வானிலை ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிய வண்ணத்துப் பூச்சிகள்
வானிலை ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிய வண்ணத்துப் பூச்சிகள்
PUBLISHED ON : அக் 09, 2017

ரேடார் உதவியுடன் வானிலையை ஆராய்ந்து கொண்டிருந்த அமெரிக்க டென்வர் நகர ஆய்வாளர்கள் திடீரென வண்ணமயமான மேகம் ஒன்று உருவானது கண்டு குழம்பினர்.
பின்னர் அது வலசை போகும் பறவைகளோ என்று சந்தேகித்தனர். எனவே ரேடாரில் பதிவான காட்சிகளைப் படங்களாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பறவை ஆய்வாளர்களின் கருத்தைக் கேட்டனர். அதன் பின்னரே அவை இடம் பெயர்ந்து செல்லும் வண்ணத்துப் பூச்சிகள் என்று தெரியவந்தது.
70 மைல் தொலைவுக்குப் பரவியிருந்த இந்த வண்ணத்துப் பூச்சிகளின் படை அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியிலிருந்து மெக்சிகோ நாட்டிற்கு ஆண்டுதோறும் இடம் பெயரக் கூடியவையாம். வானிலை மாற்றத்தையும், பூக்கள் மலரும் காலநிலையையும் கண்டறிந்து அதற்கேற்ப அவை பயணிக்கின்றன. மேலும் காற்றின் திசையிலேயே இவை பயணிப்பதால் நீண்ட தூரம் செல்ல முடிகிறது. வண்ணப் பெண்கள் (painted lady butterflies) என்று அழைக்கப்படும் இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள், இலையுதிர் காலத்தில் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கும், பின்னர் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடம் பெயர்ந்து சென்று, பின்னர் வசந்த காலத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வருவதாக வண்ணத்துப் பூச்சிகளின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

