PUBLISHED ON : மார் 14, 2016

நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் முதல் இடம் விளையாட்டுக்குத்தான். நமக்குப் பிடித்த விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் பொருட்களை நாமே செய்து விளையாடினால் இரு மடங்கு மகிழ்ச்சி. கோலி குண்டு ஒன்றை, ஒரு புதிர்வழி பாதை வழியாக பயணம் செய்ய வைக்க வேண்டும். பாதையில் பல குறுக்குச் சுவர்கள் வழி மறிக்கும். அவற்றைத் தாண்டி, இலக்கை அடைய வேண்டும். இந்த விளையாட்டு தான் மார்பிள் மேஸ் (Marble Maze).
தேவையான பொருட்கள்: புதுத்துணி வைத்துத் தரப்படும் அட்டைப் பெட்டி 1, கிப்ட் ரேப்பிங் பேப்பர். கத்தரிக்கோல், பிளாஸ்டிக் ஸ்ட்ரா 8--10, சார்ட் அட்டை, பசை மற்றும் கோலிக்குண்டு.
இப்போது மார்பிள் மேஸ் விளையாட்டுக்குத் தேவையான சட்டத்தைச் செய்யப் போகிறோம். சுலபமாகக் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்யப் போகிறோம்.
அட்டைப் பெட்டியில் கோலிக்குண்டு நுழையும் அளவுக்கு சிறிய ஓட்டை போட வேண்டும்.
பெட்டியின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் வகையில் கிஃப்ட் பேப்பரைச் சுற்றி ஒட்டவும்.
அட்டைப் பெட்டியின் உள்ளே பொருந்தும் அளவுக்கு, சார்ட் பேப்பரை வெட்டிக்கொள்ளவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்த வகையில் மேஸ் கிரிட் (Maze Grid) ஒன்றை வரைந்துகொள்ளவும். ஸ்ட்ராவை வெட்டிக் கிரிட்- டின் கோடுகள் மீது ஒட்டவும்.
மேஸ் சார்ட்டை அட்டைப் பெட்டியில் உள்ளே பொருத்தி ஒட்டிவிடுங்கள்.
இனி கோலி குண்டை உள்ளே போட்டு, உருட்டி விளையாட வேண்டியதுதான் பாக்கி...
