ஞாநி எழுதும் மாலுவின் டயரி (25) - தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (25) - தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
PUBLISHED ON : ஜூலை 04, 2016

“மாலு, ட்ரீட் கொடு. 25 நட்ஸ்மேனியா தினமும் ஒண்ணு வாங்கித் தரணும்” என்றபடி வந்தான் பாலு.
“எதுக்காக நான் ட்ரீட் தரணும்?” என்று கேட்டேன்.
“ஒவ்வொரு தடவையும் டயரி எழுத ஆரம்பிச்சா ஐந்து நாள், பத்து நாளைக்கப்புறம் எழுதாம விட்டுடுவே. இந்த தடவை முதல் முறையா தொடர்ந்து 25 வாரம் எழுதிட்டியே. அதுக்குத்தான். சில்வர் ஜுப்ளீ ஆஃப் மாலுவின் டயரியைக் கொண்டாட வேணாமா?” என்றான் பாலு.
“சரி சரி. முதல்ல எனக்கு ஏன் இதுக்கு சில்வர் ஜுப்ளின்னு பேருன்னு சொல்லு.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாலுவைக் கூப்பிட்டுக் கேட்டுக்க” என்றான் பாலு. “ என்ன விஷயம், எதுக்கு வாலு, நான்தான் பெரிய வாலு இருக்கேனே, என்னைக் கேளு” என்றார் கிண்டில் (kindle) படித்துக் கொண்டிருந்த ஞாநி மாமா. அதிலிருந்து தலையைத் திருப்பிச் சொன்னேன்.
“ஜுப்ளி என்ற விஷயமே யூத மதத்திலிருந்து வந்ததுதான். ஒரு சுழற்சியில் ஏழு ஆண்டுகள் வீதம் ஏழு முறை மொத்தம் 49 ஆனதும் அடுத்து வரும் 50 வது ஆண்டை கொண்டாட்ட ஜூப்ளி ஆண்டாக அவர்கள் வைத்திருந்தார்கள். முந்தைய ஆண்டு ஓய்வுக்கான ஆண்டு. ஜூப்ளி என்பதற்கு லத்தீன் மொழிப்படி இன்னொரு அர்த்தம் மகிழ்ச்சியில் உரக்கக் கூவுவது! அதன்படிதான் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்” என்றார் மாமா.
“ஆரம்பத்தில் 50க்கு மட்டுமாக இருந்ததை நாம் 25, 75 என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டோம்.”
'நம் ஊரில் 60ஆவது ஆண்டு நிறைவு, 80ஆவது பிறந்த நாள் இப்படித்தானே கொண்டாடுகிறோம் அது என்ன கணக்கு?' என்றேன். அறுபது ஆனதும் வருடங்கள் திரும்ப சுழற்சி முறையில் வருவதை நாம் பின்பற்றுவதால் 60ஐக் கொண்டாடுகிறோம். ஆயிரம் பிறை கண்டவர் என்ற அடிப்படையில் 80 வயது நிறைவைக் கொண்டாடுகிறோம்” என்றார் மாமா.
'இந்த 25, 50,75 ஜுபிளிகளுக்கெல்லாம் வெள்ளி, தங்கம், வைரம் என்றெல்லாம் வைப்பது எப்படி வந்தது?'
“எல்லாம் நகை ஆபரண ஆசையிலிருந்து வந்ததுதான். பழைய ரோமாபுரியிலேயே திருமண ஆண்டு விழா அன்று கணவன் மனைவிக்கு நகை வாங்கித்தரும் பழக்கம் இருந்திருக்கிறது. 25ஆவது ஆண்டு விழா என்றால் வெள்ளி நகை, 50 என்றால் தங்க நகை என்று இது பின்னால் பழக்கத்துக்கு வந்துவிட்டது” என்றார் மாமா.
'ஏன் வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என்று இதற்கு பெயர் சூட்டுகிறார்கள்? ஏன் செம்பு, பித்தளை, வெண்கலம், தகரம், அலுமினியம் என்றெல்லாம் சூட்டுவதில்லை?' என்று கேட்டேன்.
“லூசு” என்றான் பாலு. “எந்த மெட்டல் விலை அதிகமோ அதை ஜூப்ளிக்கு சூட்டினால்தான் மரியாதை. அது கூட உனக்குத் தெரியவில்லையா?” என்று சிரித்தான்.
“அப்படிப் பார்த்தால் ரோடியம் ( Rhodium) தான் இருப்பதிலேயே விலை அதிகமான மெட்டல். ஒரு கிலோ 2 லட்சத்து 40ஆயிரம் ரூபாய்க்கு மேல். அடுத்தடுத்த இடத்தில் இருப்பது பிளாட்டினமும் தங்கமும். சில ஆயிரம் ரோடியத்தை விடக் குறைவு. தங்கத்துக்கும் வெள்ளிக்கும் நடுவே பலாடியம், ஓஸ்மியம், ரேனியம், ருத்தேனியம், ஜெர்மனியம், பெரிலியம் என்று நிறைய விலை மதிப்புள்ள உலோகங்கள் இருக்கின்றன. நகைகள், ஆபரணங்கள் செய்ய உகந்ததாக இருக்கக்கூடிய உலோகங்களைத்தான் நமக்கு அதிகம் பிடித்திருக்கிறது” என்றார் மாமா.
“அப்படியானால் மீதி இருக்கும் விலை உயர்ந்த உலோகங்கள் எதற்குப் பயன்படுகின்றன?” என்று கேட்டான் பாலு.
