தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொகலாய கம்பீரம் பேசும் ஃபதேபூர் சிக்ரி!

மொகலாய கம்பீரம் பேசும் ஃபதேபூர் சிக்ரி!

மொகலாய கம்பீரம் பேசும் ஃபதேபூர் சிக்ரி!


PUBLISHED ON : மே 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்ரா என்றவுடன், எல்லாரும் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அதே ஆக்ராவுக்குச் சற்றுத்தொலைவில் மொகலாயக் கட்டடக் கலையின் அற்புதமான சின்னமொன்றும் இருக்கிறது.

அந்த இடத்தின் பெயர், ஃபதேபூர் சிக்ரி. ஆக்ராவிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அக்பர் பார்த்துப் பார்த்து உருவாக்கிய வெற்றி நகரம்!

ஆரம்பத்தில் இந்த நகருக்கு 'ஃபதேஹாபாத்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அது 'ஃபதேபூர் சிக்ரி' என்று மாறியது. பெர்சிய மொழியில் 'ஃபதே' என்றால், வெற்றி என்று பொருள். அக்பர் தனது வெற்றிகளின் அடையாளமாக, 1569ல் இந்த நகரை நிர்மாணித்தார். 1571 முதல் 1585 வரை இங்கிருந்துதான் அவர் ஆட்சிசெய்தார்.

ஆக்ராவுக்குச் செல்கிறவர்கள், அங்கிருந்து ஃபதேபூர் சிக்ரிக்குச் செல்லப் பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. சுமார் ஒரு மணிநேரத்துக்குள் சென்றுவிடலாம்.

வாகனத்திலிருந்து இறங்கி, ஃபதேபூர் சிக்ரியை நோக்கி நடக்கையில், சில நிமிடங்களில் நாம் பிரமித்து நின்றுவிடுவது உறுதி. அதற்கு காரணம், 'புலந்த் தர்வாஜா' (Buland Darwaza).

ஆங்கிலத்தில் இதனை 'Gate of Magnificence'. கம்பீரக் கதவு/நுழைவாயில் என்று அழைக்கிறார்கள். அதனை நேரில் பார்க்கும்போது, இதைவிடச் சிறந்த ஒரு பெயர் இருக்கவே முடியாது என்றுதான் தோன்றும்.

புலந்த் தர்வாஜாவின் உயரமும் சரி, சற்றே மேடான பகுதியில் அது அமைக்கப்பட்டிருக்கும் விதமும் சரி, கட்டட அமைப்பும் சரி, பார்க்கிறவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இப்படியொரு கம்பீரமான நுழைவாயிலை, நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது!

நுழைவாயிலைக் கடந்து உள்ளே போனால், ஒரு மசூதியைக் காண்கிறோம். அதைச் சுற்றிலும் பிரமிப்பூட்டும் கலை நுணுக்கங்கள்.

அங்கிருந்து சிறிதுதூரம் நடந்தால், அரண்மனைகள், மாளிகைகள் தொடங்குகின்றன. பெரும்பாலான கட்டடங்கள், இன்றைக்கும் முழுமையாகவே காணக்கிடைப்பது வியப்புதான்.

ஒன்பது ரத்தினங்கள்

ஃபதேபூர் சிக்ரியில்தான், அக்பரின் சபையில் புகழ்பெற்ற ஒன்பது ரத்தினங்கள் இருந்திருக்கிறார்கள். நமக்கு நன்கு தெரிந்த பீர்பால், தான்சேனில் தொடங்கி, ராஜா தோடர் மால், அபுல்-ஃபசல் இப்ன் முபாரக், ராஜா மான் சிங் என்று, பல மேதைகள் நடமாடிய இடம் இது.

இங்குள்ள கட்டடங்கள் அனைத்தையும் சும்மா பார்த்து முடிக்கவே, சில மணிநேரங்கள் தேவைப்படும். அவற்றின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொண்டு பார்க்கவேண்டுமென்றால், ஒரு நாள்கூடப் போதாது.

