PUBLISHED ON : ஜன 18, 2016

வீட்டுக்குள்ளே ராக்கெட் விடலாம் வாங்க!
நம் இந்திய விஞ்ஞானிகள் ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பது தெரியும்.
ராக்கெட் எப்படி விண்ணை நோக்கிச் செல்கிறது?
* எரிபொருள் எரிந்து காற்றைக் கீழ்நோக்கி அதிவேகமாக உந்துவதால் ராக்கெட் மேலே செல்கிறது.
* பலூனில் காற்று வெளியேறும்போது அந்த காற்றின் எதிர்த் திசையில் பலூன் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்.
* சரி, பலூனைக் கொண்டு நாம் ராக்கெட் விட்டுப் பார்ப்போமோ?
என்னென்ன தேவை
* பலூன் - 1 (நீளவாக்கிலான பலூனாக இருந்தால் நல்லது)
* சற்று கனமான நூல் - 2 மீட்டர் (பட்டம் விடும் நூல் போல)
* பிளாஸ்டிக் ஸ்ட்ரா - 1
* ஒட்டுகிற பசை நாடா (செலோஃபேன் டேப் Cellophane Tap)
01. நூலை எடுத்து ஒரு முனையை நாற்காலியில் கட்டுங்கள். மற்றொரு முனையின் வழியாக ஸ்ட்ராவை உள்ளே நுழைத்து ஜன்னலில் கட்டி விடுங்கள்.
02. பலூனை ஊதி, அதன் முனையைக் கையால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.
03. ஊதிய பலூனை நூலில் உள்ள ஸ்ட்ராவில் ஒட்டும் பசை நாடாவை வைத்து ஒட்டுங்கள்.
04. பலூன் ஸ்ட்ராவுடன் ஒட்டியிருக்கும். அதை அப்படியே நகர்த்தி நூலின் ஒரு
முனைக்குக் கொண்டு செல்லுங்கள்.
05. பின்னர் மெல்ல பலூனிலிருந்து கையை எடுங்கள்.
இப்போது நூலின் மறுமுனைக்கு பலூன் வேகமாகச் செல்வதைப் பார்க்கலாம்.
