தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மதிப்பெண்கள் அளவுகோல் அல்ல

மதிப்பெண்கள் அளவுகோல் அல்ல

மதிப்பெண்கள் அளவுகோல் அல்ல


PUBLISHED ON : மே 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் நாசாவின் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபடி, உயர்ந்த சம்பளத்தில் வாழ்ந்து வந்தவர் பிரேமானந்த சேதுராஜன். ஒருகட்டத்தில் வேலையை உதறிவிட்டு, 'லெட்ஸ் மேக் இன்ஜினீயரிங் சிம்பிள்' (Let's make engineering simple) என்ற யூடியூப் சேனலை நிறுவினார். இந்தச் சேனல் மிகப் பிரபலமாகியுள்ளது. எளிமையாக, புதிய அணுகுமுறையோடு அறிவியலைச் சொல்லித் தருவதால், தமிழகத்தின் பல பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இவரைத் தேடுகிறார்கள்.

உங்க ஆரம்ப காலகட்டம்?

“ராமநாதபுரத்துல தமிழ்வழிக் கல்வியிலதான் படிச்சேன். எல்லாரையும் போல, மார்க்குக்காகத்தான் படிச்சேன். அறிவியல், கணிதம் இதுல எந்த ஃபார்முலாவை கேட்டாலும், எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அதை எங்க பயன்படுத்தணும்னு தெரியாது. மார்க்குக்காக படிச்சாலும், நான் அறிவியல் துறையில எப்படியாவது நல்லா முன்னுக்கு வரணும்னு, என்னோட அப்பா பல முயற்சிகள் செஞ்சாரு. அவருக்கு, மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது அதிக மரியாதை. அப்பாவுக்கு படிப்பு இல்ல, அதனால என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சார்.”

உங்களுடைய திருப்புமுனை?

“ஒவ்வொரு கோடை விடுமுறையின்போது, என்னை கடைகளில் வேலைக்கு அனுப்புவாரு எங்க அப்பா. 7வது படிக்கும்போது, மெக்கானிக் கடையில் வேலைக்கு அனுப்பினாரு, அந்த வேலை எனக்குப் பிடிக்கல. அப்புறம் விவசாயத்துக்கு அனுப்பினாரு. 9வதுல எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடையில வேலைக்கு அனுப்பினாரு, அங்கதான் எனக்கு பெரிய திருப்புமுனை ஏற்பட்டுச்சு.

அந்த வேலை ரொம்ப பிடிச்சுடுச்சு, விடுமுறை வரும்போதெல்லாம், அங்க வேலைக்கு போயிடுவேன். அப்படி வந்த ஆர்வத்தால, பொறியியல் படிக்கணும்னும்போது, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவைத் தேர்வு செஞ்சேன்.

அதுக்கு அப்புறம், நாட்கள் வேகமா ஓடிச்சு, நின்னு நிதானமா படிக்க நேரமில்லாம, நம்ப கல்வித்திட்டம் என்னை மாதிரியே நிறைய பேரை ஓட வச்சது. மதிப்பெண்கள் எடுத்தாச்சுன்னா, நல்ல வேலை நிச்சயம். நல்ல வேலையும் கிடைச்சுது.

எனக்கு பிடிச்ச துறைங்கிறதால, ஈடுபாட்டோட வேலை செஞ்சேன். அமெரிக்கா போகும் வாய்ப்பு வந்தாச்சு. போனேன்.”

குழந்தைகளோட எப்ப வேலை ஆரம்பிச்சீங்க?

“படிக்கற காலத்துலேயே ஆரம்பிச்சுட்டேன். எனக்கு குழந்தைங்கள ரொம்ப பிடிக்கும். அதனால அப்பப்ப நான் பள்ளிகளுக்குப் போய், எனக்குத் தெரிஞ்ச எளிமையான அறிவியல், கணக்கு விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பேன். குழந்தைகளுக்குப் பிடிக்கறதாலேயே, எனக்கு எந்த ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் அதிகம்.

மீண்டும் சென்னை வந்துட்டீங்களே, ஏன்?

“அமெரிக்கா போனதும்தான், ஓர் உண்மை புரிஞ்சுது. எனக்கு மட்டுமல்ல; நிறைய பேருக்கு 'நமக்கு என்ன தெரியும்? நாம எங்க இருக்கோம்'னு, ஒரு குழப்பம் மண்டையக் குடையும். படிச்ச பாடத்துக்கும், அதைப் பயன்படுத்தும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அறிவியலை கத்துக்க ஆரம்பிச்சேன். நிறைய புதிய விஷயங்கள தேடி மத்தவங்ககிட்டயிருந்து புரிஞ்சுக்கிட்டேன்.

நான் கத்துக்கிட்ட விஷயத்தை, நம்மூர் குழந்தைகளுக்குச் சொல்ல நினைச்சேன். ஏன்னா, தமிழ் மொழியில சரியான அறிவியல் புத்தகங்கள் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. புத்தகங்கள் எழுதுறது அவ்வளவு எளிமையில்ல. இப்ப நாம டிஜிட்டல் யுகத்துல இருக்கோம். அமெரிக்காவுல மூணு வருஷத்துக்கு முன்னாடியே, யூடியூப் ரொம்ப பாப்புலர். இந்தியாவுல அது சீக்கிரம் பிரபலமாகும்னு நம்பினேன். அதனால எளிமையான முறையில, முதன்முதல்ல கேமரா முன்னாடி பேசி, யூடியூப் பதிவேற்றினேன். இதை குழந்தைகளுக்கு, ஆசிரியர்களுக்கு புரியற மாதிரி செஞ்சபோது, நிறைய பேர் பாராட்டினாங்க. இதனை இன்னும் விரிவுபடுத்தணும்னு சென்னை வந்துட்டேன்.”

மாணவர்களோட ஈடுபாடு எப்படி இருக்கு?

“பிரமாதமாக இருக்கு. இன்னிக்கு என்னோட சேர்ந்து இந்த வேலையை செய்ய, நல்ல இளைஞர்கள் சப்போர்ட் இருக்கு. இப்ப LMES அகாடெமியா உருவாகியிருக்கு. வெறும் மதிப்பெண்கள் நாட்டை வளமாக்காது, கண்டுபிடிப்புகள்தான் நாட்டை வளமாக்கும். அதுக்கு அடித்தளம் முறையான தெளிவான கல்வி. அதைக் கொடுக்கறது தான் என்னோட கனவு.”

பிரேமானந்த சேதுராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us