PUBLISHED ON : ஜூலை 11, 2016

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரியது வியாழன் கிரகம் (ஜூபிடர் - Jupiter). சூரியனிலிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் இந்தக் கிரகம் பூமியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்டது. வியாழன் கிரகத்தின் மேற்பரப்பு திடமாக இல்லாமல் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளது. இதனால் இது 'வாயுக் கிரகம்' என அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத் தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' (NASA), ஹப்பிள் (Hubble) தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் படத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் வியாழன் கிரகத்தின் தலைப் பகுதியில் ஓர் ஒளிக் கிரீடம் இருப்பது போல உள்ளது. வியாழன் கிரகத்தின் துருவங்களில் காணப்படும் 'அரோரா' (Aurora) என்ற ஒளிக்கோவையின் பிரதிபலிப்புதான் இது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தி உள்ள அணுவைவிட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது ஏற்படுகின்றன. இது வியாழன் கிரகத்தில் தீவிரமான காந்தப் புலத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வியாழன் கிரகத்தின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போலத் தோற்றமளிக்கிற இந்த ஒளிக்கோவை, அழகான காட்சியாகவும் தெரிகிறது.
