PUBLISHED ON : மே 22, 2017
பாலுவுக்கு வயிற்று வலி வந்தது. மருத்துவரிடம் போய்விட்டு வந்தான். “கல்லை ஜீரணம் பண்ற வயசு. வயிறு ஏன் கல்லு மாதிரி இருக்கு?” என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருந்து கொடுத்திருக்கிறார்.
“நிஜமாகவே நம்மால் கல்லை ஜீரணம் செய்ய முடியுமா?” என்று பாலு, ஞாநி மாமாவிடம் கேட்டான். மாமா சிரித்துக்கொண்டே சொன்னார். “நம்முடைய ஜீரண உறுப்புகள், எதையும் பொடிப் பொடியாக்கி செரித்துவிடும் வல்லமை உடையவைதான். ஆனால், கல்லைச் சாப்பிட்டு ஜீரணித்தாலும் அதிலிருந்து எந்தச் சத்தும் உடலுக்குக் கிடையாது என்பதால்தான், நாம் அதை உணவாக வைத்துக் கொள்ளவில்லை.” என்றார் மாமா.
“செரித்தல் எங்கே நடக்கிறது? வயிற்றிலா? குடலிலா?” என்று கேட்டேன். “உணவை எடுத்து நாக்கில் வைத்த உடனே, செரித்தல் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கிருந்து குடல் வரை படிப்படியாக செரிமானம் நடக்கிறது. அதை விவரமாகப் படித்தால் பிரமிப்பாக இருக்கும்.” என்ற மாமா, கிரே'ஸ் அனாடமி என்ற தடிப் புத்தகத்தை எடுத்து, அதில் ஜீரண உறுப்புகளின் படங்களைக் காட்டினார்.
வாயில் உணவைப் போடும்போதே, ஜீரணத்துக்கான வேலைகள் ஆரம்பமாகி விடுகின்றன. பல், நாக்கு, எச்சில் சுரப்பிகள் மூன்றும் இந்த வேலையை ஆரம்பிக்கின்றன. எச்சில் சுரப்பிகள் மட்டும், 800க்கு மேல் இருக்கின்றன. அதிலிருந்து வரும் எச்சில், உணவை மிருதுவாக்கி உள்ளே அனுப்ப உதவுகிறது. உணவிலிருந்து சத்துகளைப் பிரிப்பதும் எச்சிலிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. வாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதும் எச்சில்தான். “இனிமேல் எச்சிலைக் கேவலமாகப் பேசக் கூடாது” என்றான் பாலு.
உணவு வயிற்றுக்கு செல்வதற்கு உணவுக் குழாய் வழியே போகும்போது, அதற்குப் பக்கத்திலேயே இருக்கிற மூச்சுக் குழாயில் போய்விடாமல் தடுக்க வால்வ் மாதிரி ஓர் ஏற்பாடாக எபிக்ளோட்டிஸ் என்ற உறுப்பு இருக்கிறது.
குழாயிலிருந்து வயிற்றுக்கு உணவு சென்றதும், திரும்ப மேலேறி வந்துவிடாமல் இருக்க, அங்கேயும் ஒரு தடுப்பு அமைப்பு ஸ்பிங்க்டர் இருக்கிறது. வயிற்றில்தான் பெருமளவு ஜீரணம் நடக்கிறது. ஹைட்ரோக்ளோரிக் அமிலமும், சோடியம் க்ளோரைடும் வயிற்றில் சுரக்கின்றன. உணவை ஜீரணிக்கின்றன.
“அமிலம் ஆபத்தானது இல்லையா? வயிற்றை அதுவே அரித்துவிடாதா?” என்றான் பாலு. “அப்படி அரிக்காமல் இருக்கத்தான் வயிற்றின் உட்சுவர் முழுவதும், மியூகஸ் எனப்படும் சளி மாதிரியான சவ்வுத்திரை பரப்பியிருக்கிறது. நாம் மிகவும் காரமாகவோ, உடலுக்கு ஒவ்வாததாகவோ உணவு சாப்பிட்டு, அந்த சவ்வு அழிகிற மாதிரி செய்யும்போது, அந்த இடம் புண்ணாகிறது. அதைத்தான் அல்சர் என்கிறோம்” என்றார் மாமா.
ஒவ்வொரு கட்டத்திலும், உணவு திடப் பொருளாக இருந்ததிலிருந்து மாறி கூழாக திரவப் பொருளாகிக் கொண்டே போகிறது. வயிற்றுக்கு அடுத்த இடம் சிறு குடல், பெருங்குடல். சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் உணவுக் கூழ் சிறு குடலுக்குச் செல்லும். குடல் சுவர்கள் வழியே உணவு சத்துகள் எல்லாம் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. வாயில் தொடங்கி உணவுக் குழாய், வயிறு, சிறு குடல் வரை உணவிலிருந்து எல்லா சத்துகளும் செரிக்கப்பட்டபின், எஞ்சிய கழிவு பெருங்குடலில் சேருகிறது. கடைசியில் அதுதான் மலமாகிறது.
“நான் நின்று கொண்டிருந்தால் வாயிலிருந்து வயிற்றுக்கு உணவு புவி ஈர்ப்பு விசையில் போய் சேர்ந்துவிடும். ஆனால், படுத்துக் கொண்டிருந்தால் கூட எப்படி உணவு மேலிருந்து கீழ் வரைக்கும் போய்ச் சேருகிறது?”என்று விசித்திரமான ஒரு கேள்வியை கேட்டான் பாலு.
“மண் புழு, கம்பளிப் பூச்சி நகரும்போது சுருங்கி சுருங்கி விரிந்து முன்னே போகும். அது மாதிரி நம் உடலுக்குள் இருக்கும் ஜீரண உறுப்புகளின் தசைகள் அலை மாதிரி சுருங்கி சுருங்கி விரிகின்றன. அப்போது உணவு ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தள்ளப்படுகிறது.” என்றார் மாமா.