“நிறைய தொழிற்துறையில் குறிப்பாக வேதியியல் ஆலைகளில் பயன்படுகின்றன. நீ எதிர்பாராத ஒரு இடத்தில் விலை உயர்ந்த பலாடியம் பயன்படுகிறது. உன் அப்பாவின் டூவிலரில் அது இருக்கிறது என்றால் நம்புவாயா?” என்றார் மாமா. “டூ வீலர் விடுகிற புகையில் இருக்கும் நச்சுகளைக் குறைத்து வெளியே அனுப்புவதற்காக வண்டியில் கேட்டலிக் கன்வர்ட்டர் என்ற பாகம் இருக்கிறது. அதில் பலாடியம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஏன், நான் தினமும் ரத்த சர்க்கரை அளவை சோதிப்பதற்காகப் பயன்படுத்தும் ஸ்ட்ரிப்பில் கூட பலாடியம் இருக்கிறது” என்றார் மாமா.
“அப்ப மாலுவுக்கு வெள்ளி விழா எடுப்பதா, பலாடியம் விழா எடுப்பதா?” என்று கேட்டது வாலு.
“நீங்கள் எல்லாம் சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால், அலுமினிய விழாதான் எடுத்திருப்பீர்கள். அப்போது அலுமினியம்தான் தங்கத்தை விட அந்தஸ்து மிகுந்த உலோகம். நெப்போலியன் கொடுத்த ஒரு விருந்தில் அவருக்கு நெருக்கமான விருந்தினர்களுக்கு எல்லாம் அலுமினிய பாத்திரங்களில்தான் உணவு பரிமாறப்பட்டது. அடுத்து கீழ்நிலையில் இருப்பவர்களுக்குத் தங்கத் தட்டு! அமெரிக்காவில் வாஷிங்டனில் கட்டிய ஒரு நினைவுச் சின்னத்தில் உச்சியில் சிகரமாக அலுமினியத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்” என்றார் மாமா.
'ஏன் அப்புறம் அலுமினியத்துக்கு அந்தஸ்து போய்விட்டது?' என்று கேட்டேன்.
“ஒரு பொருள் கிடைப்பது அபூர்வமாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு கூடுகிறது. அலுமினியம் பூமிக்கடியில் ஏராளமாக இருந்தாலும் அதை எடுத்து உருக்கி நிறையப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அப்போது இல்லை. பின்னர் அந்த தொழில்நுட்பம் வந்ததும், ஏராளமாக அலுமினியம் தயாரிக்கப்பட்டது. விலை குறைந்துவிட்டது. விமானங்கள் கூட அலுமினியத்தால்தான் செய்யப்படுகின்றன” என்றார் மாமா.
'நிறைய பயன்படுவதால் ஏன் ஒரு பொருளை குறைவாக மதிக்கவேண்டும்? உண்மையில் அதிகம் பேருக்குப் பயன்படுவதால், அதைத்தானே நாம் அதிகம் மதிக்கவேண்டும் இல்லையா?' என்று கேட்டேன்.
“உண்மைதான். அப்படிப் பார்த்தால், தகரம்தான் மிக அதிகமாக மிக அதிக பேருக்குப் பயன்பட்டுகொண்டிருக்கிறது.
அதைக் கலந்து உருவாக்கும் கூட்டுப் பொருட்கள் பல துறைகளில் பயன்படுகின்றன. பிளாஸ்டிக்கில் கூட தகரம் இருக்கிறது. பேட்டரியில் இருக்கிறது” என்றார் மாமா.
“அப்படியானால் நான் மாலுவுக்கு தகர விழா நடத்துகிறேன்” என்றான் பாலு.
“எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனால் உனக்கு நட்ஸ்மேனியாவுக்கு பதில் குச்சி ஐஸ்தான்” என்று சிரித்தேன். பாலு சிணுங்கினான்.
“புது சண்டையை ஆரம்பிக்காதீர்கள். உண்மையில் ஜூப்ளி கொண்டாட்டம் என்பது யூதர்களிடம் வெறும் கொண்டாட்டம் அல்ல. அந்தச் சமயத்தில் எல்லாரும் ஒருவர் இன்னொருவருக்கு செய்த தவறுகளை மன்னித்துவிட வேண்டும். சிறைக் கைதிகளுக்கு முக்கிய நாட்களில் மன்னிப்புக் கொடுத்து விடுவிக்கும் வழக்கம் அப்போதிலிருந்து வந்ததுதான்” என்றார் மாமா.
“மன்னிப்போம், ஆனால் மறக்கமாட்டோம்” என்றது வாலு.
“அதை காலம் பார்த்துக்கொள்ளும்” என்றார் மாமா.
வாலுபீடியா 1: பெண்பாலைக் குறிக்க நாம் பயன்படுத்தும் இந்தச் சின்னம், செம்பு என்கிற உலோகத்துக்கும் சின்னமாகும். கிரேக்க புராணத்தில் வீனஸ் தேவதைக்கும் (கிரகத்துக்கும்) இதுவே சின்னம்.
வாலுபீடியா 2: ஜூப்ளி என்பது வருடக்கணக்கில் மட்டுமே கொண்டாடப்படுவது. இப்போது வாரம், நாள், ஷோவுக்கெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். 25 வருடம் வெள்ளி விழா, 50 வருடம் பொன் விழா, 75 வருடம் வைர விழா, 100 வருடம் பிளாட்டினம் விழா. நடுவே 40 வருடத்துக்கு ரூபி விழா. சிலர் 60க்கு வைர விழா என்றும் 75க்கு பிளாட்டினம் விழா என்றும் கொண்டாடுவது உண்டு. எப்போ வேணும்னாலும் ஒரு விழா எடுத்தால் அதை, தகர விழான்னு சொல்லிக்கலாம்கறது என் யோசனை.
