PUBLISHED ON : ஜூலை 04, 2016

நிலப்பரப்பில் ஒரு சிறிய துவாரம் வழியாக நீர் கசிவதைப் பார்த்திருப்போம். இந்த இயற்கை அமைப்புகளை 'ஊற்றுகள்' என்கிறோம்.
சில ஊற்றுகள் தரைமட்டத்தில் குமிழ்களாகத் தோன்றும். சில ஊற்றுகள் நீரை மேல்நோக்கிப் பீய்ச்சி அடிக்கும். வருடந்தோறும் வற்றாது நீர் ஊறும் ஊற்றுகளும் உண்டு. அவ்வப்போது நீரை உமிழும் ஊற்றுகளும் இருக்கின்றன.
எந்த வகை ஊற்றாக இருந்தாலும் அவற்றுக்கு, ஆதாரமாக இருப்பது மழைதான். மணற்பரப்பால் உறிஞ்சப்படும் மழைநீர், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேலே சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது. நிலத்தில் இருக்கும் சரிவுகளுக்கு ஏற்ப, இந்த நிலத்தடி நீர், பள்ளத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும்.
சரிவான மேற்பரப்பின் அடிப்பகுதியில் இருக்கும் பாறைகள், தரைக்கு மேல்மட்டத்தில் துருத்திக்கொண்டு இருந்தால், அந்த இடத்தில் ஓர் இடுக்கு ஏற்படும். அடிப்பகுதியில் நகர்ந்துகொண்டிருக்கும் நிலத்தடி நீர், அந்த இடுக்கு வழியாகக் கசிந்து ஊற்றாகப் பெருக்கெடுக்கும்.
மிகச் சிறிய ஊற்றுகள்தான், பல பெரிய ஜீவநதிகள் உற்பத்தியாகும் தொடக்கப் புள்ளிகளாக இருக்கின்றன. தென்னகத்தின் பிரமாண்டமான நதி காவிரி. இது கர்நாடகாவின் தலைக்காவிரியில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்றின் அடிவாரத்தில் இருக்கும் ஊற்றில் இருந்து தொடங்குகிறது. இந்த இடத்தை ஓர் ஆடு கூடத் தாண்டிவிடும் என்பார்கள். இத்தகைய சிறிய ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர், பிற ஊற்றுகளின் நீரோடு ஒன்று சேர்ந்து பிரவாகமெடுத்து, அருவியாக விழுந்து, ஆறாக மாறி, வயல்வெளிகளில் பாய்ந்து கடலில் சங்கமிக்கிறது.
