PUBLISHED ON : டிச 09, 2019
உள்ளாட்சித் தேர்தல்கள், ஜனநாயக ஆட்சியமைப்பின் இன்றியமையாத அங்கம். அப்படியென்றால், எப்போதிலிருந்து இவை இந்தியாவில் அமலுக்கு வந்தன?
சுதந்திரத்திற்குப் பின்புதானா? அதுவரையில் மன்னராட்சியும், பிறகு ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் ஓங்கியிருந்ததால், தேர்தல்களே நடக்கவில்லையா?
நடந்தது. தேர்தல்கள் நடந்து, மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கிராமசபைகளில் தேர்ந்தெடுத்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்குச் சோழர் காலத்திலேயே கிடைத்துள்ளன: குடவோலை முறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்தது. அதே சமயம், மாநகராட்சி, ஊராட்சி போன்ற அமைப்புகளும், அவற்றின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களும், திடீரென 1947க்குப் பிறகு வந்துவிடவில்லை; 17ஆம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்தன.
மன்னராட்சியிலும் சரி, ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி, கிராமம், நகரம் ஆகிய பகுதிகளின் தலைவர்களிடமுள்ள அதிகாரம் குன்றி, மையத்திலிருக்கும் ஆட்சியிடம் அதிகரித்தது.
இதனால் மலைபோல் வளர்ந்தது அதிகாரிகளின் வேலைப்பளு மட்டுமல்ல; மக்களின் குறைகளும்தான். திருநெல்வேலியில் உள்ள விவசாயியின் பிரச்னைகளைக் கோல்கட்டா அறிவது எப்படி? சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்னையை டில்லி எப்படி நுணுக்கமாக அணுக முடியும்?
இக்கேள்விகளுக்குத் தீர்வாக உதயமானவைதான், உள்ளாட்சி அமைப்புகள்.
இதிலும் சென்னை தான் முன்னோடி. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசபட்டினத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை 1639இல் கட்டியது. அந்த ஆண்டில் இருந்தே, அசுரவேகத்தில் வளர்ந்து வரும் அக்குடியிருப்பை நிர்வகிக்க உள்ளாட்சி அமைப்பின் தேவையை உணர்ந்திருந்தனர்.
1687ஆம் ஆண்டில், மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷனை உருவாக்கினர். கோல்கட்டா, மும்பையின் மாநகராட்சிகள் 18ஆம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டன.
சென்னைக்கு 1882இல் மாநகராட்சி அதிகாரம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான ஆதாரத்தை ஏற்படுத்தியவர், ரிப்பன் பிரபு. அவர் பெயரால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே எழுப்பபட்ட 'ரிப்பன் கட்டடத்தில்'தான் இன்னமும் சென்னை மாநகராட்சி இயங்கி வருகிறது.
19ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு, கிராமசபைகளின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் பரவலாக வலுப்பெறத் தொடங்கின. உள்ளாட்சி அமைப்புகள் நகரம் சாராமல், மாகாணம் முழுவதும் பரவுவதும், மக்கள் தத்தம் ஊர், கிராமம் அல்லது ஒன்றியத்தின் பிரதிநிதிகளை அணுகி, பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதே சிறந்தது என்பதையும் உணர்ந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
இதற்காக, 1884இல் மதராஸ் லோக்கல் போர்டு சட்டத்தை இயற்றியது. 1920இல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டப்படி, 'மதராஸ் கிராம பஞ்சாயத்துகள் சட்டம்' அமலுக்கு வந்தது.
ஜனநாயக முறையிலான நிர்வாகத்திற்குரிய விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. 1935இல், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஒன்றியங்கள் மட்டுமன்றி, அவற்றின் அதிகாரமும் அதிகரித்தன.