உணவு செரிப்பதற்கு இந்த உறுப்புகள் மட்டுமல்ல, மண்ணீரல், கல்லீரல், கணையம் எல்லாமே பங்களிப்பதாக மாமா சொன்னார். ஒவ்வொன்றிலிருந்தும் விதவிதமான சுரப்புகள் வருகின்றன. அந்தச் சுரப்புகள்தான் உணவில் இருக்கும் விட்டமின், புரதம் கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாவற்றையும் தனித்தனியாகப் பிரித்து, ரத்தத்துக்கு அனுப்பி வைக்கின்றனவாம்.
கேட்க கேட்க பிரமிப்பாக இருந்தது. நம் உடலுக்கு உள்ளே போய் இதெல்லாம் எப்படி நடக்கிறது என்று பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். 'ஹனி, ஐ ஷ்ரங்க் தி கிட்ஸ்' படத்தில் வருகிற மாதிரி நான் குட்டிப் பூச்சி சைசுக்கு ஆகிவிடவேண்டும். அப்புறம் பாலுவின் வாய் வழியே நுழைந்து, வயிறு குடலையெல்லாம் பார்த்துவிட்டு பெருங்குடலுக்குப் போகாமல் திரும்பி விட வேண்டும் என்று, என் கற்பனையை சொன்னேன். “நானும் மினி பாலுவாகி வருவேன். ரெண்டு பேரும் மாமா உடலுக்குள் போய் பார்த்துவிட்டு வரலாம்” என்றான் பாலு.
மாமா சிரித்தார். “இந்தக் கற்பனையை ஏற்கெனவே சினிமாவாக எடுத்துவிட்டார்கள். நாவலும் வந்திருக்கிறது. ஃபண்டாஸ்டிக் வாயேஜ் என்று பெயர்.” என்றார். உடனே வாலு, “ஆட்டொ கிளமெண்ட், ஜெரோம் பிக்ஸ்பி எழுதின கதை. ஹாரி க்ளீனர் திரைக்கதை எழுதினார். 51 வருடம் முன்னால் வந்த படம்” என்றது. “படம் வந்தபோதே அது நாவலாகவும் வரவேண்டும் என்று விரும்பினார்கள். பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஐசக் அசிமோவ் நாவலை எழுதினார். அது காமிக் புக்காகவும் வந்திருக்கிறது.” என்றார் மாமா.
“என்ன கதை? குடலுக்குள் நீச்சல் அடித்துப் பார்க்கும் கதையா?” என்றேன்.
“இல்லை. மனிதர்களை மைக்ரோமீட்டர் அளவு சுருக்கும் வழிமுறையை, ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார். ஒரு மணி நேரம் கழித்து சுருக்கியவர்கள் பழையபடி பெரிதாகிவிடுவார்கள். அந்த விஞ்ஞானிக்கு மூளையில் ரத்தம் கசிந்து கட்டியாகிவிடுகிறது. அவரைக் காப்பாற்ற, ஐந்து பேரை மினியாக்கி, ஒரு மினி கப்பலையும் செய்து எல்லாரையும் இஞ்செக்ஷன் வழியே விஞ்ஞானியின் ரத்த நாளத்தில் செலுத்திவிடுகிறார்கள். உடலுக்குள் ரத்த நாளங்கள் வழியே அவர்கள் மூளைக்குப் போய் கட்டியை உடைத்து, விஞ்ஞானியைக் காப்பாற்றிவிட்டு திரும்பும் சாகசம்தான் கதை. தமிழில் கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது” என்றார் மாமா.
“இப்படிக் கற்பனை செய்து என்ன பயன்? இதுவரை அந்த மாதிரி மனிதர்கள் குட்டியாக்கி உடலுக்குள் போய் பார்க்க எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லையே? எல்லாம் நான்தான் பெரியவனாகிக் கண்டுபிடிக்க வேண்டும் போலிருக்கிறது.” என்று அலுத்துக் கொண்டான் பாலு.
“இந்த மாதிரி கற்பனைகள்தான் பல கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்திருக்கின்றன. நாம் உடலுக்குள்ளே எதற்குப் போக வேண்டும்? உடலின் எந்த பாகத்துக்கும் கேமராவையும் கம்பியையும் உள்ளே அனுப்பிப் பார்க்கும் ஸ்கோபி முறையைக் கண்டு பிடித்திருக்கிறோமே?” என்றார் மாமா.
“அப்ப, எழுத்தாளருக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிக்கும் கற்பனை ரொம்ப அவசியம் இல்லையா?” என்றேன். ஆமாம் என்றார் மாமா.
ஃபண்டாஸ்டிக் வாயேஜ் புத்தகத்தைத் தேடி எல்லாரும் நூலகத்துக்குப் புறப்பட்டோம்.
வாலுபீடியா 1: உலக ஜீரண ஆரோக்கிய நாள் - மே 29. அறுபது வருடம் முன்னால், உலகத்தின் ஜீரணவியல் நிபுணர்களின் முதல் மாநாடு நடந்த நாள். இந்த வருட தீம்: வயிற்றுப் புண் பற்றிய விழிப்புணர்வு.
வாலுபீடியா 2: விஞ்ஞான எழுத்தாளரான ஐசக் அசிமோவ், 500 புத்தகங்களும் 90ஆயிரம் கடிதங்களும் எழுதியவர். கடவுள், மதம், தேசம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர். முழு உலகமும் ஒரே நாடாக வேண்டும், அதிக மக்கள்தொகை உலகத்தையே அழித்துவிடும் என்பவை அவர் கருத்துகள்.
