தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/என் சைக்கிளை பிடிய்யா!

என் சைக்கிளை பிடிய்யா!

என் சைக்கிளை பிடிய்யா!


PUBLISHED ON : ஜன 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலு ஏதாவது ஜோக் கேட்டுவிட்டால், அதை நினைத்து நினைத்து போகிற இடத்தில் எல்லாம் சிரித்துக்கொண்டே இருப்பான். “எதுக்குடா திடீர்திடீர்னு சிரிக்கறே?” என்று கேட்டால், உடனே பதில் சொல்லமாட்டான். அப்புறம் மெதுவாக அந்த ஜோக்கை அவன் சொல்லும்போது, நமக்குச் சிரிப்பே வராமல் போய்விடும்.

இன்றைக்கும் அப்படி திடீர்திடீரென்று சிரித்துக்கொண்டே இருந்தான். கேட்டதும் மெதுவாக அவன் வகுப்புத் தோழன் அஸ்வின் என்ன சொன்னான் தெரியுமா என்று கேட்டான். “அப்படி என்னடா சொன்னான்?” என்றேன். “என் சைக்கிளைப் பிடிய்யா என்றான் அஸ்வின்.” என்றான் பாலு. “நீ பிடிக்கவேண்டியதுதானே? கீழே விழவிட்டுட்டியா?” என்றேன். பாலுவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. “உனக்கும் புரியலியா?” என்றான்.

“எனக்குப் புரிகிறது. இது பழைய்ய்ய்ய்ய ஜோக்” என்றார் ஞாநி மாமா. “நான் உன் வயசில் இருந்த காலத்திலேயே இருக்கிறது. என்சைக்ளோபீடியா என்ற ஆங்கிலச் சொல்லை 'என் சைக்கிளைப் பிடிய்யா' என்று சிலர் தமாஷாகச் சொல்வார்கள். அஸ்வின் அப்படி சொல்லியிருப்பான்” என்றார் மாமா. “அவன் தமாஷாகச் சொல்லவில்லை. நிஜமாகவே அப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சொன்னான். அதுதான் தமாஷ்.” என்றான் பாலு.

“என்சைக்ளோபீடியா என்றால், தகவல் களஞ்சியம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது என்ன மொழி?” என்று கேட்டான் பாலு. மாமா விளக்கினார். பழந்தமிழ் மாதிரி, அது பழைய கிரேக்க மொழி. 'என்சைக்ளோ' என்றால் சுழற்சி, திரும்பத்திரும்பத் தேவைப்படுகிற என்று அர்த்தமாம். 'பீடியா' என்றால் கல்வி என்று ஓர் அர்த்தம். குழந்தையை வளர்க்கத் தேவைப்படும் அறிவு என்று இன்னொரு அர்த்தம். என்சைக்ளோபீடியா என்பது 'முழுமையான அறிவு' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

“டிக்ஷனரிக்கும் என்சைக்ளோபீடியாவுக்கும் வித்தியாசம் உள்ளது. டிக்ஷ்னரி எனப்படும் அகராதி சொற்களின் தொகுப்பு. என்சைக்ளோபீடியா என்கிற களஞ்சியம் தகவல்களின் தொகுப்பு.” என்றார் மாமா. களஞ்சியங்களை உருவாக்குவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆரம்பமாகிவிட்டது. ஆனால், அழியாமல் தப்பி நமக்குக் கிடைத்திருப்பது ரோமானிய அறிஞர் பிளினி, முதல் நூற்றாண்டில் தொகுத்த நூல்தான் என்றது வாலு. அதன் பின் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கான தகவல்களுடன் களஞ்சியம் உருவாக்குவதை பலர் செய்திருக்கிறார்கள் என்று பட்டியல் கொடுத்தது வாலு.

“எல்ேலாரும் ஆண்களாகவே இருக்கிறார்களே, பெண்கள் இதில் ஈடுபடவில்லையா?” என்று கேட்டேன். இருந்தார்கள் என்றார் மாமா. ஜெர்மனியில் 1098 முதல் 1179 வரை வாழ்ந்த கிறிஸ்தவ பெண் துறவி ஹில்டேகார்ட் என்பவர், மருத்துவம், இசை, உயிரியல் ஆகிய துறைகளில் மிக முக்கியமான களஞ்சியங்களை உருவாக்கினார். அவர் பெயர் ஒரு குட்டி கிரகத்துக்கு வைக்கப்பட்டது. இன்னொரு பெண் ஹெராடும் (1130 --1195) துறவிதான். இவர் வெறுமனே களஞ்சியத்தைத் தொகுக்கவில்லை. அதில் 300க்கும் மேற்பட்ட படங்களையும் இணைத்து தயாரித்தார்.

என்சைக்ளோபீடியா தயாரிப்பதைக் கடந்த 800 ஆண்டுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தனியார் அமைப்புகளும் செய்துவருகின்றன. கடைசியாக 17 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு என்சைக்ளோபீடியாதான் இன்று நான், பாலு உட்பட எல்லா இளைய தலைமுறையினருக்கும் பிடித்தமான களஞ்சியமாக இருக்கிறது. அதுதான் விக்கிபீடியா. இது இணையத்தில் இருக்கும் களஞ்சியம்.

