PUBLISHED ON : ஜன 13, 2020

சோழ மன்னன் இராஜேந்திரன் மகன்களில் ஒருவர் வீரராஜேந்திர சோழன். இவரது காலம் கி.பி. 1063 - 1070 வரை. இவரது ஐந்தாம் ஆண்டு ஆட்சிக்காலத்திய கல்வெட்டு, காஞ்சிபுரம் திருமுக்கூடல் என்னும் ஊரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் உள்ளது.
கோவிலில் 'வீரசோழன் மருத்துவமனை' செயற்பட்டதையும், மருத்துவ ஊழியர்களுக்கு நெல் ஊதியமாக வழங்கப்பட்டதையும் அக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை செய்பவர், மருந்து சேகரிப்பவர், பெண் செவிலியர்கள், நாவிதர், உதவியாளர்கள் அனைவருக்கும் நெல், காசுகள் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளன.
பொது மருத்துவராகிய கோதண்டராம அசுவதாம பட்டருக்கு, நாள் ஒன்றுக்கு மூன்று குறுணி நெல், கொடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு ஒரு குறுணி நெல்லும், உதவியாளர், செவிலியருக்கு தலா ஒரு குறுணி நெல்லும் வழங்கப்பட்டதாகச் செய்தி உள்ளது. இதேபோல் நாவிதர், நீர்கொண்டு வருபவருக்கு ஆண்டுக்கு 15 கலம் நெல் கொடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சோறாக்க அரிசி வழங்கப்பட்ட தகவலும் உள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கி.பி. 1257ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் (ஆதுலர் சாலை) அங்கு மருத்துவமனை இயங்கியது பற்றிய குறிப்பு உள்ளது. அம்மருத்துவமனையை நிறுவியவர்கள் ஹொய்சாள மன்னர்கள். 1493ஆம் ஆண்டைச் சேர்ந்த அக்கோவிலின் மற்றொரு கல்வெட்டில், 'முன்னாள் பிரதாப சக்ரவர்த்தி காலம் துடங்கி இவருடைய பூர்வாள் கருட வாகன பட்டர் நடத்தி வந்த ஆரோக்கிய சாலை' என்ற வரிகள் உள்ளன.
இங்கும் ஊழியர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப நாள் ஒன்றுக்கு 5 குறுணி, 3 குறுணி நெல் வீதம் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல் உள்ளது.

