PUBLISHED ON : ஏப் 02, 2018

சாம் மானெக்ஷா
3.4.1914 - 27.6.2008
அமிர்தசரஸ், பஞ்சாப்
1942, இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய ராணுவத்தின் எல்லைப் படையில் இளம் கேப்டனாக பர்மாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கே, ஜப்பானுக்கு எதிரான படைப்பிரிவை, படைத் தளபதியாக இருந்து வழி நடத்தினார். அந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயங்களையும் பொருட்படுத்தாமல் வெற்றி கிடைக்கும் வரை போராடினார். போரில் மிக மோசமாகக் காயமடைந்து இருந்த அவரைப் பார்த்த மேஜர் ஜெனரல், போர்முனையிலேயே தனது பதக்கததைக் கழற்றி அவருக்கு அணிவித்தார். இத்தகைய வீர தீர புகழுக்குரியவர் படைத்தளபதி சாம் ஹோர்முஸ்ஜி ஃபிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்ஷா (Sam Hormusji Framji Jamshedji Manekshaw).
இங்கிலாந்து சென்று மருத்துவம் பயில வேண்டுமென்பது அவரது ஆசை. அதற்கு அவரது தந்தை மறுப்புத் தெரிவித்ததால், டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் விண்ணப்பித்துத் தேர்வானார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், எல்லைக்காவல் படைப்பிரிவில் சேர்ந்தார். 12 எல்லைப் படை ரைஃபிளில் சேர்வதற்கு முன், குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்குப் பயிற்சியாளராக இருந்தார். அங்கே வீரர்கள் இவரை 'சாம் பகதூர்' (துணிச்சல்காரர்) என்று அழைத்தனர்.
1948இல் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தது இவர்தான். 1971இல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, 14 நாட்களில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சரணடையச் செய்தார்; வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.
இந்திய ராணுவத்துக்கும் நாட்டுக்கும் தன்னலமற்ற சேவை புரிந்த மானெக்ஷா, இரண்டாம் உலகப் போரின் முடிவில், 10,000 போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காகவும் உதவி இருக்கிறார். 40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் 5 போர்களைச் சந்தித்து, கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக உயர்ந்தார். இந்திய ராணுவத்தின் பெருமை மிகு நட்சத்திரமாக நினைவுகூரப்படுகிறார் மானெக்ஷா!
'எமது தேசத்தின் மீட்பர்' என, மானெக்ஷாவை வங்கதேசத்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
சிறப்புகள்:
1968 - பத்ம பூஷண் விருது
1972 - பத்ம விபூஷண் விருது
1973 - ஃபீல்ட் மார்ஷல் ரேங்க்