விக்கி என்பது ஹவாய் மொழி. வேகமாக என்று அர்த்தம். இணையத்தில் ஒருத்தர் மட்டும் எழுதாமல் கூட்டாக பலர் எழுதும் முறைக்கு விக்கி என்று பெயர் வந்துவிட்டது. விக்கிபீடியாவில் ஒரே கட்டுரையில் பலர் போய் எழுதி திருத்தங்கள் செய்ய முடியுமாம். அதற்கு விதிகள் இருக்கின்றன.

“இப்படி யாரும் திருத்த முடியுமென்றால், நிறைய தப்புத் தப்பான தகவல்களும் உள்ளே வந்துவிடும் இல்லையா?” என்று கேட்டேன். “வரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை அவ்வளவு மோசம் இல்லை. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவுக்கு நிகரான நம்பகத்தன்மை விக்கிபீடியாவுக்கும் இருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது.”என்றார் மாமா.

சென்னையில் இந்த மாதம் நடக்கும் புத்தகக் காட்சிக்கு நானும் பாலுவும் தவறாமல் மாமாவுடன் போவோம். நிறையப் புத்தகங்கள் வாங்குவோம். “இது 41வது ஆண்டு. தொடங்கியது முதல் தவறாமல் நான் போகிறேன். ஒரே ஓராண்டுதான் உடல்நலக் குறைவால் போக முடியவில்லை.” என்றார் மாமா.

ஈரோடு புத்தகக் காட்சி நடத்துபவர்கள் பின்பற்றும் ஒரு சிறந்த நடைமுறையைப் பற்றி மாமா சொன்னார். புக் ஃபேர் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே அங்குள்ள நிறைய பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்களை விநியோகித்துவிடுகிறார்கள். அதில் தினசரி சேமித்து வரும் காசுகளை புக் ஃபேர் நடைபெறும்போது எடுத்து எண்ணிப் பார்த்தால் கணிசமாக இருக்கும். அதில் புத்தகங்கள் வாங்க ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த யோசனையை சென்னையிலும் பின்பற்றலாம்.

நானும் பாலுவும் சேமித்து வைத்த காசு தவிர, வீட்டில் “என் புக்ஃபேர் பட்ஜெட் எவ்வளவு?” என்று கேட்போம். இவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம் என்று சொன்னால் அப்பா அம்மாவிடம் அந்த பணத்தை வாங்கிக் கொண்டுவிடுவோம். அதில் நாங்கள் விரும்பும் புத்தகங்களை நாங்களே தேர்ந்தெடுத்து வாங்குவோம். அப்பா, அம்மா எங்களைக் கேட்காமல் தாங்களே வாங்கிக் கொடுக்கும் புத்தகங்களைப் படிக்கவே தோன்றாது.

நானாகத் தேர்வு செய்து வாங்கினால், நிச்சயம் படிக்காமல் இருக்கவே மாட்டேன். என் வகுப்புத் தோழர்களுக்குக்கூட இந்த ஐடியாவை சொல்லியிருக்கிறேன். எவ்வளவு பட்ஜெட் என்று பணத்தை வீட்டில் கேட்டு வாங்கிக் கொண்டு நாமாக அதைச் செலவழிக்கும் சந்தோஷமே தனி.

“இன்னும் கொஞ்ச நாட்களில் படிக்கிற பழக்கமே போய்விடும். எல்ேலாரும் பார்க்கிற பழக்கத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்கிறார்களே, அப்படி ஆகுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று மாமாவிடம் கேட்டேன்.

“நிச்சயம் படிக்கும் பழக்கம் போகாது. அச்சிட்ட புத்தகத்தை கையில் எடுத்து வாசிப்பதுதான் முன்பு இருந்த ஒரே வழி. இப்போது செல்போனிலேயே வாசிக்க முடிகிறது. மீடியம் மாறிக் கொண்டிருக்குமே ஒழிய படிப்பது அழியாது. பழைய அச்சு வடிவங்களும் முழுக்க அழியாது. கையில் புது புத்தகத்தை எடுத்து பேப்பர், மை வாசனையை நுகர்ந்து பார்த்து ரசித்து படிப்பதும், ரொம்பப் பழைய புத்தகத்தின் மக்கிய வாசனையை ரசிப்பதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நம்மைவிட முன்கூட்டியே நவீன சாதனங்களுக்கு சென்ற மேற்கத்திய நாடுகளில் இன்றும் கையில் அச்சிட்ட புத்தகத்தை எடுத்துப் படிப்போர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்நாட்டில் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகருக்கு விமானத்தில் சென்றபோதெல்லாம், அத்தனை பயணிகளும் ஆளுக்கொரு புத்தகம் படிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.” என்றார் மாமா.

“புத்தகமோ செல்போனோ எப்படியும் படிப்பது அழியாது.” என்றது வாலு.

வாலுபீடியா: விக்கிபீடியாவை ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர் இருவரும் ஜனவரி 15, 2001இல் தொடங்கினார்கள். இப்போது 299 மொழிகளில் விக்கிபீடியா இருக்கிறது. ஆங்கில விக்கிபீடியாவில் மொத்தம் 55,47,987 கட்டுரைகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us