ஃபதேபூர் சிக்ரியின் கட்டடங்கள் ஒவ்வொன்றையும், ஒலிவடிவில் விளக்குகிற ஆடியோ வழிகாட்டியொன்று இங்கே கிடைக்கிறது. இந்தக் கருவியைக் காதில் பொருத்திக் கொண்டால், நாம் நிற்கும் கட்டடத்தின் வரலாற்றுப் பின்னணியை, கட்டுமானச் சிறப்பைத் தெளிவாக விளக்குகிறது.

அவசியம் பார்க்கவேண்டிய சில முக்கியமான இடங்கள்:

இபாதத் கானா: அக்பர் உண்டாக்கிய தீன்-இ-லாஹிக்கான தொடக்க களம்

பாஞ்ச் மஹால்: அழகிய ஐந்து மாடி மாளிகை

அரசியரின் மாளிகைகள், அந்தப்புரங்கள்

பீர்பால் மாளிகை: பொதுமக்கள், முக்கிய நபர்களை அரசர் சந்திக்கும் திவான்- ஈ-ஆம், திவான்-ஈ-காஸ் கட்டடங்கள்

அழகிய பூந்தோட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகள்

கைவிடப்பட்டது ஏன்?

எல்லாம் நன்கு அமைந்திருந்த ஃபதேபூர் சிக்ரியில், தண்ணீர் வசதிமட்டும் சரியானபடி கிடைக்கவில்லை. அதற்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் நல்ல பலனளிக்கவில்லை. ஒரு பேரரசின் தலைநகரில் வாழ்கிற, வந்துசெல்லும் மக்கள்தொகையை ஃபதேபூர் சிக்ரியால் சமாளிக்க இயலவில்லை.

இதனாலும், வேறு சில அரசியல் காரணங்களாலும், 1585ல் அக்பர் தனது தலைநகரத்தை லாகூருக்கு மாற்றினார். அதன்பிறகு ஃபதேபூர் சிக்ரி கைவிடப்பட்டது.

அதேசமயம், இன்றைக்கும் ஃபதேபூர் சிக்ரியின் தெருக்களில் நடக்கும்போது, அன்றைய மொகலாய நகரமொன்றில் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது. அதற்காகவேனும், ஆக்ராவுக்குச் செல்லும்போது, அவசியம் இந்தச் சிறுநகரத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

பயண வழி

ஃபதேபூர் சிக்ரிக்குச் செல்ல விரும்புவோர், முதலில் டில்லி அல்லது ஆக்ரா செல்லவேண்டும். அங்கிருந்து வசதியான பேருந்துகள் இருக்கின்றன. கார் அல்லது ஆட்டோவிலும் சென்று திரும்பலாம். நீங்கள் எங்கிருந்து புறப்படுகிறீர்கள், எதன்மூலம் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, இதற்கு இருநூறு ரூபாயிலிருந்து சில ஆயிரம் ரூபாய்வரைகூடச் செலவாகலாம்.

இங்கேயே தங்கும் வசதியும் உள்ளது. அதை விரும்பாவிட்டால், ஆக்ராவில் தங்கிக்கொள்ளலாம். ஓரளவு வசதியான விடுதி அறைகளின் கட்டணம் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாயில் தொடங்குகிறது

ஃபதேபூர் சிக்ரியில் எந்தப்பக்கம் திரும்பினாலும், 'சுற்றுலா வழிகாட்டி'களின் தொல்லை. ஆயிரக்கணக்கில் ஆரம்பித்துப் பேரம் பேசி, ஐம்பது ரூபாய்வரை இறங்கி வருகிறார்கள். விரும்பினால் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், காசை அள்ளிக்கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள். மாறாக, அரசு வழங்கும் ஆடியோ வழிகாட்டி சிறப்பாக உள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் நம்பகமானவை, கட்டணமும் நியாயமானதாகவும் இருக்கிறது. (ஆங்கிலம், ஹிந்தி இரு மொழிகளிலும் கிடைக்கிறது.)

இங்கே சரியான உணவு வசதிகள் இல்லை. ஆக்ரா அல்லது டில்லியிலிருந்தே சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு வந்துவிடுவது நல்லது. அதேசமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில், குப்பை போடாமல் கவனமாக இருங்கள்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us