PUBLISHED ON : மே 22, 2017
மென்பொருள் தயாரிப்பு மூலம், உலகை இணைக்க முடியும் என்று 90களின் கடைசிவரை பலரும் நம்பவில்லை. இப்போதைய இளைஞர்களுக்குக் கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள், அன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்ததில்லை. இன்று நாம் தேடும் விஷயங்கள் விரல் நுனியில் கிடைப்பது போல் அப்போது இல்லை. ஆனால், தகவல்களை கொண்டு சேர்ப்பதில் மென்பொருளின் பங்கு குறித்து, ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும் என நம்பினார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
இதன் மூலம், வருங்காலத் தலைமுறையினருக்குப் பாதையை உருவாக்கலாம் என்பதே அவர் கனவு. பின்னர் அவர் மேற்கொண்ட முயற்சியால், பல புதிய மென்பொருள்களைத் தயாரித்து, உலகை அசர வைத்தார். கூகுளின் வளர்ச்சியிலும், பல நாடுகளுக்கு எளிமையாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்க உதவும் முன்னேற்றங்களிலும், தம்மை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் தனித்துவத்தை அடைந்தார். இத்தகைய தொடர் முயற்சியாலும், உழைப்பாலும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தவர்தான் சுந்தர் பிச்சை.
நாம் வாழும் சூழல்தான், நாம் யாராக மாறப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும். சுந்தர் பிச்சையின் குடும்பச் சூழல், அவருடைய இளமைக்கால அனுபவங்கள்தான் அவருடைய கனவுகளைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.
--சென்னையில் 80களின் நடுத்தர குடும்பம் எப்படிப்பட்ட சூழலில் இருக்குமோ, அப்படித்தான் சுந்தரின் குடும்பமும் இருந்தது. நடுத்தர குடும்பங்களுக்கு படிப்புதான் ஏணிப்படி. சுந்தர், படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
சுந்தரின் தந்தை, ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணி செய்தார். ஒவ்வொரு நாளும் இரவு உணவு உண்ணும்போது, குழந்தைகளுக்கு அன்று பணியில் ஏற்பட்ட பிரச்னைகள், அதை எப்படி எதிர்கொண்டார் என்பவற்றை விவரிப்பாராம். அப்பாவின் கதைகள்தான், சுந்தருக்கு மின்சாதனங்கள், எலக்ட்ரானிக் கருவிகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின.
அவருடைய வீட்டில் முதன்முதலில் வாங்கிய தொலைபேசி, அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. தொடர்புகளை எளிமைப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியில் அவர் இறங்கினார். அது மட்டுமல்லாமல், தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரத்திறன் இவருக்கு இருந்தது. --பள்ளிப்படிப்பை முடித்து ஐ.ஐ.டி. கரக்பூரில் உலோக பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இப்போது போல எளிமையாக பலராலும் அமெரிக்கா சென்று
எம்.எஸ். படிக்க முடியாத காலகட்டம் அது. இவருடைய எம்.எஸ். படிப்பிற்கு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் உதவித்தொகை வழங்க முன்வந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அமெரிக்காவிற்குப் பறந்தார் சுந்தர் பிச்சை. கனவுகளுக்கு இறக்கை முளைத்தால் எப்படியிருக்கும்? சுந்தரின் கனவுகளுக்கு புதிய திறவுகோல் கிடைத்தது. பல நாடுகளின் மாணவர்கள், ஆசிரியர்களின் ஊக்கம் அவரை மேலும் செம்மைப்படுத்தியது. மென்பொருளை வைத்து என்ன செய்ய முடியும்? மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படும் வகையில் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தொடங்கினார்.
எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து சென்றதால், சாதாரண மனிதர்களின் தேவைகள் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனை கூகுள் நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். கூகுள் க்ரோம் தயாரிப்பு இவருக்கு முக்கிய திருப்புமுனை. இதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் வருமானம் மட்டும் உயரவில்லை, கூகுளின் பயனாளிகள் பன்மடங்கு அதிகரித்தனர். குறிப்பாக இந்தியாவில் கூகுள் க்ரோம் மூலம் இணைய சேவையை பலராலும் நல்ல வேகத்தில் பெற முடிந்தது. அதனால், அதிக இளைஞர்கள் கொண்ட நாடான இந்தியாவில் கூகுள் எல்லா தரப்பு மக்களிடமும் செல்ல ஆரம்பித்தது.
இது மட்டுமல்லாமல் யூடியூப், கூகுள் மொழிபெயர்ப்பு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உள்ளிட்ட பல பிரபலமான தயாரிப்புகளை உருவாக்கியிருக்கிறார். டிஜிட்டல் பொருட்களைப் தயாரிப்பதில், மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுந்தர். வருங்காலத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மென்பொருட்களையும் செயலிகளையும் உருவாக்குவது தான் இலக்கு என்கிறார். அதேபோல், ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள் சேவைகளை இணைத்து, தகவல் தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தினார்.
தோல்வி மீதான பயம் போனாலே நாம் அடைய விரும்பிய இடத்திற்கு செல்லலாம் என்கிறார் சுந்தர் பிச்சை.
