர். ஸ்டாம்ஃபோர்ட் ரஃப்லேஸ், (Sir Stamford Raffles) டாக்டர்.ஜோசப் ஆர்னால்ட் (Dr. Joseph Arnold) எனும் இரு தாவரவியல் அறிஞர்கள்.

அவர்களின் நினைவாக இந்தப் பூவுக்கு ரஃப்லேஸியா என்ற ஆங்கிலப் பெயரும், ரஃப்லேஸியா ஆர்னால்டி (Rafflesia Arnoldi) என்ற தாவரவியல் பெயரும் வந்தது. இதன் இந்தோனேசியப் பெயர், புஷ்ப ராட்சசா (Pushpa Raksasa).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us