தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செடி அல்ல, மரம்! - இது 'டீ'யின் கதை

செடி அல்ல, மரம்! - இது 'டீ'யின் கதை

செடி அல்ல, மரம்! - இது 'டீ'யின் கதை


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று, இந்தியாவில் 100க்கு 83 வீடுகளில் தேநீர் மிகவும் பிரபலம்! தண்ணீருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மலிவான பானம் தேநீர்தான் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தேநீர் அருந்தும் பழக்கத்துக்கு முதலில் அடிமையானவர்கள் சீனர்கள்தான். சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே, தேநீர் அருந்தும் பழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் கிழக்கிந்தியப் பகுதிகளில் வாணிபம் செய்யத் தொடங்கியபோது, அவர்களுக்குச் சீனத் தேயிலை பற்றித் தெரியவந்தது. அவர்கள் மூலமாக உலகின் பிற பகுதிகளுக்குத் தேநீர் அறிமுகமானது.

அந்தக் காலத்தில் சீனாவில் மட்டுமே தேயிலை விளைந்து வந்தது. ஐரோப்பியர்கள், சீனத் தேயிலைக்காக நிறைய செலவழித்தார்கள்.

ஆங்கிலேயர்கள் நிலையோ இன்னும் மோசம். தங்கள் நாட்டுக் கருவூலத்தின் பெரும்பகுதியைச் சீனத் தேயிலையைக் கொள்முதல் செய்வதில் இழந்தார்கள். இனி தேயிலைக்காக சீனாவை மட்டுமே நம்பி இருந்தால் கட்டுப்படி ஆகாது என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், இந்தியா உட்பட பல்வேறு காலனிய நாடுகளில் தேயிலை பயிரிட முடியுமா என்று ஆராய்ச்சி செய்தார்கள். ராபர்ட் புரூஸ் என்ற ராணுவ அதிகாரி, 1823ஆம் ஆண்டில் எதேச்சையாக ஒன்றைக் கண்டுபிடித்தார். அஸாம் பகுதியில் தேயிலை இருப்பதை அவர் கண்டதுதான் அந்த மாபெரும் கண்டுபிடிப்பு. அவ்வளவுதான்! ஆங்கிலேய அரசு இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரை பல்வேறு பகுதிகளில், மலைக் காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்களை ஏற்படுத்தியது.

சீனத் தேயிலையின் தாவரவியல் பெயர் 'காமிலியா சினெசிஸ்'. இதன் இலைகள் சற்று சிறிதாக இருக்கும். அஸாம் தேயிலையின் இலைகள் சற்று பெரிதாக இருக்கும். இதன் தாவரவியல் பெயர் 'காமிலியா ஆஸாமிக்கா'.

தேயிலை கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் இருக்கும் பகுதிகளில் வளரக்கூடியது. பொதுவாகத் தேயிலையை நாம் செடி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் தேயிலை ஒரு மரம். ஒரு தேயிலைச் செடியை இயல்பாக வளரவிட்டால் ஒரு பனை மரத்தின் உயரத்துக்குமேல் வளரும். தோட்டங்களில் பயிரிடும் முறையில், பறிப்பதற்கு ஏதுவாக இடுப்பளவு உயரத்துக்குக் கிளைகள் கத்தரித்துவிடப்படுவதால், நமக்குச் செடி போலத் தோற்றமளிக்கிறது.

சீனாவின் யுன்னான் மாகாணக் காடுகளில் 30 மீட்டர் உயரத்துக்கு மேல் வளர்ந்த தேயிலை மரங்கள் நிறைய இருக்கின்றன. டா ஹீய் ஷான்

(Da Hei Shan) என்ற காட்டில், 32 மீட்டர் உயரத்தில், 1 மீட்டர் சுற்றளவிலான அடிப்பகுதி கொண்ட ஒரு மரம் இருந்தது. தாவரவியல் அறிஞர்கள் 'தேயிலை மரங்களின் அரசன்' (King of Tea Trees) என்று இந்த மரத்துக்குப் பெயரிட்டு இருந்தார்கள். பேரதிசயம் என்வென்றால், இந்த மரம் 1,800 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரோடு இருந்துவந்ததுதான். 'உலகிலேயே மிகவும் வயதான தேயிலை மரம்' என்ற புகழ், இதற்குக் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதிவரை இருந்தது. கரையான் தாக்கி மிகவும் வலு இழந்த நிலையில் இருந்த அந்த மரம், அன்றைய தினத்தில் அடித்த புயலைத் தாக்குப்

பிடிக்க முடியாமல் சரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us